சுடச்சுட

  

  சேவாக்கின் வயதுக்கும், ஆட்டத்துக்கும் தொடர்பில்லை: ஜயசூர்யா

  Published on : 26th September 2012 12:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  20spt3

  கொழும்பு, செப்.20: சேவாக்கின் வயதுக்கும், ஆட்டத்திறனுக்கும் தொடர்பில்லை என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஜயசூர்யா கூறியுள்ளார்.

  கடந்த சில ஆட்டங்களில் சேவாக் மோசமாக விளையாடி வரும் நிலையில், அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் சேவாக்கிற்கு ஆதரவு சேர்க்கும் வகையில் ஜயசூர்யா கருத்துத் தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறியிருப்பது:  

  இந்தியா வெற்றிகளைக் குவிக்க சேவாக்கைப் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் தேவை. சில ஆட்டங்களில் சரியாக விளையாடாததற்காக மேட்ச் வின்னரான சேவாக்கை ஏன் விமர்சிக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள கடினமாக உள்ளது. அவர் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வீரர்.  

  அவர் எல்லா ஆட்டங்களிலும் 80 ரன்களையோ, 100 ரன்களையோ எடுக்க முடியாது. இருப்பினும் அவர் குறைந்தபட்சம் 70 ரன்களை எடுக்கும்போது இந்தியா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றார்.

  சேவாக் அடுத்த சில வாரங்களில் 34 வயதை எட்டவுள்ள நிலையில், ஆட்டத்திறனோடு, வயதை ஒப்பிடுவதை ஏற்க மறுத்த ஜயசூர்யா, "எப்போதுமே ஒரு வீரர் சில ஆட்டங்களில் சரியாக விளையாடவில்லை என்றவுடன் வயதாகிவிட்டது என்று காரணம் கூறுகிறார்கள். அவர்கள் ஏன் அப்படி கூறுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை' என்றார்.

  மகேந்திர சிங் தோனியின் கேப்டன்ஷிப் குறித்துப் பேசிய அவர், "கேப்டன் பதவி என்றாலே எப்போதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். தோனியின் கேப்டன்ஷிப் குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன.

  எல்லோரும் தவறு செய்யும்போது அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். எனவே தோனி, விமர்சனங்களை எதிர்கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். எங்கு தவறு நடந்தது என்பதை சரியாக தெரிந்துகொண்டால், நம்மை மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்' என்றார்.

  இந்திய அணியின் பந்துவீச்சு குறித்துப் பேசிய அவர், "ஒரு பெüலர் ரன் கொடுத்தால், மற்ற பெüலர்கள் தொடர்ச்சியாக ரன்களை வாரி வழங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்திய அணிக்கு கூடுதல் பெüலர் தேவையா என்பது எனக்குத் தெரியவில்லை.

  எல்லா பெüலர்களும் ரன்களைக் கொடுத்தால்தான் பிரச்னை. அப்போதுதான் கூடுதல் பெüலர் தேவை. இந்திய அணி 180 ரன்களுக்கு மேல் குவிக்கக்கூடிய வலுவான அணி' என்றார்.

  ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் 8 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை சாதனை படைத்த அஜந்தா மெண்டிஸ் பந்துவீச்சு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஜயசூர்யா, "கடந்த சில சீசன்களில் காயம் காரணமாக அவரின் பந்துவீச்சு பாதிப்புக்குள்ளானது.

  இலங்கை வெற்றிகளைக் குவிக்க அவர் நீண்ட நாள்கள் விளையாட வேண்டும்' என்றார்.

  இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் இருபது ஓவர் உலகக் கோப்பையில் இலங்கைக்கு அதிக வெற்றி வாய்ப்புள்ளதாக தெரிவித்த அவர், "உள்ளூரில் போட்டி நடைபெறுவதால் மட்டுமல்ல, ஒருங்கிணைந்து விளையாடும் பலம் வாய்ந்த அணியைப் பெற்றிருப்பதால் இலங்கை அணி கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai