சுடச்சுட

  
  spt2

  கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் திங்கள்கிழமை தொடங்குகிறது. வரும் 27-ம் தேதி நிறைவடைகிறது.

  ஜோகோவிச்சின் ஹாட்ரிக் கனவு: ஆடவர் ஒற்றையர் பிரிவைப் பொறுத்தவரையில் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 2-ம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், 3-ம் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே ஆகியோரிடையே சாம்பியன் பட்டத்தை வெல்வதில் கடும் போட்டி நிலவும்.

  2011, 2012 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இரு முறை பட்டம் வென்றுள்ள நடப்புச் சாம்பியன் ஜோகோவிச், இந்த முறை ஹாட்ரிக் பட்டம் வெல்லும் கனவோடு களமிறங்குகிறார். எனினும் ரோஜர் ஃபெடரரும், ஒலிம்பிக் சாம்பியனான ஆன்டி முர்ரேவும் அவருக்கு கடும் சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  ஒற்றையர் பிரிவு டிராவின் முதல் பகுதியில் இடம்பெற்றுள்ள ஜோகோவிச் இறுதிச்சுற்றுக்கு எளிதாக முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜோகோவிச் தனது முதல் சுற்றில் பிரான்ஸின் மத்தேயூ பால் ஹென்ரியை சந்திக்கிறார்.

  அதேநேரத்தில் 2-வது பகுதி டிராவில் ரோஜர் ஃபெடரர், ஆன்டி முர்ரே, ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதனால் 2-வது பகுதி சவால் நிறைந்ததாக இருக்கும். ஆன்டி முர்ரேவும், ஃபெடரரும் அரையிறுதியில் மோத வாய்ப்புள்ளது. முர்ரே தனது முதல் சுற்றில் நெதர்லாந்தின் ராபின் ஹேஸியையும், ஃபெடரர் தனது முதல் சுற்றில் பிரான்ஸின் பெனாய்ட் பேரையும் சந்திக்கின்றனர்.

  தொடர்ந்து 17-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்கும் ஆஸ்திரேலியாவின் லெய்டன் ஹெவிட் தனது முதல் சுற்றில் சென்னை ஓபன் சாம்பியனான செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச்சை சந்திக்கிறார்.

  மகளிர் பிரிவு: மகளிர் ஒற்றையர் பிரிவைப் பொறுத்தவரையில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், நடப்புச் சாம்பியன் பெலாரஸின் விக்டோரியா அசரென்கா, போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா, ரஷியாவின் மரியா ஷரபோவா ஆகியோரிடையே பட்டத்தைக் கைப்பற்றுவதில் போட்டி நிலவும். ஒரு அரையிறுதியில் அசரென்காவும், செரீனாவும் மோத வாய்ப்புள்ளது. மற்றொரு அரையிறுதியில் அக்னீஸ்கா ரத்வன்ஸ்காவும், ஷரபோவாவும் மோத வாய்ப்புள்ளது.

  இந்தியர்கள்...

  ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சோம்தேவ் பங்கேற்கிறார். தரவரிசையில் 551-வது இடத்தில் உள்ள சோம்தேவ், தனது முதல் சுற்றில் தரவரிசையில் 78-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஜோர்ன் பாகுவை சந்திக்கிறார்.

  ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக். குடியரசின் ரடேக் ஸ்டெபானெக்குடன் இணைந்து களம் காண்கிறார். நடப்புச் சாம்பியனான இந்த ஜோடி தங்களுடைய முதல் சுற்றில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன்-இஸ்ரேலின் ஜொனாதன் எர்லிக் ஜோடியை சந்திக்கிறது.

  இந்தியாவின் மகேஷ் பூபதி-கனடாவின் டேனியல் நெஸ்டர் ஜோடி தங்களின் முதல் சுற்றில் ஸ்பெயினின் பாப்லோ அன்டுஜார்-கிரேஸியா லோபஸ் ஜோடியை சந்திக்கிறது. இந்தியாவின் ரோஹன் போபண்ணா-அமெரிக்காவின் ராஜீவ் ராம் ஜோடி தங்களின் முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் தனாஸி கொக்கினாகிஸ்-நிக் கிர்கியோஸ் ஜோடியை எதிர்கொள்கிறது.

  மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-அமெரிக்காவின் பெத்தானியே மடேக் ஜோடி தங்களின் முதல் சுற்றில் ஸ்பெயினின் சில்வியா-கர்லா சுரேஜ் ஜோடியை சந்திக்கிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai