சுடச்சுட

    

    பல்லகெலே, செப்.23: இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 9-வது லீக் ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்.

    முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.இலங்கையின் பல்லகெலேவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

    வெட்டோரி வீசிய 2-வது ஓவரில் சிக்ஸர் அடித்து அதிரடியைத் தொடங்கி வைத்தார் முகமது ஹபீஸ். அவருக்கு இணையாக இம்ரான் நசிரும் அதிரடியில் இறங்கினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.4 ஓவர்களில் 47 ரன்கள் சேர்த்தது. 16 பந்துகளைச் சந்தித்த இம்ரான் நசிர் 5 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து நசிர் ஜம்ஷெத் களம்புகுந்தார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய அவர், 7,8,9 ஆகிய 3 ஓவர்களிலும் தலா ஒரு சிக்ஸரை விளாசினார். இதனால் 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்களை எட்டியது பாகிஸ்தான்.

    கைல் மில்ஸ் வீசிய 11-வது ஓவரை எதிர்கொண்ட ஜம்ஷெத், ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாசினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜம்ஷெத் 27 பந்துகளில் அரை சதமடித்தார்.

    பாகிஸ்தான் 13.4 ஓவர்களில் 123 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. 38 பந்துகளைச் சந்தித்த ஹபீஸ் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து பிராங்க்ளின் பந்துவீச்சில் போல்டு ஆனார். இதையடுத்து வந்த கம்ரான் அக்மல் 3 ரன்களில் வீழ்ந்தார். அவரைத் தொடர்ந்து ஜம்ஷெத் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். 35 பந்துகளைச் சந்தித்த அவர் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார்.

    இதன்பிறகு வந்தவர்களில் உமர் அக்மல் 15 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 23 ரன்களும், அப்ரிதி 6 பந்துகளில் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எட்டியது பாகிஸ்தான். நியூஸிலாந்து தரப்பில் டிம் செüதி, ஜேக்கப் ஓரம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    சிறப்பான தொடக்கம்: பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணியில் ராப் நிகோல் 28 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்து அப்ரிதி பந்துவீச்சில் போல்டு ஆனார்.

    கேன் வில்லியம்சன் 15, டேனியல் வெட்டோரி 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். சற்று போராடிய பிரென்டன் மெக்கல்லம் 31 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    சரிந்தது நியூஸிலாந்து: ஜேக்கப் ஓரம் 11 ரன்கள் எடுத்திருந்தபோது அஜ்மல் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அதிரடியாக விளையாடிய கேப்டன் ராஸ் டெய்லர் 11 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்தவர்களில் பிராங்க்ளின் மட்டும் 13 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.

    பாகிஸ்தான் தரப்பில் சயீத் அஜ்மல் 4 ஓவர்களில் 30 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  முகமது ஹபீஸ், பெüலிங்கில் 4 ஓவர்களை வீசி 15 ரன்களை மட்டுமே கொடுத்தார். அவர் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.



    சுருக்கமான ஸ்கோர்

    பாகிஸ்தான்-177/6

    (ஜம்ஷெத் 56, ஹபீஸ் 43,

    டிம் செüதி 2வி/31)

    நியூஸிலாந்து-164/9

    (நிகோல் 33,

    பி.மெக்கல்லம் 32,

    அஜ்மல் 4வி/30)

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai