சுடச்சுட

  
  agarker

  ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் சர்வீசஸ் அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில் 143 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 380 ரன்கள் குவித்துள்ளது.

  2-வது நாளில் கேப்டன் அஜித் அகர்கர், ஆதித்யா தாரே ஆகியோர் சதமடித்து அணியைச் சரிவிலிருந்து மீட்டதோடு, வலுவான ஸ்கோரை எட்டவும் உதவினர்.

  தில்லியில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 78 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்திருந்தது. ஆதித்யா தாரே 26, அகர்கர் 17 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

  2-வது நாளான வியாழக்கிழமை தொடர்ந்து ஆடிய மும்பை அணியில் அகர்கரும், ஆதித்யாவும் மிகவும் நேர்த்தியாக விளையாடியதோடு, சரியான பந்துகளில் மட்டுமே ரன் சேர்த்தனர். இதனால் இவர்களை வீழ்த்த முடியாமல் சர்வீசஸ் அணியின் பெளலர்கள் எரிச்சலடைந்தனர்.

  தொடர்ந்து நிதானமாக விளையாடிய அகர்கர் 109 பந்துகளிலும், ஆதித்யா 198 பந்துகளிலும் அரை சதத்தைப் பூர்த்தி செய்தனர். சர்வீசஸ் அணியின் கேப்டன் ஸ்வைன் 8 பெளலர்களை பயன்படுத்தியபோதும் பலன் கிடைக்கவில்லை. இதனிடையே ஆதித்யா 297 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் இந்த சீசனில் 2-வது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

  அவரைத் தொடர்ந்து அகர்கர் 216 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் சதமடித்தார். 2-வது நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 143 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 380 ரன்கள் குவித்துள்ளது. அகர்கர் 113, ஆதித்யா 108 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

  ஆதித்யா-அகர் ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 211 ரன்கள் குவித்துள்ளது. 2-வது நாளான வியாழக்கிழமை சர்வீசஸ் அணி 65 ஓவர்களை வீசியபோதும் ஒரு விக்கெட்டைகூட வீழ்த்த முடியவில்லை. இதனால் சர்வீசஸ் பெளலர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

  முதல் நாளில் சர்வீசஸ் தரப்பில் எஸ்.யாதவ், எஸ்.நாசர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

  செளராஷ்டிரம்-477: பஞ்சாபுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் செளராஷ்டிர அணி தனது முதல் இன்னிங்ஸில் 155 ஓவர்களில் 477 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.  

  குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த செளராஷ்டிரம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்திருந்தது. ஜாக்சன் 70, மக்வானா 13 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

  2-வது நாளான வியாழக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணியில் ஜாக்சன் சதமடித்தார். இந்த சீசனில் அவர் அடித்த 3-வது சதம் இது. அவர் 172 பந்துகளில் 1 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜாக்சன்-மக்வானா ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

  இதையடுத்து மக்வானாவுடன் இணைந்தார் ஜோஷி. இந்த ஜோடியும் சிறப்பாக ஆடி 7-வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தது. மக்வானா 216 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அந்த அணி 155 ஓவர்களில் 477 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜோஷி 55 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

  பஞ்சாப் தரப்பில் எஸ்.கெளல், எஸ்.லேடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

  பஞ்சாப்-41/0: பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய பஞ்சாப் ஆட்டநேர முடிவில் 17 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்துள்ளது. இந்தர் சிங் 30, ஜீவன்ஜோத் சிங் 11 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai