சுடச்சுட

  
  spt1

  கொழும்பு, செப்.23: இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.

  முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 14.4 ஓவர்களில் 80 ரன்களில் சுருண்டது.  

  ரோஹித் சர்மா 33 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் எடுத்தார்.

  கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் காயம் காரணமாக சேவாக் இடம்பெறவில்லை. அஸ்வின், ஜாகீர்கான் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது. இதனால் அசோக் திண்டா, ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா ஆகியோர் வாய்ப்புப் பெற்றனர்.

  ரோஹித் அதிரடி: டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணியில் சேவாக் இடம்பெறாத நிலையில், கம்பீருடன் இர்ஃபான் பதான் தொடக்க வீரராக களமிறங்கினார். பதான் 8 ரன்களில் ஆட்டமிழக்க, கம்பீருடன் இணைந்தார் விராட் கோலி. இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்தது. 32 பந்துகளைச் சந்தித்த கோலி 6 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

  இதையடுத்து ரோஹித் சர்மா களம் புகுந்தார். இந்திய அணி 119 ரன்களை எட்டியபோது கம்பீர் ஆட்டமிழந்தார். 38 பந்துகளைச் சந்தித்த அவர் 5 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்தார். இதையடுத்து ரோஹித்துடன் இணைந்தார் கேப்டன் தோனி.

  ரோஹித் சர்மா அதிரடியாக விளையாட இந்தியாவின் ரன் வேகம் அதிகரித்தது. அடுத்தடுத்து பவுண்டரிகளை விரட்டிய ரோஹித், டெர்ன்பாச் வீசிய கடைசி ஒவரில் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாசி அரைசதம் கண்டார். அந்த ஓவரின் 4-வது பந்தை எதிர்கொண்ட தோனி சிக்ஸருக்கு தூக்கினார்.

  எல்லையில் நின்ற ஜோஸ் பட்லர் அற்புதமாக கேட்ச் செய்தார். அப்போது பவுண்டரிக்கு எல்லைக்கு வெளியில் சென்றுவிடுவோம் என்பதை உணர்ந்த பட்லர், பந்தை மைதானத்துக்குள் வீசினார். அருகில் நின்ற அலெக்ஸ் அதைப் பிடிக்க தோனி 9 ரன்களில் நடையைக் கட்டினார். ரோஹித்-தோனி ஜோடி 3.5 ஓவர்களில் 47 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

  இதனால் இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டீவன் ஃபின் 2 விக்கெட் வீழ்த்தினார்.

  சுருண்டது இங்கிலாந்து: இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணியில் கீஸ்வெட்டர் மட்டுமே 35 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்தவர்களில் ஜோஸ் பட்லர் (11),  டெர்ன்பார்ச் (12) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினர். இதனால் 14.4 ஓவர்களில் 80 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து. இந்தியத் தரப்பில் ஹர்பஜன் சிங் 4 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

  இன்றைய ஆட்டம்

  மேற்கிந்தியத் தீவுகள்-அயர்லாந்து

  இடம்: கொழும்பு

  நேரம்: இரவு 7.30

  நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் கிரிக்கெட்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai