சுடச்சுட

    
    spt1

    பல்லகெலே, செப்.25:  இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 175 ரன்கள் குவித்தது வங்கதேசம்.

    அந்த அணியின் ஷகிப் அல்ஹசன் 54 பந்துகளில் 2 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் குவித்தார்.

    இலங்கையின் பல்லகெலேவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணி ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர் அஷ்ரபுல் 14 ரன்களில் வெளியேற, தமிம் இக்பாலுடன் இணைந்தார் அல்ஹசன். தமிம் அதிரடியாக விளையாடியதால் 5 ஓவர்களில் 49 ரன்களை எட்டியது வங்கதேசம்.

    சோஹைல் தன்வீர் வீசிய 6-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசினார் அல்ஹசன். அதே ஓவரில் தமிம் இக்பால் ரன் அவுட்டானார். 12 பந்துகளைச் சந்தித்த அவர் 5 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்தார். இதையடுத்து கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் களம் புகுந்தார்.

    தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அல்ஹசன், யாசிர் அராபத் வீசிய 13-வது ஓவரில் சிக்ஸர் அடித்து 33 பந்துகளில் அரைசதம் கண்டார். அந்த அணி 129 ரன்களை எட்டியபோது முஷ்பிகுர் ரஹிம் (26 பந்துகளில் 25 ரன்கள்) ஆட்டமிழந்தார்.

    உமர் குல் வீசிய 18-வது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசிய அல்ஹசன், கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 54 பந்துகளில் அவர் 84 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது.

    பாகிஸ்தான் தரப்பில் யாசிர் அராபத் 3 விக்கெட் வீழ்த்தினார். உமர் குல் அதிகபட்சமாக 3 ஓவர்களில் 43 ரன்களை வாரி வழங்கினார்.  

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai