சுடச்சுட

  
  dums1

  பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைடந்தது தொடரை இழந்தது.

  முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட் செய்த இந்திய அணி 48 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் நசீர் ஜம்ஷெட் இப்போட்டியிலும் சதமடித்தார்.

  மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. பின்னர் பேட் செய்த பாகிஸ்தான் அணி, சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தது. தொடக்க வீரர்களான முகமது ஹபீஸýம், ஜம்ஷெட்டும் அற்புதமாக ரன்களை சேர்த்தனர். இதனால் இருவரும் 50 ரன்களைக் கடந்தனர். அணியின் ஸ்கோர் 141ஆக உயர்ந்தபோது 76 ரன்கள் எடுத்திருந்த ஹபீஸ் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் ஜம்ஷெட் நிலைத்து ஆடி 120 பந்துகளில் 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் சதமடித்தார். இந்தத் தொடரில் தொடர்ந்து அவர் அடித்த இரண்டாவது சதம் இதுவாகும். 106 ரன்கள் எடுத்திருந்தபோது ஜம்ஷெட் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மற்ற வீரர்கள் பெவிலியன் திரும்ப 48.3 ஓவர்களில் 250 ரன்களுக்கு பாகிஸ்தானின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்தியத் தரப்பில் இஷாந்த் சர்மா, ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

  மோசமான பேட்டிங்: பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் கடந்த ஆட்டத்தைப் போலவே முன்னணி வீரர்கள் சோபிக்கத் தவறினர். அணியின் ஸ்கோர் 95ஆக உயர்ந்தபோது முக்கியமான 5 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. முதல் 5 பேரில் சேவாக் மட்டும் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் தோனி மிகப் பொறுமையாக விளையாடினார். மற்ற வீரர்கள் ஆட்டமிழந்தபோதும், தோனி அரை சதமடித்தார். கடைசி விக்கெட்டாக இஷாந்த் சர்மா ஆட்டமிழக்க இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. தோனி ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்தார்.

  பாகிஸ்தான் தரப்பில் ஜுனைத் கான், சயீத் அஜ்மல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 106 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு வழிவகுத்த நசீர் ஜம்ஷெட் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணியிடம் தொடரை இழந்தது இந்திய அணி. முன்னதாக, முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கிடையேயான கடைசி ஒருநாள் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை தில்லியில் நடைபெறுகிறது.

  ஈடன் மைதானத்தில் 25 ஆண்டுக் கொண்டாட்டம்

  இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஈடன் மைதானத்தில் ஒருநாள் போட்டி விளையாடத் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்தது. வியாழக்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின்போது 25 ஆண்டுக் கொண்டாட்டம் நடைபெற்றது. பாகிஸ்தான் அணியின் பேட்டிங் முடிந்த பின் 45 நிமிட இடைவெளியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

  முதல்வர் பரிசு: கபில் தேவ், ரவி சாஸ்திரி, கங்குலி, விவிஎஸ் லட்சுமண், ஸ்ரீகாந்த், வாசிம் அக்ரம், ரமீஸ் ராஜா உள்ளிட்ட முன்னாள் வீரர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பரிசளித்து கெüரவித்தார்.

  இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரு அணி வீரர்களும் திறந்த வெளி ஜீப்பில் மைதானத்தில் ஊர்வலம் வந்தனர். கொல்கத்தாவைச் சேர்ந்த கங்குலி மட்டும் தனியாக திறந்த வெளி ஜீப்பில் அழைத்து வரப்படும்போது, ரசிகர்கள் உற்சாகமாகக் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரு அணியின் முன்னாள் வீரர்களும் நலம் விசாரித்துக் கொண்டனர்; தாங்கள் விளையாடிய நாள்களை நினைத்து நெகிழ்ச்சியடைந்தனர்.

  சுருக்கமான ஸ்கோர்

  பாகிஸ்தான்-250

  (ஜம்ஷெட் 106, ஹபீஸ் 76, இஷாந்த் சர்மா 3வி/34, ஜடேஜா 3வி/41)

  இந்தியா-165

  (தோனி 54*, சேவாக் 31,

  அஜ்மல் 3வி/20,

  ஜுனைத் கான் 3வி/39)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai