சுடச்சுட

    
    spt1

    அம்பணத்தோட்டம், செப்.22: இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-வது லீக் ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா.

    இலங்கையின் அம்பணத்தோட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டம், மழை காரணமாக 7 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 7 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி 7 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.

    முன்னதாக டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனா பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் ரிச்சர்ட் லெவி 4 ரன்களிலும், ஆம்லா 9 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து கேப்டன் டிவில்லியர்ஸýம், டூ பிளெஸ்ஸிஸýம் ஜோடி சேர்ந்தனர்.

    ரங்கனா ஹெராத் வீசிய 5-வது ஓவரில் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாசிய டிவில்லியர்ஸ், மலிங்கா வீசிய 6-வது ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்ததோடு, அந்த ஓவரை பதம்பார்த்தார். ஆனால் அதே ஓவரின் கடைசிப் பந்தில் அவர் ஆட்டமிழந்தார். 13 பந்துகளைச் சந்தித்த அவர் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 30 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து டுமினி களம் புகுந்தார். பெரெரா வீசிய கடைசி ஓவரின் 4-வது பந்தில் டூபிளெஸ்ஸில் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரின் 5-வது பந்தில் பவுண்டரி அடித்த டுமினி, கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்தார். இதனால் 7 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்தது தென் ஆப்பிரிக்கா.

    டுமினி 5 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கைத் தரப்பில் மலிங்கா 2 ஓவர்களில் 27 ரன்களை வாரி வழங்கினார்.

    சுருண்டது இலங்கை: பின்னர் பேட் செய்த இலங்கை அணியில் கேப்டன் ஜெயவர்த்தனாவும், தில்ஷானும் களமிறங்கினர். தொடக்கம் முதலே தென் ஆப்பிரிக்க வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசியதால், இலங்கை வீரர்கள் ரன் எடுக்க தடுமாறினர். தில்ஷான் ஒரு பந்தைக்கூட சந்திக்காத நிலையில் ரன் அவுட்டானார்.

    ஸ்டெயின் வீசிய 2-வது ஓவரில் சிக்ஸர் அடிக்க முயற்சித்த ஜெயவர்த்தனா 4 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்தவர்களில் முனவீரா, சங்ககாரா ஆகியோர் தலா 13 ரன்கள் எடுத்தனர். பெரெரா ஒரு ரன்னில் வெளியேறினார். இதனால் 7 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜீவன் மெண்டிஸ் 7, திரிமன்னே 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஸ்டெயின் 2 ஓவர்களில் 10 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். மோர்ன் மோர்கல் 2 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே கொடுத்தார். விக்கெட் எதையும் வீழ்த்தவில்லை. காலிஸ், அல்பி மோர்கல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    டிவில்லியர்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

    ஏற்கெனவே இரு அணிகளும் "சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறிவிட்டதால், இந்த ஆட்டத்தின் முடிவு இரு அணிகளுக்கும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. தென் ஆப்பிரிக்கா தான் விளையாடிய இரு ஆட்டங்களிலும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.



    சுருக்கமான ஸ்கோர்

    தென் ஆப்பிரிக்கா-78/4

    (டிவில்லியர்ஸ் 30,

    ஆம்லா 16,

    குலசேகரா 1வி/9)

    இலங்கை-46/5

    (முனவீரா 13,

    சங்ககாரா 13,

    ஸ்டெயின் 2வி/10)

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai