சுடச்சுட

  

  கொழும்பு, செப்.20: இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3-வது லீக் ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா.

  இந்தியாவின் யுவராஜ் சிங், முக்கியமான கட்டத்தில் ஆப்கானிஸ்தானின் 3 முன்னணி பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் 19.3 ஓவர்களில் 136 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

  தடுமாற்றம்: இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான், இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. கம்பீர் 10 ரன்களிலும், சேவாக் 8 ரன்களிலும் அடுத்தடுத்து வீழ்ந்தனர். யுவராஜ் சிங் சிக்ஸர் அடித்து தனது ஆட்டத்தைத் தொடங்கினார்.

  மறுமுனையில் விராட் கோலியும் வேகமாக விளையாட இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 6 ஓவர்களில் 46 ரன்கள் சேர்த்தது. 20 பந்துகளைச் சந்தித்த யுவராஜ் 1 சிக்ஸருடன் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ரெய்னா களம் புகுந்தார்.

  கோலி அரைசதம்: கரீம் வீசிய 13-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கோலி, 3-வது பந்தை தூக்கியடித்தார். ஆனால் எல்லையில் நின்ற சமியுல்லாவின் கைக்கு பந்து சென்றது. அவர் கேட்ச் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதைக் கோட்டைவிட்டதோடு, சிக்ஸருக்கும் தட்டிவிட்டார். இதனால் வாழ்வு பெற்ற கோலி, 38 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார். ஆனால் அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார்.

  இதையடுத்து கேப்டன் தோனி களம் புகுந்தார். தொடர்ந்து பவுண்டரிகளை விரட்டிய ரெய்னா, கடைசி ஓவரின் 2-வது பந்தில் முகமது நபி பந்துவீச்சில் போல்டு ஆனார். 33 பந்துகளைச் சந்தித்த அவர் 6 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் கடைசிப் பந்தில் தோனி சிக்ஸர் அடிக்க 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது இந்தியா. தோனி 9 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 18 ரன்களும், ரோஹித் சர்மா ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

  ஆப்கானிஸ்தான் தரப்பில் ஷாபூர் ஜட்ரான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  ஆப்கானிஸ்தான் தோல்வி: பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தானில் முகமது ஷாஸத், நவ்ரோஸ் மங்கல் ஜோடி இந்தியாவின் வேகப்பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டது.

  ஜாகீர்கான் வீசிய 3-வது ஓவரை பதம்பார்த்தார் முகமது ஷாஸத். இதனால் அந்த ஓவரில் 13 ரன்கள் எடுக்கப்பட்டன.  16 பந்துகளைச் சந்தித்த ஷாஸத் 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து கரீம் சாதிக் களமிறங்கினார். இவர்கள் இருவரும் சற்று வேகமாக ஆடவே அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்தது. பாலாஜி வீசிய 6-வது ஓவரில் நவ்ரோஸ் மங்கல் சிக்ஸரை விளாசினார்.

  யுவராஜ் அசத்தல்: இதையடுத்து 8-வது ஓவரை வீச யுவராஜ் சிங்கை அழைத்தார் தோனி. அதற்குப் பலனும் கிடைத்தது. அந்த ஓவரின் முதல் பந்திலேயே நவ்ரோஸ் மங்கல் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். 18 பந்துகளைச் சந்தித்த அவர் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 22 ரன்கள் எடுத்தார்.

  12-வது ஓவரை வீசிய யுவராஜ் சிங், 2-வது பந்தில் கரீம் சாதிக்கையும் (26 ரன்கள்), 3-வது பந்தில் ஆஸ்கர் ஸ்டானிக்ஸôயையும் (6 ரன்கள்) வீழ்த்தினார். இதன்பிறகு ஆப்கானிஸ்தானின் சரிவு தவிர்க்க முடியாததானது.

  பின்னர் வந்தவர்களில் முகமது நபி 17 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறியதால் 19.3 ஓவர்களில் 136 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆப்கானிஸ்தான்.இந்தியத் தரப்பில் யுவராஜ் சிங், பாலாஜி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், வீழ்த்தினர். கோலி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai