சுடச்சுட

  
  spt1

  பல்லகெலே, செப்.21: இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5-வது லீக் ஆட்டத்தில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது நியூஸிலாந்து.

  நியூஸிலாந்தின் பிரென்டன் மெக்கல்லம் 58 பந்துகளில் 7 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 123 ரன்கள் குவித்தார்.

  இலங்கையின் பல்லகெலேவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய வங்கதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.

  முன்னதாக டாஸ் வென்ற வங்கதேசம் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து அணியில் மார்ட்டின் கப்டிலும், ஜேம்ஸ் பிராங்க்ளினும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 14 பந்துகளைச் சந்தித்த கப்டில் ஒரு சிக்ஸருடன் 11 ரன்கள் எடுத்து 4-வது ஓவரில் ஆட்டமிழக்க, பிரென்டன் மெக்கல்லம் களம் புகுந்தார்.

  தொடக்க ஜோடி நிதானமாக ஆடியதால் முதல் 5 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 29 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

  மெக்கல்லம் விளாசல்

  இதன்பிறகு மெக்கல்லம் அதிரடியில் இறங்கினார். அவர் சிக்ஸரையும், பவுண்டரிகளையும் விளாச 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் சேர்த்தது நியூஸிலாந்து. இதனிடையே ரஹ்மான் வீசிய 13-வது ஓவரில் பவுண்டரி அடித்து அரைசதம் கண்டார் மெக்கல்லம். 29 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் அவர் அரைசதம் கண்டார். மோர்ட்டஸô வீசிய 15-வது ஓவரின் முதல் பந்தில் பிராங்க்ளின் ஆட்டமிழந்தார். 36 பந்துகளைச் சந்தித்த அவர் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்தார். பிராங்க்ளின்-மெக்கல்லம் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தது.

  இதையடுத்து கேப்டன் ராஸ் டெய்லர் களம் புகுந்தார். அதே ஓவரில் மெக்கல்லம் ஒரு சிக்ஸரை விளாச 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் சேர்த்தது நியூஸிலாந்து.

  ஷபியுல் இஸ்லாம் வீசிய 17-வது ஓவரில் ஒரு சிக்ஸரையும், 2 பவுண்டரிகளையும் விளாசிய மெக்கல்லம், ஷகிப் அல்ஹசன் வீசிய அடுத்த ஓவரில் 3 பவுண்டரிகளை அடித்தார்.

  எலியாஸ் சன்னி வீசிய 19-வது ஓவரில் மோர்ட்டஸôவால் (கேட்ச் கோட்டைவிட்டார்) வாழ்வுபெற்ற மெக்கல்லம், அதே ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விரட்டி சதம் கண்டார். 51 பந்துகளில் 4 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் அவர் சதமடித்தார்.

  சதமடித்த வேகத்தில் அடுத்த பந்தில் ஒரு சிக்ஸரை விளாசினார் மெக்கல்லம். அப்துர் ரசாக் வீசிய கடைசி ஓவரில் மேலும் இரு சிக்ஸர்களை விளாசிய மெக்கல்லம், கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் நியூஸிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. டெய்லர் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

  இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் நியூஸிலாந்து 68 ரன்கள் குவித்தது. வங்கதேசம் தரப்பில் அப்துர் ரசாக் 2 விக்கெட் வீழ்த்தினார்.

  அதிர்ச்சி தொடக்கம்

  பின்னர் ஆடிய வங்கதேச அணி ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே விக்கெட்டை இழந்தது. கெய்ல் மில்ஸ் வீசிய முதல் ஓவரின் 3-வது பந்தில் தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் டக் அவுட்டானார்.

  இதையடுத்து ஷகிப் அல்ஹசன் 11, கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் 4 ரன்களில் வெளியேறினர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் முகமது அஷ்ரபுல் 21 ரன்களில் வீழ்ந்தார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த மகமதுல்லாவும், நாசிர் ஹுசைனும் அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினர்.

  இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது. 19 பந்துகளைச் சந்தித்த மகமதுல்லா ஒரு சிக்ஸருடன் 15 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். தனி நபராகப் போராடிய நாசிர் ஹுசைன் 39 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

  பின்னர் வந்த மோர்ட்டஸô, எலியாஸ் சன்னி ஆகியோர் தலா 5 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.

  நியூஸிலாந்து தரப்பில் கெய்ல் மில்ஸ், டிம் செüதி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பிரென்டன் மெக்கல்லம் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

  சாதனை சதம்

  இந்த ஆட்டத்தில் சதமடித்ததன் மூலம் சர்வதேச அளவிலான இருபது ஓவர் போட்டிகளில் இரு சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றார் மெக்கல்லம்.

  முன்னதாக 2010-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இருபது ஓவர் ஆட்டத்தில் அவர் சதமடித்தார். அதில் 116 ரன்கள் எடுத்தார். வங்கதேசத்துக்கு எதிராக 123 ரன்கள் குவித்ததன் மூலம் உலகக் கோப்பை மற்றும் சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன் அடித்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

  முன்னதாக மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில், தென் ஆப்பிரிக்காவின் ரிச்சர்ட் லெவி அடித்த 117 ரன்களே ஓர் இன்னிங்ஸில் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்னாக இருந்தது. கிறிஸ் கெயில் 2007-ல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்கா எதிராகவும், ரிச்சர்ட் லெவி, கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்திலும் மேற்கண்ட ரன்னை எடுத்துள்ளனர்.

  உலகக் கோப்பையில் சதமடித்த 4-வது வீரர் என்ற பெருமையையும் மெக்கல்லம் பெற்றுள்ளார். இதுவரை 48 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 1,443 ரன்கள் குவித்துள்ளார்.

  சுருக்கமான ஸ்கோர்

  நியூஸிலாந்து-191/3

  (மெக்கல்லம் 123,

  பிராங்க்ளின் 35,

  அப்துர் ரசாக் 2வி/28)

  வங்கதேசம்-132/8

  (நாசிர் ஹுசைன் 50,

  அஷ்ரபுல் 21,

  டிம் செüதி 3வி/16,

  கெய்ல் மில்ஸ் 3வி/33)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai