சுடச்சுட

  
  spt4

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவும் நிலையில் உள்ளது.

  சிட்னி நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 87.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ரன்களை எடுத்தது. பின்னர் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் எடுத்திருந்தது. வேட் 47 ரன்களிலும், சிடில் 16 ரன்களிலும் களத்தில் இருந்தனர். 3ஆம் நாள் ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

  தொடர்ந்து விளையாடிய வேட் 111 பந்துகளில் அரை சதமடித்தார். மறுபுறம் சிறப்பாக ஆடி வந்த சிடில் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டார்க், லியான் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் வேட் தொடர்ந்து ரன் குவித்து வந்தார். கடைசி விக்கெட்டாக களமிறங்கிய பேர்டுடன் ஜோடி சேர்ந்தார் வேட்.

  த்ரில் சதம்: அரை சததத்தைக் கடந்த வேட் அதிரடி ஆட்டத்தைக் கையாண்டார். இதனால் அவர் சதத்தை நெருங்கினார். இதைக் கண்டு அந்த அணியின் கேப்டன் கிளார்க் டிக்ளேர் செய்யவில்லை. த்ரில்லாக நடைபெற்று வந்த இப்போட்டியில் 156 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் சதமடித்தார் வேட். இது அவருடைய இரண்டாவது சதமாகும். இறுதியில் அணியின் ஸ்கோர் 9 விக்கெட் இழப்புக்கு 432ஆக இருந்தபோது கிளார்க் டிக்ளேர் செய்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் வேட் 102 ரன்களை எடுத்தார்.

  விக்கெட் இழப்பு: 138 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி தனது 2ஆவது இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்க வீரர் தில்ஷான் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஜெயவர்த்தனா, கருணாரத்னாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடியது. அணியின் ஸ்கோர் 132ஆக உயர்ந்தபோது 85 ரன்கள் எடுத்திருந்த கருணாரத்னா ஆட்டமிழந்தார்.

  அதைத் தொடர்ந்து களமிறங்கிய மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினாலும் ஜெயவர்த்தனா போராடி அரை சதமடித்தார். 60 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் ஆட்டமிழந்தார். 3ஆம் நாள் ஆட்ட நேர இறுதியில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது. சண்டிமால் 32 ரன்களுடனும், ஹெராத் 87 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

  இப்போது வரை இலங்கை அணி 87 ரன்களே முன்னிலை பெற்றுள்ளது. கைவசம் 3 விக்கெட்டுகளே உள்ள நிலையில், 4ஆம் நாளிலே இப்போட்டி முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai