சுடச்சுட

  

  டேவிஸ் கோப்பை: முன்னணி வீரர்கள் மறுத்ததால் இளம் வீரர்கள் அடங்கிய அணி தேர்வு

  Published on : 12th January 2013 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்கள் விளையாட மறுத்ததால் லியாண்டர் பயஸ் தலைமையில் இளம் வீரர்கள் அடங்கிய அணியைத் தேர்வு செய்துள்ளது அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ).

  விளையாடாத கேப்டன் மிஸ்ரா மற்றும் பயிற்சியாளரை நீக்க வேண்டும், பரிசுத் தொகையை உயர்த்தித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் கொரியாவுடனான டேவிஸ் கோப்பை போட்டியில் விளையாடமாட்டோம் என்று சோம்தேவ் உள்ளிட்ட 8 வீரர்கள் போர்க்கொடி தூக்கினர்.

  இதையடுத்து அவர்களுடன் வியாழக்கிழமை இரவு வரை ஏஐடிஏ பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஏஐடிஏ உறுதி அளித்தபோதிலும், அதை வீரர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

  இதனால் வேறுவழியின்றி டேவிஸ் கோப்பை போட்டிக்கு இளம் வீரர்கள் அடங்கிய அணியைத் தேர்வு செய்துள்ளது ஏஐடிஏ.

  ரஞ்சித், விஜயந்த் மாலிக் ஆகியோர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கவுள்ளனர். இவர்கள் இருவரும் தரவரிசையில் முதல் 500 இடங்களுக்குள் இல்லை.

  ரஞ்சித் 517-வது இடத்திலும், மாலிக் 542-வது இடத்திலும் உள்ளனர். 4-வது வீரராக புரவ் ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரட்டையர் தரவரிசையில் 155-வது இடத்தில் உள்ள இவர், பயஸýடன் இணைந்து விளையாடுகிறார்.

  சோம்தேவ், மகேஷ் பூபதி, ரோஹன் போபண்ணா, யூகி பாம்ப்ரி, விஷ்ணுவர்தன், சனம் சிங், திவிஜ் சரண், சாகேத் மைனேனி ஆகியோர் ஏற்கெனவே விளையாட மறுத்துவிட்டனர்.

  இதனால் தமிழக வீரர்களான ஜீவன் நெடுஞ்செழியன், ஸ்ரீராம் பாலாஜி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவர்களும் கடைசி நேரத்தில் டேவிஸ் கோப்பைக்கான அணி தேர்வில் இருந்து விலகியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டேவிஸ் கோப்பை போட்டி வரும் பிப்ரவரி 1 முதல் 3 வரை தில்லியில் நடைபெறவுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai