சுடச்சுட

  

  டேவிஸ் கோப்பையில் பிரகாஷ் அமிர்தராஜ் விளையாட முடியாது

  By dn  |   Published on : 10th January 2013 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  prakash

  மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் புதிய கொள்கையின் காரணமாக பிரகாஷ் அமிர்தராஜ் இந்தியாவின் சார்பில் டேவிஸ் கோப்பையில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  இதனால் டேவிஸ் கோப்பைக்கான அணியைத் தேர்வு செய்வதில் இந்திய டென்னிஸ் சங்கத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

  கேப்டன் மற்றும் பயிற்சியாளரை மாற்ற வேண்டும், பரிசுத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் தென் கொரியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை போட்டியில் பங்கேற்கமாட்டோம் என்று சோம்தேவ் உள்ளிட்ட 8 வீரர்கள் அறிவித்துள்ளனர். இதனால் மாற்று அணியைத் தேர்வு செய்வதற்கான முயற்சியில் அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) இறங்கியுள்ளது. அதன்படி இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் வீரரான விஜய் அமிர்தராஜின் மகனான பிரகாஷ் அமிர்தராஜை டேவிஸ் கோப்பை அணியில் விளையாட வைக்க ஏஐடிஏ முடிவு செய்தது. ஆனால் அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். மத்திய விளையாட்டு அமைச்சகம் 2008-ம் ஆண்டு உருவாக்கிய புதிய கொள்கைப்படி இந்திய குடியுரிமைப் பெற்றவர்கள் மட்டுமே இந்தியாவின் சார்பில் சர்வதேச விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க முடியும் என்பதால், ஏஐடிஏவின் மாற்று அணி முயற்சிக்கும் தற்போது முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

  இது தொடர்பாக மத்திய விளையாட்டுத் துறை செயலர் பி.கே.தேப் கூறுகையில், "இந்திய குடியரிமை பெற்றவர்கள் மட்டுமே இந்தியாவின் சார்பில் சர்வதேச போட்டியில் பங்கேற்க முடியும் என்பது குறித்த அறிக்கை நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு சம்மேளனங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. பிரகாஷ் அமிர்தராஜிடம் இந்தியக் குடியுரிமை இருந்தால் அவர் விளையாடலாம்' என்றார்.

  இது தொடர்பாக ஏஐடிஏவின் தலைமைச் செயல் அதிகாரி ஹிரோன்மணி சாட்டர்ஜி கூறுகையில், "விளையாட்டு அமைச்சகத்தின் புதிய கொள்கைப்படி பார்த்தால், பிரகாஷை விளையாட வைக்க முடியாது. அவர் தற்போது நல்ல பார்மில் உள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விளையாடியதைவிட தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். தற்போதைய நிலையில் அவர் சிறந்த வீரர்' என்றார்.

  டேவிஸ் கோப்பையில் விளையாட மாட்டோம் என்று போர்க்கொடி தூக்கியுள்ள 8 வீரர்களும் தங்களின் முடிவை மறுபரிசீலனை செய்ய வியாழக்கிழமை (ஜன.10) வரை கால அவகாசம் வழங்கியுள்ளது ஏஐடிஏ. இந்த விவகாரம் தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமை ஏஐடிஏ ஆலோசிக்கவுள்ளது.

  சோம்தேவ், மகேஷ் பூபதி, ரோஹன் போபண்ணா, யூகி பாம்ப்ரி, சனம் சிங், விஷ்ணுவர்தன், திவிஜ் சரண், சாகேத் மைனேனி ஆகியோர் விளையாட மறுத்தால், இரண்டாம் நிலை வீரர்கள் அடங்கிய அணியைத் தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு ஏஐடிஏ தள்ளப்படும்.

  இவர்களுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் சிறந்த வீரர்கள் என்று எடுத்துக் கொண்டால், ஜீவன் நெடுஞ்செழியன் (தரவரிசை 423), ஸ்ரீராம் பாலாஜி (324),ரஞ்சித் விராலி முருகேசன் (517), விஜயந்த் மாலிக் (542), புரவ் ராஜா (155) ஆகியோர் மட்டுமே உள்ளனர்.

  தற்போதைய நிலையில் லியாண்டர் பயஸ் மட்டுமே டேவிஸ் கோப்பையில் விளையாடத் தயார் என அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  2 ஆண்டுகளுக்குப் பிறகு காயத்திலிருந்து மீண்டு, டென்னிஸýக்கு திரும்பியுள்ள பிரகாஷ் அமிர்தராஜ், சமீபத்தில் முடிவடைந்த சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்று வரை முன்னேறினார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரகாஷ், அனைத்து ஆட்டங்களையும் 3 செட் வரை கொண்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai