சுடச்சுட

  
  spt2

  இங்கிலாந்து லெவன் அணிக்கு எதிரான 2-வது பயிற்சி ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது தில்லி அணி.

  தில்லி வீரர் ஷிகர் தவாண் 110 ரன்கள் குவித்து வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார். முதலில் பேட் செய்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது.

  பின்னர் ஆடிய தில்லி அணி 48.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. தில்லியில் பகலிரவு போட்டியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். குக்-இயான் பெல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தது. குக் 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.

  பின்னர் வந்த ஜோ ரூட் 10, சமித் படேல் 13 ரன்களில் வீழ்ந்தாலும், இயான் பெல்-இயோன் மோர்கன் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தது. 125 பந்துகளைச் சந்தித்த இயான் பெல் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மோர்கன் 52 ரன்கள் எடுத்தார்.

  கடைசிக் கட்டத்தில் கீஸ்வெட்டர் 27 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் எடுக்க 5 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் சேர்த்தது இங்கிலாந்து. தில்லி தரப்பில் வருண் சூட் 3 விக்கெட் எடுத்தார்.

  தில்லி வெற்றி: வலுவான இலக்குடன் களமிறங்கிய தில்லி அணிக்கு ஷிகர் தவாண்-உன்முக்த் சந்த் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்தது. சந்த் 37 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

  பின்னர் வந்த ஆனந்த் 4 ரன்களில் ஆட்டமிழக்க, தவாணுடன் இணைந்தார் மிலிந்த் குமார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்தது. 98 பந்துகளில் சதம் கண்ட, தவாண் 109 பந்துகளில் 110 ரன்கள் சேர்த்தார்.

  இதில் 3 பிரமாண்ட சிக்ஸர்களும், 10 பவுண்டரிகளும் அடங்கும்.

  பின்னர் வந்த ரவால் 2 ரன்களில் வெளியேற, ரஜத் பாட்டியா களம்புகுந்தார். மிலிந்த் குமார்-ரஜத் பாட்டியா ஜோடி ஆட்டமிழக்காமல் 72 பந்துகளில் 103 ரன்கள் சேர்க்க 9 பந்துகள் மீதமிருக்கையில் தில்லி அணி 295 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. மிலிந்த் குமார் 85 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 78, பாட்டியா 33 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.

  இங்கிலாந்து தரப்பில் டிரெட்வெல் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடியதன் மூலம் தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்த்துள்ளார் ஷிகர் தவாண்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai