சுடச்சுட

  
  hughes

  இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா.

  ஆஸ்திரேலியாவின் பில் ஹியூஸ் அறிமுக ஆட்டத்திலேயே 112 ரன்கள் குவித்தார்.

  முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இலங்கை 40 ஓவர்களில் 198 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆரோன் பிஞ்ச், பில் ஹியூஸ் ஆகியோர் அந்த அணியின் இன்னிங்ûஸத் தொடங்கினர்.

  பிஞ்ச் 16, அவரைத் தொடர்ந்து வந்த கவாஜா 3 ரன்களில் ஆட்டமிழக்க, ஹியூஸýடன் இணைந்தார் கேப்டன் பெய்லி. இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்தது. மெல்போர்ன் மைதானத்தில் 3-வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். ஹியூஸ் 14 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் எடுத்தார்.

  பெய்லி 79 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசிக் கட்டத்தில் டேவிட் ஹசி 34 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் குவித்தது.

  பின்னர் பேட் செய்த இலங்கை அணியில் தரங்கா ஒரு ரன்னிலும், ஜெயவர்த்தனா 5 ரன்களிலும் வெளியேற, தில்ஷானுடன் இணைந்தார் சன்டிமால். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தது. தில்ஷான் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு மேத்யூஸ் 12, திரிமன்னே 0, ஜீவன் மெண்டிஸ் 20 ரன்களில் வெளியேறினர். 7-வது விக்கெட்டாக சன்டிமால் 73 ரன்களில் ஆட்டமிழக்க இலங்கையின் தோல்வி தவிர்க்க முடியாததானது. அந்த அணி 40 ஓவர்களில் 198 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலிய தரப்பில் கிளின்ட் மெக்காய் 4 விக்கெட் எடுத்தார்.

  இதன்மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது ஆஸ்திரேலியா. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை அடிலெய்டில் நடைபெறுகிறது.

  அசத்திய ஆஸ்திரேலியர்கள்: கேப்டன் பொறுப்பில் உள்ள மைக்கேல் கிளார்க், முன்னணி வீரர்களான டேவிட் வார்னர், வாட்சன், மைக் ஹசி ஆகியோர் இல்லாத நிலையில் ஆரோன் பிஞ்ச், பில் ஹியூஸ், கவாஜா என 3 வீரர்கள் உள்பட இளம் வீரர்களுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அபாரமாக ஆடி வெற்றி கண்டுள்ளது. 3 அறிமுக பேட்ஸ்மேன்களுடன் ஆஸ்திரேலியா களமிறங்குவது இது 3-வது முறையாகும். முன்னதாக 1977-78, 1986-ம் ஆண்டுகளில் இதேபோன்று 3 பேட்ஸ்மேன்களுடன் களம் கண்டுள்ளது.

  8-வது வீரர் பில் ஹியூஸ்: இந்த ஆட்டத்தில் சதமடித்ததன் மூலம் சர்வதேச அளவில் அறிமுக ஆட்டத்தில் சதமடித்த 8-வது வீரர், முதல் ஆஸ்திரேலியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பில் ஹியூஸ்.

  சுருக்கமான ஸ்கோர்

  ஆஸ்திரேலியா-305/5 (ஹியூஸ் 112, பெய்லி 89, டேவிட் ஹசி 60*,மேத்யூஸ் 1வி/46)

  இலங்கை-198 (சன்டிமால் 73, தில்ஷான் 51, மெக்காய் 4வி/33)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai