சுடச்சுட

  
  NAYER

  ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் காலிறுதிச் சுற்றில் மும்பை, செளராஷ்டிரம் அணிகள் அதிக ரன்களைக் குவித்தன.

  ரஞ்சி கோப்பையின் காலிறுதிச்சுற்றுப் போட்டிகள் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த ஆட்டங்களின் இரண்டாவது நாள் முடிவில் மும்பை மற்றும் செளராஷ்டிரம் அணிகள் அதிக ரன்களைக் குவித்துள்ளன.

  மும்பையின் வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய போட்டியில் மும்பை, பரோடா அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட் செய்தது. முதல் நாள் முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்திருந்தது. சச்சின் 108 ரன்களில் ஆட்டமிழந்தார். வாசிம் ஜாஃபர் 137 ரன்களுடனும், குலகர்னி ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர். திங்கள்கிழமை இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது.

  தொடர்ந்து விளையாடிய ஜாஃபர் 150 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து குல்கர்னி 27 ரன்களிலும், தாரே 64 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆட்ட நேர இறுதியில் மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு முதல் இன்னிங்ஸில் 524 ரன்கள் எடுத்துள்ளது. நாயர் 122 ரன்களுடனும், சவான் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பரோடா அணித் தரப்பில் வஹோரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

  செளராஷ்டிரம்: குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடைபெற்ற மற்றொரு காலிறுதிச்சுற்றில் செüராஷ்டிர அணியும், கர்நாடக அணியும் மோதின. இந்த ஆட்டத்தின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் செளராஷ்டிர அணி 5 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்திருந்தது. வசவதா 49 ரன்களுடனும், ஜானி 13 ரன்களுடனும் இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடங்கினர்.

  தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வசவதா சதமடித்தார். மற்ற வீரர்கள் அவ்வப்போது ஆட்டமிழந்து வந்தாலும், வசவதாவின் ஆட்டத்தை கர்நாடக அணி வீரர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இறுதியில் 165.3 ஓவர்களில் செளராஷ்டிர அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 469 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வசவதா ஆட்டமிழக்காமல் 152 ரன்கள் எடுத்தார்.

  கர்நாடக அணித் தரப்பில் மிதுன் மற்றும் கெளதம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

  பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய கர்நாடக அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்துள்ளது. ராபின் உத்தப்பா 29 ரன்களுடனும், ராகுல் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 3ஆவது நாள் ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

  மற்ற ஆட்டங்கள்: பஞ்சாப் அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஜார்க்கண்ட் அணி 6 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக அந்தக அணியின் ரமீஸ் நமீத் 100 ரன்களில் ஆட்டமிழந்தார். 126 ரன்களில் இஷாங்க் ஜாகியும் 8 ரன்களிலும் குப்தாவும் களத்தில் உள்ளனர். பஞ்சாப் தரப்பில் சித்தார்த் கெளல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  உத்தரப்பிரதேசம், சர்வீசஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் 2-ம் நாளிலியே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸில் உத்தரப் பிரதேச அணி 134 ரன்களுக்கும், சர்வீசஸ் அணி 263 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. பின்னர், தனது இரண்டவாது இன்னிங்ஸை விளையாடிய உத்தரப் பிரதேசம் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்துள்ளது.

  ஹர்பஜனுக்கு அபராதம்
  பஞ்சாப் அணியின் கேப்டன் ஹர்பஜன் சிங்குக்கு சம்பளத் தொகையிலிருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது நடுவரின் தீர்ப்புக்கு ஹர்பஜன் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். அவுட் அப்பீல் குறித்து கர்நாடகத்தைச் சேர்ந்த நடுவர் சி.கே.நந்தனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து ஹர்பஜனிடம் 15 நிமிடம் விசாரணை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai