சுடச்சுட

  
  spt3

  பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. பேட்ஸ்மேன்கள் சோபிக்கத் தவறியபோதும், பந்து வீச்சாளர்களின் அசாத்தியமான பணியினால் இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைத்தது.

  இப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 43.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட் செய்த பாகிஸ்தான் அணி 48.5 ஓவர்களில் 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

  முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. எனினும் ஆறுதல் வெற்றியாவது பெறுமா என்ற நிலையில் தில்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் கடைசி ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்திய அணியில் தொடக்க வீரர் சேவாக்குக்கு பதிலாக ரஹானேவும், பந்து வீச்சாளர் திண்டாவுக்குப் பதிலாக சமி அகமதுவும் சேர்க்கப்பட்டனர். பாகிஸ்தான் அணியில் மாற்றம் இல்லை.

  தடுமாற்றம்: டாஸ் வென்ற இந்திய அணிக் கேப்டன் தோனி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக கம்பீரும், ரஹானேவும் களமிறங்கினர். கடந்த ஆட்டங்களைப் போலவே இந்த ஆட்டத்திலும் பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்கத் தடுமாறினர். எதிரணியின் பந்து வீச்சு இப்போட்டியிலும் சிறப்பாக இருந்தது. அதனால், கம்பீர் (15), ரஹானே (4), கோலி (7), யுவராஜ் சிங் (23) ரன்களில் வெளியேறினர்.

  அடுத்து களமிறங்கிய வீரர்களில் ரெய்னா (31), தோனி (36) மற்றும் ஜடேஜா (27) ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் குறைவான ரன்களில் வெளியேற 167 ரன்களில் இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. கடந்த போட்டிகளைப் போல இப்போட்டியிலும் தோனியே சிறப்பாக விளையாடினார். 55 பந்துகளைச் சந்தித்த அவர் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரிகளுடன் 36 ரன்களை எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் சையீத் அஜ்மல் 24 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  தோல்வி: கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி, குறைவான வெற்றி இலக்கை விரைவாக எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போட்டியில் அந்த அணியின் பேட்ஸ்மேன்களும் விரைவாகவே ஆட்டமிழந்தனர். அணியின் ஸ்கோர் 14ஆக இருந்தபோது கம்ரான் அக்மல் மற்றும் யூனிஸ் கான் விக்கெட்டை பாகிஸ்தான் இழந்தது. முதல் இரு போட்டிகளிலும் சதமடித்த நசீர் ஜம்ஷெட் 34 ரன்களிலும் மிஸ்பா உல்-ஹக் 39 ரன்களிலும் ஆட்டமிழக்க இந்திய வீரர்கள் உற்சாகமடைந்தனர். தொடர்ந்து களமிறங்கிய மற்ற வீரர்கள் அவ்வப்போது ஆட்டமிழக்க இந்திய அணி வெற்றியை நெருங்கியது.

  கடந்த போட்டிகளில் தொடக்க வீரராகக் களமிறங்கிய முகமது ஹபீஸ் இப்போட்டியில் 7ஆவது விக்கெட்டாகக் களமிறக்கப்பட்டார். அதனால் இந்திய அணியின் வெற்றி கேள்விக்குறியானது.

  இறுதியில் 12 பந்துகளில் 23 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலைக்கு பாகிஸ்தான் அணி தள்ளப்பட்டது. கைவசம் ஒரு விக்கெட் மட்டும் இருந்தது. 48ஆவது ஓவரை இஷாந்த் சர்மா வீசினார். இந்த ஓவரின் 3 மற்றும் 5 ஆவது பந்தில் பவுண்டரியை ஹபீஸ் அடித்தார். அதனால் இரு அணி வீரர்களிடமும் பரபரப்பு தொற்றியது.

  நெருக்கடியின் காரணமாக 5ஆவது பந்தை நோ பாலாக வீசினார் சர்மா. இதனால், பாகிஸ்தான் அணி வெற்றி பெற 7 பந்துகளுக்கு 12 ரன் தேவை என்ற நிலை உருவானது. இறுதியில் ஹபீஸ் அடித்த பந்தை யுவராஜ் சிங் கேட்ச் பிடிக்க இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைத்தது.

  ஆட்டநாயகன் தோனி: இப்போட்டியில் 36 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்த தோனி ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக பாகிஸ்தான் வீரர் நசீர் ஜம்ஷெட் தேர்வு செய்யப்பட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai