சுடச்சுட

  
  spt2

  இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா.

  முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 36 ஓவர்களில் 158 ரன்களுக்கு சுருண்டது.

  கொச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் கம்பீர் 8 ரன்களிலும், ரஹானே 4 ரன்களிலும் வெளியேறினர். இதையடுத்து கோலியும், யுவராஜும் ஜோடி சேர்ந்தனர்.

  கோலி நிதானமாக ஆடியபோதும், யுவராஜ் வேகம் காட்டினார். யுவராஜ் 32 ரன்கள் எடுத்திருந்தபோது நடுவரின் தவறான தீர்ப்பால் வெளியேற நேர்ந்தது. அவர் 37 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார்.

  இதையடுத்து ரெய்னா களம்புகுந்தார். இந்தியா 119 ரன்களை எட்டியபோது கோலி 37 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு தோனி களமிறங்கினார். மறுமுனையில் பவுண்டரி அடித்து 26-வது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார் ரெய்னா. அவர் 78 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

  தோனி-ஜடேஜா அதிரடி: இதையடுத்து தோனியுடன் இணைந்தார் ரவீந்திர ஜடேஜா. இந்த ஜோடி அதிரடியாக விளையாட சிக்ஸரும், பவுண்டரிகளும் பறந்தன. வோக்ஸ் வீசிய 45-வது ஓவரில் ஜடேஜா ஒரு சிக்ஸரையும், 2 பவுண்டரிகளையும் விளாசினார். மறுமுனையில் தோனி 56 பந்துகளில் அரைசதம் கண்டார்.

  ஸ்டீவன் ஃபின் வீசிய 49-வது ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசிய தோனி, டெர்ன்பாச் வீசிய கடைசி ஓவரின் 2-வது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 66 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்தார். அந்த ஓவரின் கடைசி 3 பந்துகளில் 2 பவுண்டரியையும், ஒரு சிக்ஸரையும் விளாசினார் ஜடேஜா. இதனால் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் குவித்தது. ஜடேஜா 37 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

  கடைசி 10 ஓவரில் மட்டும் இந்தியா 108 ரன்கள் குவித்தது.

  இங்கிலாந்து தோல்வி: பின்னர் பேட் செய்த இங்கிலாந்து 2-வது ஓவரிலேயே பெல்லின் விக்கெட்டை இழந்தது. அவர் ஒரு ரன்னில் வீழ்ந்தார். கேப்டன் குக்கை 17 ரன்களிலும், பீட்டர்சனை 42 ரன்களிலும், மோர்கனை ரன் ஏதுமின்றியும் வெளியேற்றினார் புவனேஸ்வர் குமார்.

  இதன்பிறகு சீரான இடைவெளியில் அந்த அணி விக்கெட்டுகளை இழந்தது. கீஸ்வெட்டர் 18, ஜோ ரூட் 36 ரன்களில் வெளியேற, சரிவு தவிர்க்க முடியாததானது. பின்னர் வந்த வோக்ஸ் 0, டிரெட்வெல் 1, ஸ்டீவன் ஃபின் 0 என வெளியேற, சமித் படேலுடன் இணைந்தார் டெர்ன்பாச். இதனிடையே அஸ்வின் வீசிய 36-வது ஓவரில் ஒரு சிக்ஸரையும், 3 பவுண்டரிகளையும் விளாசினார் சமித் படேல். அந்த ஓவரின் கடைசிப் பந்தில் டெர்ன்பார்ச் 2 ரன்களில் ரன் அவுட்டாக இங்கிலாந்தின் இன்னிங்ஸ் 158 ரன்களில் முடிவுக்கு வந்தது. இந்தியாவின் புவனேஸ்வர் குமார் 10 ஓவர்களில் 29 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. 3-வது ஆட்டம் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ளது.

   

  போட்டித் துளிகள்

  * இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பெற்ற 2-வது பெரிய வெற்றி இது.

  * 5,6,7-வது வரிசைகளில் களமிறங்கிய ரெய்னா, தோனி, ஜடேஜா ஆகியோர் அரைசதமடித்தனர். ஒருநாள் போட்டியில் இதுபோன்று நடப்பது 5-வது முறையாகும். இந்திய வீரர்கள் 3 பேர் அதுபோன்று அரை சதமடிப்பது இதுவே முதல்முறை.

  * இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோரைப் பதிவு செய்துள்ளது இங்கிலாந்து.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai