சுடச்சுட

  

  ராஞ்சியில் இன்று 3-வது ஆட்டம்: வெற்றியைத் தொடருமா இந்தியா?

  By dn  |   Published on : 19th January 2013 02:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dhoni

  இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் ஆட்டம் கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

  5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் இரு ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. 2-வது ஆட்டத்தில் வெற்றி கண்ட இந்திய அணி, 3-வது ஆட்டத்திலும் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம் அமையாதது பெரும் குறையாக உள்ளது. கெüதம் கம்பீர், ரஹானே ஜோடி சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுக்கும் பட்சத்தில் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் நெருக்குதலின்றி சிறப்பாக ஆடி ரன் குவிக்க முடியும். தொடர்ந்து தடுமாறி வந்த கோலி, கடந்த ஆட்டத்தில் 37 ரன்கள் எடுத்து பழைய பார்முக்கு திரும்ப முயற்சித்தார்.

  யுவராஜ் சிங், ரெய்னா, கேப்டன் தோனி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கடந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினர். குறிப்பாக தோனி, ஜடேஜா கடைசி 10 ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். இதனால் இந்தியா வலுவான ஸ்கோரை எட்ட முடிந்தது. கடந்த ஆட்டத்தைப் போலவே இந்த ஆட்டத்திலும் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடும்பட்சத்தில் நல்ல ஸ்கோரை எட்ட முடியும்.

  பந்துவீச்சைப் பொறுத்தவரையில் வேகப்பந்து வீச்சாளர்களில் புவனேஸ்வர் குமார் நம்பிக்கையளிக்கிறார். கடந்த ஆட்டத்தில் அவர் சிறப்பாக செயல்பட்டு, இங்கிலாந்தின் 3 முன்னணி பேட்ஸ்மேன்களை வீழ்த்தி அந்த அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். சமி அஹமதுவும் ஓரளவு சிறப்பாகவே பந்துவீசி வருகிறார். அனுபவ வீரரான இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சை இங்கிலாந்து பெüலர்கள் பதம்பார்த்தனர். அதனால் இந்த ஆட்டத்தில் அவருக்குப் பதிலாக திண்டாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம்.

  சுழற்பந்து வீச்சாளர்களில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோர் கடந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசியது குறிப்பிடத்தக்கது.

  இங்கிலாந்து அணி கேப்டன் குக், இயான் பெல், கெவின் பீட்டர்சன், இயோன் மோர்கன், ஜோ ரூட், கீஸ்வெட்டர், சமித் படேல் என 7 பேட்ஸ்மேன்களைக் கொண்டிருந்தாலும், கடந்த ஆட்டத்தில் பீட்டர்சன், சமித் படேல் தவிர அனைவரும் அடுத்தடுத்து வெளியேறியதால் படுதோல்வி கண்டது. எனினும் இந்த ஆட்டத்தில் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள், இந்தியாவின் பலவீனமான பந்துவீச்சைப் பயன்படுத்தி ரன் குவிக்க முயற்சிப்பார்கள்.

  வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஸ்டூவர்ட் பிராடுக்கு காயம் ஏற்பட்டிருப்பதால், ஸ்டீவன் ஃபின், டெர்ன்பார்ச், கிறிஸ் வோக்ஸ், டிம் பிரெஸ்னன் ஆகியோரை நம்பியே அந்த அணி உள்ளது. இந்த ஆட்டத்தில் கிறிஸ் வோக்ஸýக்குப் பதிலாக பிரெஸ்னன் சேர்க்கப்படலாம். சுழற்பந்து வீச்சில் டிரெட்வெல், சமித் படேல் கூட்டணி அந்த அணிக்கு பலம் சேர்க்கிறது. 

  அணி விவரம்

  இந்தியா: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, கெüதம் கம்பீர், விராட் கோலி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, அஸ்வின், புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா, சமி அஹமது, ரோஹித் சர்மா, சேதேஷ்வர் புஜாரா, அமித் மிஸ்ரா, அசோக் திண்டா.

  இங்கிலாந்து: அலாஸ்டர் குக் (கேப்டன்), இயான் பெல், கெவின் பீட்டர்சன், ஜோ ரூட், இயோன் மோர்கன், கிரேக் கீஸ்வெட்டர், சமித் படேல், கிறிஸ் வோக்ஸ், ஜேம்ஸ் டிரெட்வெல், ஸ்டீவன் ஃபின், ஜேட் டெர்ன்பார்ச், டிம் பிரெஸ்னன், டேனி பிரிக்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜோஸ் பட்லர், ஸ்டூவர்ட் மீக்கர்.

  சாதிப்பாரா தோனி? ராஞ்சியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் மண்ணின் மைந்தரான தோனி தலைமையில் இந்திய அணி களமிறங்குவது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  சொந்த ஊர் மக்கள் முன்னிலையில் இந்திய அணிக்கு தலைமை வகிப்பது மட்டுமின்றி, ராஞ்சியில் விளையாடும் கடைசி ஒருநாள் போட்டியாக இருக்கலாம் என்பதால் தோனியும் இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் பாராட்டைப் பெற முயற்சிப்பார்.

  தோனி கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம் உள்பட 307 ரன்கள் குவித்துள்ளார்.

  சொந்த ஊரில் போட்டி நடைபெறுவது குறித்துப் பேசிய தோனி, "இந்தப் போட்டியில் விளையாடுவதற்காக மிகுந்த ஆர்வமுடன் உள்ளேன். சொந்த ஊர் மக்கள் முன்னிலையில் விளையாடுவது மிகப்பெரிய விஷயம்' என்று தெரிவித்துள்ளார்.

  முதல் சர்வதேச போட்டி: இரு உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று தந்த கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெறவுள்ள முதல் சர்வதேசப் போட்டி இது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் இதற்கு முன்னர் ரஞ்சிப் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன.

  இந்த மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானதாகும். இங்கு கடைசியாக நடைபெற்ற இரு ரஞ்சி போட்டிகளில் இமாசல பிரதேசம், ஹைதராபாத் அணிகளுடன் ஜார்க்கண்ட் அணி மோதியுள்ளது. இரு ஆட்டங்களுமே டிராவில்தான் முடிந்துள்ளன. இதில் ஓர் இரட்டைச் சதம், 6 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.

  அதிகபட்சமாக ஹைதராபாத் அணி 492 ரன்கள் குவித்துள்ளது. இதனால் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே ரன் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

   

  தோனிக்கு காயம்
  வெள்ளிக்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கேப்டன் தோனிக்கு வலது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அடிபட்ட இடத்தில் ஐஸ் கட்டி வைத்திருந்தார்.

  எனினும் காயம் குறித்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிரச்னை ஏதுமில்லை. எக்ஸ்ரேகூட எடுக்கவில்லை. 3-வது ஒருநாள் ஆட்டத்தில் விளையாடுவார் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

   

  போட்டி நேரம்: மதியம் 12

  நேரடி ஒளிபரப்பு:

  ஸ்டார் கிரிக்கெட்,

  ஸ்டார் ஸ்போர்ட்ஸ்,

  இ.எஸ்.பி.என். தூர்தர்ஷன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai