சுடச்சுட

  

  முதல் ஒருநாள் ஆட்டம்: இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்

  By dn  |   Published on : 11th January 2013 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt2

  இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

  இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடர், பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடர் ஆகியவற்றில் தோல்வி கண்டுள்ள நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வெற்றி பெற்று தோல்வியில் இருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது இந்தியா.

  இந்திய அணியைப் பொறுத்தவரையில் சேவாக் நீக்கப்பட்டிருப்பதால், கம்பீருடன் ரஹானே தொடக்க வீரராக களமிறங்குகிறார். சேவாக் ஓய்வுபெறும் வயதை எட்டிவிட்டதால் அவரின் இடத்தைப் பிடிப்பதற்கு ரஹானேவுக்கு இது நல்ல வாய்ப்பாகும்.

  மிடில் ஆர்டரில் விராட் கோலி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, தோனி ஆகியோரை நம்பியுள்ளது இந்தியா. கோலி, யுவராஜ் சிங் ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகின்றனர்.

  இவர்கள் சிறப்பாக ஆடும்பட்சத்தில் இந்தியா நல்ல ஸ்கோரை எட்ட முடியும். ஆல்ரவுண்டர் இடத்தில் ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. ஜடேஜா தனது சொந்த மண்ணில் விளையாடுகிறார்.

  பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடரில் இந்தியத் தரப்பில் தோனி ஒரு சதம் உள்பட 203 ரன்களும், ரெய்னா 92 ரன்களும் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை.

  சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் அஸ்வின் இடம்பெற்றுள்ளார். சமீபத்திய போட்டிகளில் அவர் ஏற்ற இறக்கங்களையே சந்தித்து வந்துள்ளார். அஸ்வினுடன் யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பகுதிநேர பந்துவீச்சாளர்களாக பயன்படுத்தப்படவுள்ளனர்.

  இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், சமி அஹமது என 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  பலம் வாய்ந்த பேட்டிங்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக ஆடி அடுத்தடுத்து சதம் கண்ட கேப்டன் அலாஸ்டர் குக் தலைமையில் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது. குக்கின் சிறப்பான ஆட்டம் இந்தத் தொடரிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கெவின் பீட்டர்சன், இயான் பெல், இயோன் மோர்கன், கீஸ்வெட்டர் என பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது இங்கிலாந்து அணி.

  வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் முன்னணி பெüலர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் விளையாடவில்லை. இதனால் டிம் பிரெஸ்னன், ஸ்டீவன் ஃபின் கூட்டணியை நம்பியே இங்கிலாந்து களமிறங்குகிறது. 3-வது பெüலராக ஜேட் டெர்ன்பாச், ஸ்டூவர்ட் மீக்கர் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். சுழற்பந்து வீச்சில் சமித் படேல், ஜேம்ஸ் டிரெட்வெல் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருவதால் போட்டி மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது.

  சாதிக்குமா இங்கிலாந்து: இங்கிலாந்து அணி கடந்த 30 ஆண்டுகளாக இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை வென்றதில்லை. அதனால் டெஸ்ட் தொடரை 24 ஆண்டுகளுக்குப் பிறகு வென்று சாதனை படைத்ததைப் போன்று இந்தத் தொடரிலும் சாதிக்கும் முனைப்போடு அந்த அணி களமிறங்குகிறது.

  புஜாராவுக்கு இடமில்லை: தோனி

  முதல் ஒருநாள் ஆட்டத்தில் புஜாராவுக்கு இடமில்லை என்று இந்திய கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: தற்போதைய நிலையில் அணியில் உள்ள அனைத்து வீரர்களுமே நல்ல உடற்தகுதியோடு உள்ளனர். வியாழக்கிழமை இரவுக்குள் இதில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்று தெரியவில்லை. போட்டிக்கு முன்னதாக யாருக்காவது உடல் நலம் பாதிக்கப்பட்டால் புஜாராவை சேர்ப்பது குறித்து யோசிக்கலாம்.

  உலகக் கோப்பைக்குப் பிறகு தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடி ரன் குவிக்காதது அணிக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ள அஜிங்க்யா ரஹானே சிறந்த தொடக்க ஆட்டக்காரர். சமீபத்திய காலங்களில் சிறப்பாக விளையாடியுள்ளார் என்றார்.

  தொடர் தோல்வியால் எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்துப் பேசிய தோனி, "விமர்சனத்தை சந்திப்பது ஒன்றும் புதிதல்ல. தனி நபராகவோ அல்லது அணியாகவோ சிறப்பாக விளையாடாத பட்சத்தில் விமர்சனத்தை சந்தித்துதான் ஆகவேண்டும்' என்றார்.

  கேப்டன் பதவியில் இருந்து தோனி விலக வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கருத்துத் தெரிவித்திருப்பது குறித்துப் பேசிய அவர், "பொறுத்திருந்து பார்ப்போம். கேப்டன் பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை. அது பற்றியும் சிந்திக்கவில்லை' என்றார்.

  கர்நாடகத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் கடைசி நாளான வியாழக்கிழமை செüராஷ்டிர அணியின் வீரரான சேதேஷ்வர் புஜாரா 352 ரன்கள் குவித்துள்ள நிலையில், அவருக்கு இடமில்லை என்று தோனி தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  இதனால் புஜாரா, அறிமுக ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. செüராஷ்டிர வீரரான புஜாரா, சொந்த ஊர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.

  இதுவரை...

  1974 முதல் இதுவரை இந்தியா-இங்கிலாந்து அணிகள் 81 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளன. அதில் இந்தியா 43 ஆட்டங்களிலும், இங்கிலாந்து 33 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளன.

  2 ஆட்டங்கள் டையில் முடிந்துள்ளன. 3 ஆட்டங்களில் முடிவு எட்டப்படவில்லை. கடைசியாக 2011-ல் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.

  இதில் இந்தியா 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்தது. அதேபோல் இந்த முறையும் இந்தியா வெல்லும் பட்சத்தில் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்க முடியும்.

  அதேநேரத்தில் தரவரிசையில் தற்போது முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து அதை தக்கவைக்கப் போராடும்.

  மைதானம் எப்படி?

  போட்டி நடைபெறவுள்ள செüராஷ்டிர கிரிக்கெட் சங்க மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானதாகும். இதனால் இங்கு 300 ரன்களுக்கு மேல் குவிக்க வாய்ப்புள்ளதாக செüராஷ்டிர கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

  2009-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மைதானத்தில் முதல் முறையாக சர்வதேச போட்டி நடைபெறவுள்ளது. இங்கு 28 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்க முடியும்.

  இங்கு ரஞ்சி கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  போட்டி நேரம்: மதியம் 12
  நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ்,இஎஸ்பிஎன், தூர்தர்ஷன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai