சுடச்சுட

    
    spt4

    கொழும்பு, செப்.22: இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-வது லீக் ஆட்டத்தில் இந்தியாவும், நடப்புச் சாம்பியன் இங்கிலாந்தும் மோதுகின்றன.

    இந்த ஆட்டம் இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இரு அணிகளும் ஏற்கெனவே "சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறிவிட்டதால், இந்த ஆட்டத்தில் வென்றாலும், தோற்றாலும் பாதிப்பு ஏதும் கிடையாது. ஆனாலும் இரு அணிகளும் தங்களின் வலுவை சோதித்துப் பார்க்க விரும்பும் என்பதால் இந்த ஆட்டத்தில் வெற்றிபெற கடுமையாகப் போராடும். இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை போராடியே வென்றது. ஆனால் இங்கிலாந்து அணியோ 116 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது.

    சேவாக் தடுமாற்றம்: இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சேவாக், கம்பீர் இருவரும் ரன் குவிக்க தடுமாறி வருகின்றனர். சமீபத்திய போட்டிகளில் ஒன்றில்கூட அவர்கள் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள அவர்கள் இருவரும், சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    தொடக்க வீரர்கள் சரியாக விளையாடாதது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. விராட் கோலி, ரெய்னா, ரோஹித் சர்மா ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். விராட் கோலியின் அதிரடி இந்த ஆட்டத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    யுவராஜ் சிங் இன்னும் சில ஆட்டங்களில் விளையாடும்பட்சத்தில் மீண்டும் பார்முக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2007 உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் தற்போதைய கேப்டன் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் யுவராஜ் சிங் தொடர்ந்து 6 சிக்ஸர்களை விளாசியதை யாரும் மறந்திருக்க முடியாது. அதனால் இந்த ஆட்டத்தில் அவர் மீதான எதிர்பார்ப்பு சற்றே அதிகமாக உள்ளது.

    யுவராஜ், ரெய்னாவுக்கு உடல்நலக் குறைவு: யுவராஜ் சிங், ரெய்னா ஆகியோருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.  இருப்பினும் இங்கிலாந்துக்கு எதிராக இவர்கள் இருவரும் விளையாட அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஒருவேளை இவர்கள் இருவரில் ஒருவர் விளையாடாமல் போனால், மனோஜ் திவாரிக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    கேப்டன் தோனி முன்வரிசையில் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. சேவாக்-கம்பீர் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் பட்சத்தில் மிடில் ஆர்டரில் களமிறங்கும் கோலி, ரோஹித் சர்மா, ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோர் எவ்வித நெருக்கடியுமின்றி சிறப்பாக விளையாடி ரன் குவிக்கமுடியும்.

    கவலையளிக்கும் பந்துவீச்சு: இந்தியா பலமான பேட்டிங்கை பெற்றிருந்தாலும், பந்துவீச்சோ அதற்கு எதிர்மாறாக உள்ளது. ஜாகீர்கானின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. இர்ஃபான் பதான், எல்.பாலாஜி ஆகியோர் ஓரிரு விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், அதிக அளவில் ரன்களைக் கொடுத்து வருவது கவலையளிப்பதாக உள்ளது.

     கொழும்பு மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கும் என்று தெரிகிறது.

    வேகப்பந்து வீச்சாளர்கள் கை கொடுக்காத நிலையில், சுழற்பந்து வீச்சாளர்களை மட்டுமே நம்பியுள்ளது இந்திய அணி. எதிர்பார்த்ததைவிட சிறப்பாக பந்துவீச வேண்டிய நிலையில் பகுதி நேர பந்துவீச்சாளர்கள் உள்ளனர். சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மட்டுமே சிறப்பாக பந்துவீசி வருகிறார். இந்த ஆட்டத்தில் கூடுதல் பெüலராக மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கை, தோனி களமிறக்கலாம் என்று தெரிகிறது.

    மிரட்டும் லுக் ரைட்: இங்கிலாந்தைப் பொறுத்தவரையில், முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அபார வெற்றி பெற்றிருப்பதால் மிகுந்த உற்சாகத்தோடு இந்த ஆட்டத்தை எதிர்கொள்ளும். அந்த அணியில் லுக் ரைட் அபரிமிதமான பார்மில் உள்ளார்.

    ஆப்கானிஸ்தானுக்கு எதிராக லுக் ரைட் 55 பந்துகளில் 6 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. அவரின் அதிரடி இந்தியாவுக்கு எதிராகவும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கெவின் பீட்டர்சன் இல்லாத நிலையில், அந்த குறையைப் போக்கும் வகையில் விளையாடி வரும் லுக் ரைட், பெüலிங்கிலும் பலம் சேர்க்கிறார். இதேபோல் அலெக்ஸ் ஹேல்ஸ், கீஸ்வெட்டர், ஜோஸ் பட்லர், ஜொனாதன் பேர்ஸ்டோவ் ஆகியோர் இங்கிலாந்துக்கு பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர்.

    வேகப்பந்து வீச்சில் கேப்டன் ஸ்டூவர்ட் பிராட், ஸ்டீவன் ஃபின், ஜேட் டெர்ன்பார்ச் ஆகியோர் வலு சேர்க்கின்றனர். சுழற்பந்துவீச்சை கிரீம் ஸ்வான், சமித் படேல் ஆகியோர் கவனிக்கின்றனர். இரு அணிகளுமே பலம் வாய்ந்தவை என்பதால் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

    இன்றைய ஆட்டங்கள்

    நியூஸிலாந்து-பாகிஸ்தான்

    இடம்: பல்லகெலே

    நேரம்: பிற்பகல் 3.30

    இந்தியா-இங்கிலாந்து

    இடம்: கொழும்பு

    நேரம்: இரவு 7.30

    நேரடி ஒளிபரப்பு:

    ஸ்டார் கிரிக்கெட்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai