சுடச்சுட

  

  சென்னை ஓபன்: இறுதிச்சுற்றில் டிப்சரேவிச், பௌதிஸ்டா

  By - ஏ.வி.பெருமாள் -  |   Published on : 06th January 2013 04:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt2

  சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் இறுதிச்சுற்றில் செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச்-ஸ்பெயினின் ராபெர்ட்டா பெளதிஸ்டா ஆகியோர் மோதுகின்றனர். இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.6) நடைபெறுகிறது.

  முன்னதாக டிப்சரேவிச் தனது அரையிறுதியில் 4-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்லோவேனியாவின் அல்ஜாஸ் பெடேனையும், பெளதிஸ்டா 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் பெனாய்ட் பேரையும் வீழ்த்தினர்.

  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இப் போட்டியில் 6-வது நாளான சனிக்கிழமை அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

  முதல் அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளவரான செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச்சும், ஸ்லோவேனியாவின் அல்ஜாஸ் பெடேனும் மோதினர். முதல் செட்டின் தொடக்கத்தில் நிதானமாக ஆடிய டிப்சரேவிச், 4-வது கேமில் பெடேனின் சர்வீஸை முறியடிக்க முயற்சி எடுத்தார். ஆனால் பெடேன் சிறப்பாக ஆடி தனது சர்வீஸை மீட்டார்.

  5-வது கேமில் அசத்தலாக சர்வீஸ் போட்ட டிப்சரேவிச், மிக எளிதாக தனது சர்வீஸை தன்வசமாக்கினார். இதன்பிறகு சுதாரித்துக் கொண்ட பெடேன், டிப்சரேவிச்சுக்கு கடும் சவால் அளித்தார். இதனால் 7-வது கேமில் நீண்ட போராட்டத்துக்குப் பிறகே தனது சர்வீஸை தன்வசமாக்கினார் டிப்சேரேவிச். 8-வது கேமில் டபுள் பால்ட் தவறு செய்ததால், பின்னடைவைச் சந்தித்த பெடேன், இறுதியில் சரிவிலிருந்து மீண்டார். 9-வது கேமில் டிப்சரேவிச் சர்வீஸ் மீது பெடேன் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினார். பெடேனின் அதிவேக ஷாட்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார் டிப்சரேவிச்.

  இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பெடேன், டிப்சரேவிச்சை மைதானம் முழுவதும் ஓடவைத்தார். கடுமையாகப் போராடியபோதிலும் டிப்சரேவிச்சால் தனது சர்வீஸை மீட்க முடியவில்லை. இதனால் 5-4 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற பெடேன், 10-வது கேமிலேயே முதல் செட்டை முடிவுக்குக் கொண்டு வந்தார். 44 நிமிடங்கள் நடைபெற்ற இந்த செட் 6-4 என்ற கணக்கில் பெடேன் வசமானது.

  சரிவிலிருந்து மீண்ட டிப்சரேவிச்: முதல் செட்டை இழந்தாலும், 2-வது செட்டை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொண்டார் டிப்சரேவிச். இந்த செட்டின் 2-வது கேமில் பெடேனின் சர்வீஸை மிக எளிதாக முறியடித்த டிப்சரேவிச், தனது அனுபவ ஆட்டத்தால் பெடேனை சற்று தடுமாற வைத்தார். இதனால் பெடேன் கடுமையாகப் போராடியபோதும் கடைசி வரை சரிவிலிருந்து மீள முடியவில்லை. 8-வது கேமில் பெடேனின் சர்வீஸை மீண்டும் முறியடித்த டிப்சரேவிச் 6-2 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார். டிப்சரேவிச் வேகமாக ஆடியதால் இந்த செட் 34 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

  இதன்பிறகு நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட்டிலும், 2-வது செட்டை போல் 2-வது கேமிலேயே பெடேனின் சர்வீஸை முறியடித்து 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்ற டிப்சரேவிச், 4-வது கேமிலும் பெடேனின் சர்வீஸை முறியடிக்க கடுமையாகப் போராடினார். பெடேனும் விடாப்பிடியாக விளையாடியதால் இந்த கேம் சுமார் 8 நிமிடங்கள் வரை நீடித்தது. ஆனாலும் கடைசிக் கட்டத்தில் பெடேன் சிறப்பாக ஆடி தனது சர்வீஸை மீட்டார். தொடர்ந்து 6-வது கேமிலும் கடும் போராட்டத்துக்குப் பிறகே சரிவிலிருந்து மீண்டார் பெடேன். 7-வது கேமில் டிப்சரேவிச்சுக்கு கடும் சவால் அளித்த பெடேன், அந்த சர்வீஸை முறியடிக்கப் போராடினார். ஆனால் டிப்சரேவிச் ஏஸ் சர்வீஸை அடித்து பின்னடைவிலிருந்து மீண்டார். 8-வது கேமில் அபாரமாக ஆடிய டிப்சரேவிச், பெடேனின் சர்வீஸை முறியடிக்க இந்த ஆட்டம் 2 மணி நேரம் 6 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. 3-வது செட் 6-2 என்ற கணக்கில் டிப்சரேவிச் வசமானது. இந்த ஆட்டத்தில் டிப்சரேவிச் 9 ஏஸ் சர்வீஸ்களை அடித்தார். அதேநேரத்தில் ஒரு டபுள் பால்ட் தவறுகூட செய்யவில்லை. பெடேன் 8 ஏஸ் சர்வீஸ்களை அடித்தபோதிலும், 5 டபுள் பால்ட் தவறுகளை செய்தார்.

  இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 2-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார் டிப்சரேவிச். கடந்த முறை இறுதிச்சுற்று வரை முன்னேறிய டிப்சரேவிச், கடும் போராட்டத்துக்குப் பிறகு கனடாவின் மிலஸ் ரயோனிக்கிடம் தோல்வி கண்டார்.

  பெளதிஸ்டா வெற்றி: 2-வது அரையிறுதி ஆட்டத்தில் சர்வதேச தரவரிசையில் 80-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ராபெர்ட் பெளதிஸ்டாவும், தரவரிசையில் 47-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் பெனாய்ட் பேரும் மோதினர்.

  விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டின் 8-வது கேமில் பெளதிஸ்டாவின் சர்வீஸை முறியடித்த பெனாய்ட் 6-3 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார்.

  பின்னர் நடைபெற்ற 2-வது சுற்றில் அபாரமாக ஆடிய பெளதிஸ்டா முதல் 5 கேம்களையும் தன்வசமாக்கினார். இதில் 2 மற்றும் 4-வது கேம்களில் பெனாய்ட்டின் சர்வீஸை முறியடித்தார்.

  இதனால் இந்த செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றி 7 கேம்களில் முடிவுக்குக் கொண்டு வந்தார் பெளதிஸ்டா. இந்த செட்டில் 6-வது கேமில் மட்டுமே பெனாய்ட் தனது சர்வீஸை தக்க வைத்தார்.

  இதைத் தொடர்ந்து நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட்டின் முதல் கேமில் பெனாய்ட்டின் சர்வீஸை முறியடித்த பெளதிஸ்டா, அடுத்த கேமில் தனது சர்வீஸை இழக்க ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

  தொடர்ந்து போராடிய பெளதிஸ்டா 9-வது கேமில் பெனாய்ட்டின் சர்வீஸை முறியடித்தார். இதனால் 10-வது கேமின் முடிவில் 3-வது செட் 6-4 என்ற கணக்கில் பெளதிஸ்டா வசமானது.

  இதன்மூலம் 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி கண்ட பெளதிஸ்டா, இறுதிச்சுற்றை உறுதி செய்தார். இந்த ஆட்டத்தில் பெனாய்ட் 15 ஏஸ் சர்வீஸ்களை அடித்தபோதிலும், பெளதிஸ்டா மூன்று ஏஸ் சர்வீஸ்களை மட்டுமே அடித்தார்.

  இரட்டையர் பிரிவு: இரட்டையர் பிரிவு அரையிறுதிப்போட்டியில் ஜெர்மனியின் ஆண்ட்ரி பெஜிமான், மார்டீன் எம்ரிச் ஜோடியும் தாய்லாந்தின் சஞ்சாய் ரதிவதானா-சோன்சட் ரதிவதானாவும் மோதின.

  1 மணி 19 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் ஜெர்மனியின் பெஜிமான், எம்ரிச் ஜோடி 7-6, 6-4 என்ற செட் கணக்கில் ரதிவதானா ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

  இன்றைய ஆட்டங்கள்

  ஒற்றையர் இறுதி ஆட்டம்

  ராபெர்ட்டா பெளதிஸ்டா (ஸ்பெயின்) -

  ஜான்கோ டிப்சரேவிச் (செர்பியா)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai