சுடச்சுட

  

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இலங்கை.

  முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, இலங்கையின் பந்துவீச்சைப் தாக்குப் பிடிக்க முடியாமல் 26.4 ஓவர்களில் 74 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் ஆடிய இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

  ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், 4, ஹியூஸ் 3, டேவிட் ஹசி 4, ஜார்ஜ் பெய்லி 0, கேப்டன் கிளார்க் 9, ஹென்ரிக்ஸ் 2, ஜான்சன் 2, மேத்யூ வேட் 8, கிளின்ட் மெக்காய் 0 என அடுத்தடுத்து வெளியேற 18.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்து தடுமாறியது ஆஸ்திரேலியா.

  இதனால் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் மிகக் குறைந்தபட்ச ஸ்கோரை இந்த ஆட்டத்தில் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், கடைசி விக்கெட்டுக்கு மிட்செல் ஸ்டார்க்-டோஹெர்ட்டி ஜோடி 34 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலியா அதிலிருந்து தப்பியது. டோஹெர்ட்டி 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டார்க் 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கைத் தரப்பில் குலசேகரா 5 விக்கெட்டுகளையும், மலிங்கா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

  இலங்கை வெற்றி: பின்னர் ஆடிய இலங்கை அணியில் ஜெயவர்த்தனா 1, தில்ஷான் 22, திரிமானி 7 ரன்களிலும், மேத்யூஸ் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். திசாரா பெரேரா ஆட்டமிழக்காமல் 22 ரன்கள் சேர்க்க இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

  குலசேகரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் இலங்கை 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா எடுத்த 74 ரன்கள் கடந்த 27 ஆண்டுகளில் ஒருநாள் போட்டியில் அந்த அணி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். 1977-ல் எட்பாஸ்டனில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 70 ரன்களில் சுருண்டதே ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai