சுடச்சுட

  

  2020 ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை பெறுவதற்காக இஸ்தான்புல் (துருக்கி), மாட்ரிட் (ஸ்பெயின்), டோக்கியோ (ஜப்பான்) ஆகிய நகரங்கள் போட்டியிடுகின்றன.

  இது தொடர்பாக ஸ்விட்சர்லாந்தின் லாசன்னே நகரில் உள்ள சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் (ஐஓசி) தலைமை அலுவலகத்தில் மேற்கண்ட 3 நகரங்கள் சார்பில் பல்வேறு விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முந்தைய மற்றும் 2016 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் இந்த நகரங்கள் பங்கேற்றாலும், வாய்ப்பு கிடைக்கவில்லை.

  சர்வதேச பொருளாதார நிலை ஸ்திரமாக இல்லாதபோதிலும், ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான போட்டியில் மாட்ரிட் நகரம் தொடர்ந்து 3-வது முறையாக பங்கேற்கிறது. டோக்கியோ தொடர்ந்து 2-வது முறையாகவும், இஸ்தான்புல் 5-வது முறையாகவும் போட்டியில் பங்கேற்கின்றன.

  ஒலிம்பிக் போட்டிக்கான மைதானங்கள், பட்ஜெட், நிதி உத்தரவாதம், பாதுகாப்பு ஏற்பாடுகள், விளையாட்டு கிராமம், போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு விவரங்களை உள்ளடக்கிய 100 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை மேற்கண்ட 3 நகரங்களும் அளித்துள்ளன. இது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் மதிப்பீட்டுக் குழு வரும் மார்ச் மாதம் மேற்கண்ட 3 நகரங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்யும். அதன்பிறகு வரும் ஜூலையில் லாசன்னே நகரில் நடைபெறவுள்ள ஐஓசி கூட்டத்தின்போது மதிப்பீட்டுக் குழு தங்களின் அறிக்கையை அளிக்கும்.

  அதைத்தொடர்ந்து செப்டம்பர் 7-ம் தேதி ஆர்ஜென்டீனாவின் தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடைபெறும் ஐஓசி கூட்டத்தின்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்தி போட்டியை நடத்தும் நகரம் தேர்வு செய்யப்படும். முன்னதாக 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த ரோம் (இத்தாலி), பாகு (அஜர்பைஜான்), தோஹா (கத்தார்), டோக்கியோ, இஸ்தான்புல், மாட்ரிட் ஆகிய 6 நகரங்கள் விருப்பம் தெரிவித்திருந்தன. ரோமில் நடத்த இத்தாலி அரசு நிதியுதவி அளிக்க மறுத்ததைத் தொடர்ந்து அந்த நகரம் போட்டியிலிருந்து விலகியது. தோஹா, பாகு நகரங்களை போட்டியிலிருந்து ஐஓசி நீக்கியது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai