சுடச்சுட

  
  sachin

  ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் சர்வீசஸ் அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில் 78 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்துள்ளது.

  இவ்விரு அணிகளுக்கு இடையிலான இந்த ஆட்டம் புது தில்லியில் புதன்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற மும்பை கேப்டன் அஜித் அகர்கர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

  அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பவார் 3, வாசிம் ஜாபர் 15 ரன்களிலும், ஹிக்கென் ஷா ரன் ஏதுமின்றியும் வெளியேற மும்பை அணி 12.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்து தடுமாறியது.

  இதன்பிறகு ஜோடி சேர்ந்த மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரும், அபிஷேக் நாயரும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர்.

  ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இல்லாததால், பந்துகள் எகிறின. எகிறிய பந்தில் ஒன்று சச்சினின் கையை பதம்பார்த்தது.

  சச்சின் அரைசதம்: சிறப்பாக ஆடிய சச்சின் அரை சதமடித்த வேகத்தில், சின்ஹாவின் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்தார். அவர் அடுத்த பந்தையும் சிக்ஸருக்கு தூக்கினார்.

  ஆனால் அது வர்மாவின் கையில் தஞ்சம் புகுந்தது. இதனால் 75 பந்துகளைச் சந்தித்த சச்சின் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சச்சின்-நாயர் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தது.

  அந்த அணி 169 ரன்களை எட்டியபோது நாயரின் விக்கெட்டை இழந்தது. 160 பந்துகளைச் சந்தித்த அவர் 8 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்தார்.

  பின்னர் வந்த அங்கீத் சவாண் டக்அவுட் ஆனார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 78 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்துள்ளது. ஆதித்யா தாரே 26, அஜித் அகர்கர் 17 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

  சர்வீசஸ் தரப்பில் எஸ்.யாதவ், எஸ்.நாசர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

  செüராஷ்டிரம்-274/5: பஞ்சாபுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் செüராஷ்டிர அணி தனது முதல் இன்னிங்ஸில் 87 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்துள்ளது.

  குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் புதன்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற செüராஷ்டிர அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

  அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஜோகியானி 5 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான எஸ்.எச்.கோடக் 54 ரன்கள் எடுத்தார்.

  3-வது வீரராக களம்புகுந்த ஆர்.ஆர்.தேவ் 16 ரன்களே எடுத்தார். 4-வது வீரராக களம்புகுந்த கேப்டன் ஜெயதேவ் ஷா 123 பந்துகளில் 1 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்துள்ளது.

  ஜாக்சன் 70, மக்வானா 13 ரன்களுடன் களத்தில் உள்ளனர். பஞ்சாப் தரப்பில் சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2-வது நாள் ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai