சுடச்சுட

  
  boxing

  சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க இந்திய குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தடை விதிப்பதைத் தவிர, வேறுவழியில்லை என்று சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (ஏஐபிஏ) தெரிவித்துள்ளது.

  இதனால் அடுத்து நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான குத்துச்சண்டை போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  இது தொடர்பாக ஏஐபிஏவின் மக்கள் தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு இயக்குநர் செபாஸ்டியன் கில்லட், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு இ-மெயில் மூலம் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:

  இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் (ஐஏபிஎஃப்) தனது அங்கீகாரத்தை மீண்டும் பெறுவதற்காக பெரிய அளவில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

  எனவே அவர்கள் மீண்டும் அங்கீகாரத்தைப் பெறும்வரை சர்வதேச போட்டிகளில் பங்கேற்க இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தடை விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.

  மேலும், இந்திய வீரர், வீராங்கனைகளின் நிலையைக் கருத்தில் கொண்டு ஐஏபிஎஃப், விரைவில் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்றும் ஏஐபிஏ வலியுறுத்தியுள்ளது.

  ஆனால் இந்திய குத்துச்சண்டை சம்மேளனமோ, சர்வதேச சங்கத்தின் இந்த நடவடிக்கை தொடர்பாக தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளது. "அது தொடர்பாக ஏஐபிஏ அதிகாரிகள் யாரும் எங்களிடம் பேசவில்லை. நாங்கள் தற்போது இக்கட்டான நிலையில் உள்ளோம்.

  சர்வதேச சங்கம் வீரர்களுக்கு தடை விதித்திருப்பது உண்மையாக இருக்கும்பட்சத்தில், அது மிகப்பெரிய பின்னடைவாக அமையும்' என்று ஐஏபிஎஃப் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

  முன்னதாக இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் நிர்வாகிகள் தேர்தலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் கூறி இந்திய சம்மேளனத்தை இடை நீக்கம் செய்தது சர்வதேச சங்கம்.

  அதைத் தொடர்ந்து மீண்டும் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக இந்திய சம்மேளனம் தெரிவித்திருந்த நிலையில், இப்போது வீரர்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai