சுடச்சுட

  
  spt2

  இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது இந்தியா.

  முதலில் பேட் செய்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் மட்டுமே எடுத்தது.

  குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

  குக், பெல் அபாரம்: அந்த அணியில் கேப்டன் அலாஸ்டர் குக்-இயான் பெல் ஜோடி சிறப்பாக ஆடி ரன் சேர்த்தது. இவர்களை வீழ்த்த முடியாமல் தடுமாறிய கேப்டன் தோனி, 7 பெüலர்களை பயன்படுத்தினார். எனினும் வீழ்த்த முடியவில்லை. அந்த அணி 158 ரன்களை எட்டியபோது ரன் அவுட்டானார் பெல். அவர் 96 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்தார்.

  இதையடுத்து கெவின் பீட்டர்சன் களம்புகுந்தார். குக் 75 ரன்களை எட்டியபோது ரெய்னா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 83 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார். குக்கைத் தொடர்ந்து இயோன் மோர்கன் களம்புகுந்தார். மோர்கன்-பீட்டர்சன் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்தது. மோர்கன் 38 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்தார். பீட்டர்சன் 45 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்தார்.

  படேல் விளாசல்: கீஸ்வெட்டர்-சமித் படேல் ஜோடி கடைசி 6 ஓவர்களில் 70 ரன்களை விளாச அந்த அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது. கீஸ்வெட்டர் 20 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 24, சமித் படேல் 20 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

  கடைசி இரு ஓவர்களில் மட்டும் அந்த அணி 38 ரன்கள் சேர்த்தது. 49-வது ஓவரை இஷாந்த் சர்மாவும், 50-வது ஓவரை புவனேஸ்வர் குமாரும் வீசியது குறிப்பிடத்தக்கது.

  சிறப்பான தொடக்கம்: இதையடுத்து பேட் செய்த இந்திய அணிக்கு அஜிங்க்யா ரஹானே-கம்பீர் ஜோடி சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. ஸ்டீவன் ஃபின் வீசிய 5-வது ஓவரில் 4 பவுண்டரிகளை விரட்டினார் கம்பீர். அந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் கிடைத்தன. இதனால் 7-வது ஓவரில் 50 ரன்களைக் கடந்தது இந்தியா.

  இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சு எடுபடாதபோதிலும், சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி இந்தியாவின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர். இதனால் ரஹானே 47 ரன்கள் எடுத்திருந்தபோது டிரெட்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரஹானே-கம்பீர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தது.

  யுவராஜ் விளாசல்: இதையடுத்து கோலி களம்புகுந்தார். மறுமுனையில் 48 பந்துகளில் அரைசதம் கண்ட கம்பீர், 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 52 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார். கோலி 15 ரன்களில் ஆட்டமிழக்க, யுவராஜ் சிங்குடன் இணைந்தார் ரெய்னா. இந்த ஜோடி அதிரடி காட்ட இந்தியாவின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களை பதம்பார்த்த யுவராஜ் சிங் 38 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

  இந்தியாவின் ஸ்கோர் 198 ரன்களை எட்டியபோது யுவராஜ் சிங் ஆட்டமிழந்தார். 54 பந்துகளைச் சந்தித்த அவர் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்தார். இதையடுத்து கேப்டன் தோனி களம் புகுந்தார். மறுமுனையில் 48 பந்துகளில் அரைசதம் கண்ட ரெய்னா அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 7 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா களம்புகுந்தார்.

  இதனிடையே கேப்டன் தோனி 4 பிரமாண்ட சிக்ஸர்களை விளாச இந்தியாவின் ரன் வேகம் அதிகரித்தது. எனினும் கேப்டன் தோனி 25 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இந்தியாவின் கடைசி நம்பிக்கைத் தகர்ந்தது. இதன்பிறகு ஜடேஜா 7, அஸ்வின் 13, திண்டா 3 ரன்களில் வெளியேற, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 316 ரன்களை எடுத்த இந்தியா, 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. புவனேஸ்வர் குமார் 20, இஷாந்த் சர்மா 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

  இங்கிலாந்து தரப்பில் டிரெட்வெல் 10 ஓவர்களில் 44 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரே ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார். இந்த ஆட்டத்தில் வென்றதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஆட்டம் வரும் 15-ம் தேதி கொச்சியில் நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai