சுடச்சுட

    
    spt3

    அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) தொழில்முறைக்கு எதிராகவும், நெறிமுறைகள் இன்றியும் செயல்படுவதாக இந்திய டென்னிஸ் வீரர் சோம்தேவ் குற்றம்சாட்டியுள்ளார்.

    அணியின் விளையாடாத கேப்டன் மிஸ்ரா மற்றும் பயிற்சியாளரை நீக்க வேண்டும், பரிசுத்தொகையை உயர்த்தித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சோம்தேவ் உள்ளிட்ட வீரர்கள் தென் கொரியாவுடனான டேவிஸ் கோப்பை போட்டியில் விளையாட மறுத்துவிட்டனர். இதையடுத்து லியாண்டர் பயஸ் தலைமையில் இளம் வீரர்கள் அடங்கிய அணியைத் தேர்வு செய்தது டென்னிஸ் சங்கம்.

    இந்த நிலையில் சோம்தேவ் செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த வாரம் ஏஐடிஏ மேற்கொண்ட செயல்கள் தொழில்முறைக்கு எதிராகவும், நெறிமுறைகளுக்கு மாறாகவும் இருந்தன. இது வீரர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

    ஏஐடிஏ எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கூறினாலும், எதையும் எழுத்து மூலமாகத் தரவில்லை. நாங்கள் ஏமாற்றப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே எழுத்து மூலமாகக் கேட்கிறோம். ஏஐடிஏ வரலாற்றில் இதுவரை நம்பிக்கை அடிப்படையிலேயே ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    எந்த விஷயத்திலும் எழுத்து மூலமாக உறுதியளிக்கப்படவில்லை என்பதை உறுதியாகக் கூறுகிறேன். ஏஐடிஏ சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததைப் போன்ற எந்த விஷயமும் எங்களுக்கு கடந்த 6-ம் தேதி அனுப்பப்பட்ட இ-மெயிலில் இல்லை. இதிலிருந்தே டென்னிஸ் சங்கம் எப்படிப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

    டென்னிஸ் சங்கத்தில் என்ன நடக்கிறது என்பதை எங்களுக்குத் தெரியுங்கள் என்றுதான் வீரர்கள் கேட்கிறார்கள். நாங்கள் எங்களின் அடிப்படை உரிமைகளைத்தான் கேட்கிறோம். ஏஐடிஏவின் பொதுக்குழுவையோ, செயற்குழுவையோ, தேர்வுக் குழுவையோ எங்களால் தொடர்புகொள்ள முடியாதது ஏமாற்றமளிக்கிறது.

    கடந்த 20 ஆண்டுகளாக இதேநிலைதான் தொடர்கிறது. எனினும் இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருப்பதால் யாராவது ஒருவர் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பார்கள். டென்னிஸில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய விளையாட்டுத் துறையிலும் மேற்கண்ட நிலைதான் நீடிக்கிறது. எனவே இதற்கு தீர்வு காண வேண்டும்.

    எழுத்து மூலமாக உறுதியளிப்பதோடு, டென்னிஸ் வீரர்களை சரியான முறையில் ஏஐடிஏ நடத்துமானால் எல்லா வீரர்களும் மகிழ்ச்சியோடு டேவிஸ் கோப்பையில் பங்கேற்பார்கள் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai