சுடச்சுட

  
  3spt29

  இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-8 சுற்றில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.

  முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 5.1 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், ஒரு விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

  அந்த அணியின் ஷேன் வாட்சன் 42 பந்துகளில் 7 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்தார். டேவிட் வார்னர் 41 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்தார்.

  கொழும்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அஸ்வின், ஹர்பஜன், பியூஷ் சாவ்லா என 3 சுழற்பந்து வீச்சாளர்கள் உள்பட 5 பெüலர்களுடன் இந்தியா களமிறங்கியது. இதனால் சேவாக் நீக்கப்பட்டார்.

  டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் கம்பீருடன், இர்ஃபான் பதான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். கம்பீர் 17 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கோலி 15 ரன்களில் வெளியேறினார். 10 பந்துகளைச் சந்தித்த யுவராஜ் சிங் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

  மறுமுனையில் இர்ஃபான் பதான் 30 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்தார். ரோஹித் சர்மா ஒரு ரன்னில் வெளியேற, ரெய்னாவுடன் இணைந்தார் தோனி. ரெய்னா வேகமாக விளையாடினாலும், தோனி ஆமை வேகத்திலேயே ஆடினார்.

  இதனால் இந்தியாவின் ரன் வேகத்தில் தொய்வு ஏற்பட்டது. தோனி 21 பந்துகளில் 15 ரன்களே எடுத்தார். ரெய்னா 19 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் சேர்த்தது இந்தியா. அஸ்வின் 12 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 16 ரன்கள் எடுத்தார்.

  ஆஸ்திரேலியத் தரப்பில் ஷேன் வாட்சன் 3 விக்கெட்டுகளையும், பட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

  வார்னர் அதிரடி: பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் ஷேன் வாட்சனின் ருத்ரதாண்டவம் 5-வது ஓவரில் இருந்து தொடங்கியது. அஸ்வின் வீசிய அந்த ஓவரில் இரு சிக்ஸர்களை அடித்த வாட்சன், அதன்பிறகு கிடைத்த ஓவர்களில் எல்லாம் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

  பியூஷ் சாவ்லா வீசிய 8-வது ஓவரில் இரு சிக்ஸர்களை விளாசினார் வாட்சன். ஹர்பஜன் சிங் வீசிய 9-வது ஓவரை எதிர்கொண்ட வார்னர், தன் பங்குக்கு 2 சிக்ஸர்களை விளாசினார். பதான் வீசிய அடுத்த ஓவரில் வாட்சன் இரு சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விளாசினார். பதான் ஓவரில் முதல் சிக்ஸரை அடித்தபோது வாட்சன் 28 பந்துகளில் அரைசதம் கடந்தார். கோலி வீசிய 11-வது ஓவரை எதிர்கொண்ட வாட்சன், அதையும் விட்டுவைக்கவில்லை. அதிலும் ஒரு சிக்ஸர் பறந்தது. இதனால் 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 110 ரன்களை எட்டியது ஆஸ்திரேலியா. இதனிடையே வார்னர் 37 பந்துகளில் அரைசதம் கண்டார்.

  அந்த அணி 133 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. 72 ரன்கள் எடுத்த வாட்சன், யுவராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கிளென் மாக்ஸ்வெல் களம்புகுந்தார். இறுதியில் 14.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. வார்னர் 63, மாக்ஸ்வெல் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

  3 விக்கெட் மற்றும் 72 ரன்கள் எடுத்த வாட்சன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த உலகக் கோப்பையில் தொடர்ந்து 3-வது முறையாக அவர் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.

  இந்திய வீரர்களில் ஜாகீர்கான் மட்டும் சிறப்பாக பந்துவீசினார். அவர் 3 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்தார். சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஹர்பஜன், சாவ்லா ஆகியோரை ஆஸ்திரேலியர்கள் வெளுத்து வாங்கிவிட்டனர்.

  இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி கண்டிருப்பது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர்-8 சுற்றின் முடிவில் இந்தியாவும், இன்னொரு அணியும் சமநிலையில் இருந்தால், ரன் ரேட் கணக்கிடப்படும்போது அது இந்தியாவுக்கு பாதகமாக அமையும்.

   

  சுருக்கமான ஸ்கோர்

  இந்தியா-140/7

  (பதான் 31, ரெய்னா 26,

  வாட்சன் 3வி/34)

   

  ஆஸ்திரேலியா-141/1

  (வாட்சன் 72, வார்னர் 63*, யுவராஜ் 1வி/16)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai