சுடச்சுட

  
  spt4

  தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் கபடிப் போட்டியில் அரையிறுதி லீக் சுற்றின் முதல் ஆட்டத்தில் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக அணி அபார வெற்றி பெற்றது.

  பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை அரையிறுதி லீக் சுற்றுகள் நடைபெற்றன. இதில் முதல் ஆட்டத்தில் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக அணியும், திருவனந்தபுரத்திலுள்ள கேரள பல்கலைக்கழக அணியும் மோதின.

  ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே கொடைக்கானல் அணி வீராங்கனைகள் ஆக்ரோஷமாக விளையாடினர். அந்த அணியின் யோகலட்சுமி அபாரமாக விளையாடி அணிக்கு புள்ளிகளைச் சேர்த்தார்.

  முதல்பாதி ஆட்டநேர முடிவில் கொடைக்கானல் அணி 28-4 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் இருந்தது. கொடைக்கானல் அணியின் ஸ்கோரில் 16 புள்ளிகள் யோகலட்சுமி மூலம் கிடைத்தன.

  2ஆவது பாதி ஆட்டத்திலும் கொடைக்கானல் அணியே ஆதிக்கம் செலுத்தியது. இதனால் அந்த அணி 54-16 என்ற புள்ளிக்கணக்கில் கேரள பல்கலைக்கழக அணியைத் தோற்கடித்தது. யோகலட்சுமி மொத்தம் 22 புள்ளிகளை பெற்றுத்தந்தார்.

  நிரம்பி வழிந்த கேலரிகள்: அரையிறுதி ஆட்டங்களைக் காண்பதற்காக மைதானத்தில் ஏராளமான ஆண்களும், பெண்களும் திரண்டிருந்தனர். மைதானத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த கேலரிகள் நிரம்பி வழிந்தன. இதனால் பலர் தரையில் அமர்ந்து ஆட்டத்தை ரசித்தனர். ஆட்டம் தொடங்கும் முன்னரும், ஆட்டத்தின் முதல் பாதியிலும் வாணவேடிக்கை இடம்பெற்றது.

  ஞாயிற்றுக்கிழமை இரவில் இறுதிப் போட்டியும், தொடர்ந்து பரிசளிப்பு விழாவும் நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai