சுடச்சுட

  
  spt6

  கொழும்பு, செப்.22:  இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 8-வது லீக் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் முறையில் 17 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.

  ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தியிருந்த ஆஸ்திரேலியா, இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த சுற்றான "சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறியது.  முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் கிறிஸ் கெயில், சாமுவேல்ஸ் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது.

  பின்னர் ஆஸ்திரேலியா 9.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது. அதன்படி வெற்றிக்கான இலக்கு 9.1 ஓவர்களில் 83 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா 100 ரன்கள் எடுத்திருந்ததால் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

  கெயில் விளாசல்: கொழும்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியில் டுவைன் ஸ்மித் 2 ரன்களில் ஆட்டமிழக்க, கிறிஸ் கெயிலுடன் இணைந்தார் சார்லஸ். ஸ்டார்க் வீசிய 4-வது ஓவரில் சார்லஸ் ஒரு பவுண்டரியையும், ஒரு சிக்ஸரையும் விரட்டினார்.

  பட் கம்மின்ஸ் வீசிய அடுத்த ஓவரை எதிர்கொண்ட கிறிஸ் கெயில், 3 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விரட்ட, 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 43 ரன்களை எட்டியது மேற்கிந்தியத் தீவுகள். அடுத்த ஓவரில் சார்லஸ் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சாமுவேல்ஸ் களமிறங்கினார்.

  தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கெயில், கிளென் மாக்ஸ்வெல் வீசிய 8-வது ஓவரில் 2 சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாசி 26 பந்துகளில் அரைசதம் கண்டார். வாட்சன் வீசிய 11-வது ஓவரின் முதல் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கெயில்.  அவர் 33 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்தார்.

  இதையடுத்து டுவைன் பிராவோ களம் கண்டார். இதன்பிறகு சாமுவேல்ஸ் அதிரடியில் இறங்கினார். பிராட் ஹாக் வீசிய 14-வது ஓவரில் ஒரு பவுண்டரியையும், ஒரு சிக்ஸரையும் விளாசிய சாமுவேல்ஸ், வாட்சன் வீசிய 15-வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசினார். அடுத்த ஓவரில் அரைசதம் கண்ட சாமுவேல்ஸ், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அவர் 32 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தார்.

  இதன்பிறகு வந்த வேகத்திலேயே பவுண்டரியை அடித்த போலார்ட், மேலும் ஒரு பவுண்டரியை விளாசி 10 ரன்களில் வீழ்ந்தார். 21 பந்துகளைச் சந்தித்த பிராவோ ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்தார். கேப்டன் டேரன் சமி 12 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது.

  ஆஸ்திரேலியத் தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், வாட்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

  ஆஸ்திரேலியா பதிலடி: இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன்-வார்னர் ஜோடி அதிரடி தொடக்கத்தை ஏற்படுத்தியது. ராம்பால் வீசிய 2-வது ஓவரை எதிர்கொண்ட வார்னர் 2 சிக்ஸர்களையும், 2 பவுண்டரிகளையும் விளாச, 2 ஓவர்களின் முடிவில் 30 ரன்களை எட்டியது ஆஸ்திரேலியா. ஆனால் அடுத்த ஓவரில் அவர் ஆட்டமிழந்தார். 14 பந்துகளைச் சந்தித்த வார்னர் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்தார். இதையடுத்து மைக் ஹசி களம் புகுந்தார். இவர்கள் இருவரும் அதிரடியாக விளையாட 7 ஓவர்களில் 69 ரன்களை எட்டியது ஆஸ்திரேலியா.

  சாமுவேல்ஸ் வீசிய 8-வது ஓவரை எதிர்கொண்ட வாட்சன், 3-வது பந்தில் பவுண்டரியையும், 4-வது பந்தில் சிக்ஸரையும் அடித்தார். 5-வது பந்தையும் தூக்கியடித்தார். எல்லையில் நின்ற டுவைன் ஸ்மித், கேட்ச்சை கோட்டைவிட அது சிக்ஸரானது. அடுத்த பந்திலும் அவர் பவுண்டரி அடித்தார். 9.1 ஓவர்களில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்புக்கு 100 ரன்களை எடுத்திருந்தபோது மழை குறுக்கிடவே வெற்றி ஆஸ்திரேலியாவின் வசமானது.

  அப்போது வாட்சன் 24 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 41 ரன்களும், மைக் ஹசி 19 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியாவுடன் தோற்றதால், திங்கள்கிழமை நடைபெறும் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே மேற்கிந்தியத் தீவுகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.

  சுருக்கமான ஸ்கோர்

  மேற்கிந்தியத் தீவுகள் - 191/8 (கெயில் 54, சாமுவேல்ஸ் 50, ஸ்டார்க் 3வி/35)

  ஆஸ்திரேலியா - 100/1 (வாட்சன் 41*, வார்னர் 28, மைக் ஹசி 28*,

  எட்வர்ட்ஸ் 1வி/16)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai