சுடச்சுட

  

  ஆஸ்திரேலிய ஓபன்: 2-வது சுற்றில் ஃபெடரர், முர்ரே, அசரென்கா

  By dn  |   Published on : 16th January 2013 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt3

  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றுக்கு ரோஜர் ஃபெடரர், ஆன்டி முர்ரே, விக்டோரியா அசரென்கா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

  கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் திங்கள்கிழமை தொடங்கியது.

  போட்டியின் 2-வது நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 6-2, 6-4, 6-1 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் பெனாய்ட் பேரையும், பிரிட்டனின் ஆன்டி முர்ரே 6-3, 6-1, 6-3 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் ராபின் ஹேஸியையும், ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் 6-1, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் அட்ரியானையும் தோற்கடித்தனர்.

  அசரென்கா வெற்றி: மகளிர் பிரிவு ஒற்றையர் சுற்றில் முதல்நிலை வீராங்கனையான பெலாரஸின் விக்டோரியா அசரென்கா 6-1, 6-4 என்ற நேர் செட்களில் ருமேனியாவின் மோனிகாவையும், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-0, 6-0 என்ற நேர் செட்களில் ருமேனியாவின் எடினா கேலோவிஸ்டையும், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 2-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் சபைன் லிசிக்கியையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

  சோம்தேவ் வெற்றி: முன்னதாக முதல் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், டிப்சரேவிச், ஸ்பெயினின் டேவிட் ஃபெரர், ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, அமெரிக்காவின் ஜூர்கன் மெல்ஸர், பெல்ஜியத்தின் சேவியர் மலிஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்தியாவின் சோம்தேவ் தனது முதல் சுற்றில் 6-3, 6-2, 6-3 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் ஜோர்ன் பாவை தோற்கடித்தார்.

  மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் ரஷியாவின் மரியா ஷரபோவா, ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர், செர்பியாவின் அனா இவானோவிச், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

  இன்றைய ஆட்டங்கள்: புதன்கிழமை நடைபெறும் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி-கனடாவின் டேனியல் நெஸ்டர் ஜோடி, ஸ்பெயினின் பாப்லோ-லோபஸ் ஜோடியை சந்திக்கிறது.

  இதேபோல் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-அமெரிக்காவின் ராஜீவ் ராம் ஜோடி, ஆஸ்திரேலியாவின் தனாஸி-நிக் ஜோடியை எதிர்கொள்கிறது.

  மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-அமெரிக்காவின் பெத்தானியே மடேக் சேன்ட்ஸ் ஜோடி, ஸ்பெயினின் சில்வியா-கார்லா ஜோடியுடன் மோதுகிறது.

  செரீனாவுக்கு காயம்: அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தனது முதல் சுற்றில் ருமேனியாவின் எடினாவுடன் மோதினார். அந்த ஆட்டத்தில் 19 நிமிடங்கள் முடிந்திருந்த நிலையில் செரீனாவுக்கு வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கேயே சிகிச்சை பெற்ற அவர் நேர் செட்களில் வெற்றி கண்டார்.

  ஆட்டம் முடிந்தபிறகு செரீனாவுக்கு மீண்டும் வலி ஏற்பட்டதோடு, காலில் வீக்கமும் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு எக்ஸ்ரே எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தொடர்ந்து விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  எனினும் இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள செரீனா, "தான் இறந்தாலொழிய போட்டியில் இருந்து விலகுவதற்கு வாய்ப்பில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai