சுடச்சுட

  

  தென்னிந்திய பல்கலை. இடையிலான மகளிர் கபடி போட்டி தொடக்கம்

  By dn  |   Published on : 10th January 2013 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tvlkabadi

  தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மின்னொளி மகளிர் கபடி போட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது.

  திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டுத் துறை சார்பில் நடத்தப்படும் இப் போட்டியின் தொடக்க விழாவுக்கு பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஆ.கு. குமரகுரு தலைமை வகித்துப் பேசியதாவது:

  பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 22 ஆண்டுகளில் இதுவரை மண்டல அளவில் 27 விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அதிகளவில் உள்ளனர். இங்கு விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இளைஞர்களிடையே ஒற்றுமையை உருவாக்கும் வகையில் இத்தகைய போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றார்.

  போட்டிகளைத் தொடங்கிவைத்து திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையர் சுனில்குமார் சிங் பேசுகையில், "பழங்காலத்தில் கிராமங்களில் பிரசித்தி பெற்றிருந்த கபடி இப்போது உலகளவில் பிரசித்தி பெற்றிருக்கிறது. அதிலும் கபடியில் இந்தியா தலைசிறந்து விளங்குகிறது. தொடர்ந்து 3 முறை சர்வதேச அளவிலான ஆடவர், மகளிர் கபடி போட்டிகளில் இந்தியா தங்கம் வென்றுள்ளது' என்றார்.

  விழாவில் சர்வதேச கபடி சம்மேளன தொழில்நுட்ப இயக்குநரும், துரோணாசார்யா விருது பெற்றவருமான இ. பிரசாத் ராவ் பேசுகையில், "உலகில் 32 நாடுகளில் கபடி விளையாடப்படுகிறது.

  1999-ல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடியில் இந்தியா தங்கம் வென்று தனது பெருமையைத் தக்கவைத்துக்கொண்டது. இந்திய கபடி பயிற்சியாளர்கள் ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் சென்று பயிற்சி அளித்து வருகின்றனர்' என்றார்.

  திருநெல்வேலி மாநகராட்சி மேயர் விஜிலா சத்தியானந்த் வாழ்த்திப் பேசினார்.

  பல்கலைக்கழகப் பதிவாளர் பி. கோவிந்தராஜு, தமிழ்நாடு கபடி கழகத் தலைவர் சோலை எம். ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  கபடி வீராங்கனைகளின் அணிவகுப்பு, கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையும் தொடக்க விழாவில் இடம்பெற்றிருந்தன. போட்டியில் பங்கேற்கவுள்ள அணியினருக்கு சிறப்பு விருந்தினர்கள் திருநெல்வேலி அல்வா வழங்கினர். போட்டியின் தொடக்கமாக வெண் புறாக்கள் பறக்கவிடப்பட்டன.

  இம் மாதம் 13-ம் தேதிவரை நடைபெறும் போட்டிகளில் தமிழகத்திலிருந்து 14, ஆந்திரத்திலிருந்து 15, கர்நாடகத்திலிருந்து 11, கேரளத்திலிருந்து 4, புதுச்சேரியிலிருந்து ஒன்று என 45 பல்கலைக்கழகங்களில் இருந்து அணிகள் பங்கேற்கின்றன.

  இந்த அணிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. போட்டி நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai