சுடச்சுட

  
  jad

  இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா.

  முதலில் பேட் செய்த இங்கிலாந்து 42.2 ஓவர்களில் 155 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் ஆடிய இந்தியா 28.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

  ராஞ்சியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி, பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

  ஆடுகளம் ஈரப்பதத்தோடும், சிறிய அளவில் புற்கள் நிறைந்தும் காணப்பட்டதால் தோனி எதிர்பார்த்ததைப் போலவே ஆடுகளம் பெüலர்களுக்கு சாதகமாக அமைந்தது. இதனால் இங்கிலாந்தின் தொடக்க வீரர்களான அலாஸ்டர் குக்கும், இயான் பெல்லும் ரன் எடுக்கத் தடுமாறினர். குக் 17 ரன்கள் எடுத்திருந்தபோது எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு பீட்டர்சன் 17, பெல் 25 என அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேற இங்கிலாந்து தடுமாற்றம் கண்டது.

  இதையடுத்து ஜோ ரூட்-இயோன் மோர்கன் ஜோடி அணியைச் சரிவிலிருந்து மீட்கப் போராடியது. எனினும் மோர்கன் 10 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் வீசிய 24-வது ஓவரில் வீழ்ந்தார். அடுத்த ஓவரை வீசிய ஜடேஜா, கீஸ்வெட்டர், சமித் படேல் ஆகியோரை ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே வீழ்த்தினார். இதனால் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

  இதையடுத்து ஜோ ரூட்டுடன் இணைந்தார் பிரெஸ்னன். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்தது. 57 பந்துகளைச் சந்தித்த ரூட் 4 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பிரெஸ்னன் 25, ஸ்டீவன் பின் 3 ரன்களிலும், டெர்ன்பாச் ரன் ஏதுமின்றியும் வெளியேற இங்கிலாந்தின் இன்னிங்ஸ் 155 ரன்களில் முடிவுக்கு வந்தது.

  இந்தியத் தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

  அதிர்ச்சித் தொடக்கம்: பின்னர் பேட் செய்த இந்திய அணி 3-வது ஓவரில் அஜிங்க்யா ரஹானேவின் விக்கெட்டை இழந்தது. 4 பந்துகளைச் சந்தித்த அவர் ரன் ஏதுமின்றி நடையைக் கட்டினார்.

  இதையடுத்து கம்பீருடன் இணைந்தார் கோலி. அவர் வந்த வேகத்தில் டெர்ன்பாச் வீசிய 6-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை அடித்தார். இந்தியா 78 ரன்களை எட்டியபோது கம்பீர் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். 53 பந்துகளைச் சந்தித்த அவர் 4 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார்.

  கோலி அரைசதம்: இதன்பிறகு யுவராஜ் களம்புகுந்தார். இதனிடையே கோலி 58 பந்துகளில் அரைசதம் கடந்தார். இது அவருடைய 22-வது அரைசதம் ஆகும். எளிதான இலக்கு என்பதால் யுவராஜ் அதிரடியாக விளையாடினார். அவர் 30 ரன்கள் எடுத்திருந்தபோது டிரெட்வெல் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அவர் 21 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார்.

  தோனிக்கு பிரமாண்ட வரவேற்பு: இதையடுத்து மண்ணின் மைந்தனான தோனி களம்புகுந்தார். 39 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட இந்த மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி தோனிக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர்.

  அதே உற்சாகத்தில் ஸ்டீவன் ஃபின் வீசிய 29-வது ஓவரின் முதல் பந்தில் தோனி பவுண்டரி அடிக்க இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. விராட் கோலி 79 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 77, தோனி 12 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.

  இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது இந்தியா. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது ஆட்டம் வரும் 23-ம் தேதி மொஹாலியில் நடைபெறுகிறது.

  கோலி சாதனை: இந்த ஆட்டத்தில் விராட் கோலி 49 ரன்கள் எடுத்தபோது 4,000 ரன்களைக் கடந்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 4 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர்கள் வரிசையில் 2-வது இடத்தைப் பிடித்தார். 93-வது போட்டியில் விராட் கோலி 4,000 ரன்களை எட்டியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளின் விவியன் ரிச்சர்ட்ஸ் 88 போட்டிகளில் 4,000 ரன்களை எட்டியதே இன்றளவும் சாதனையாக உள்ளது.

  அணியில் மாற்றமில்லை: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரு ஆட்டங்களிலும் முதல் 3 ஆட்டங்களில் விளையாடிய அதே அணியே விளையாடும். எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

   

  போட்டித் துளிகள்

  இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய ஆட்டம் ராஞ்சி மைதானத்தில் நடைபெற்ற முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும். இதன்மூலம் ஒருநாள் போட்டியை நடத்திய இந்தியாவின் 42-வது மைதானம் என்ற பெருமை ராஞ்சிக்கு கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் இது 182-வது மைதானம் ஆகும்.

  *இந்தியாவுக்கு எதிராக 3-வது குறைந்தபட்ச ஸ்கோரைப் பதிவு செய்துள்ளது இங்கிலாந்து.

  * டாஸ் போடும் தருவாயில் விமானம் மூலம் வானில் கலர் புகை தூவி தோனிக்கு வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது.

  * சொந்த ஊர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடிய தோனி 3 கேட்ச்சுகளை பிடித்து அசத்தினார்.

   

  ஸ்கோர் போர்டு

  இங்கிலாந்து

   

  அலாஸ்டர் குக் எல்பிடபிள்யூ (பி) சமி அஹமது 17

  இயான் பெல் (சி) தோனி (பி) பி.குமார் 25

  கெவின் பீட்டர்சன் (சி) தோனி (பி) சர்மா 17

  ஜோ ரூட் (சி) தோனி (பி) சர்மா 39

  இயோன் மோர்கன் (சி) யுவராஜ் (பி) அஸ்வின் 10

  கீஸ்வெட்டர் (பி) ஜடேஜா 0

  சமித் படேல் எல்பிடபிள்யூ (பி) ஜடேஜா 0

  டிம் பிரெஸ்னன் (பி) அஸ்வின் 25

  ஜேம்ஸ் டிரெட்வெல் நாட் அவுட் 4

  ஸ்டீவன் ஃபின் (சி) யுவராஜ் (பி) ரெய்னா 3

  ஜேட் டெர்ன்பாச் (பி) ஜடேஜா 0

  உதிரிகள் 15

  மொத்தம் (42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு) 155

  விக்கெட் வீழ்ச்சி: 1-24 (குக்), 2-68 (பீட்டர்சன்), 3-68 (பெல்), 4-97 (மோர்கன்), 5-98 (கீஸ்வெட்டர்), 6-98 (படேல்), 7-145 (ரூட்), 8-145 (பிரெஸ்னன்), 9-155 (ஸ்டீவன் ஃபின்), 10-155 (டெர்ன்பாச்).

  பந்து வீச்சு: புவனேஸ்வர் குமார் 10-2-40-1, சமி அஹமது 8-0-23-1, இஷாந்த் சர்மா 7-0-29-2, ரவீந்திர ஜடேஜா 6.2-0-19-3,

  அஸ்வின் 10-0-37-2, சுரேஷ் ரெய்னா 1-0-1-1.

   

  இந்தியா

  கெüதம் கம்பீர் - (சி) ரூட் (பி) டிரெட்வெல் - 33

  அஜிங்க்யா ரஹானே - (பி) ஸ்டீவன் ஃபின் - 0

  விராட் கோலி - நாட் அவுட் - 77

  யுவராஜ் சிங் - (பி) டிரெட்வெல் - 30

  தோனி  - நாட் அவுட் - 10

  உதிரிகள் - 7

  மொத்தம் (28.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு) - 157

  விக்கெட் வீழ்ச்சி: 1-11 (ரஹானே), 2-78 (கம்பீர்),

  3-144 (யுவராஜ் சிங்).

  பந்து வீச்சு: ஸ்டீவன் ஃபின் 9.1-0-50-1, டெர்ன்பாச் 5-0-45-0,

  பிரெஸ்னன் 7-2-31-0, டிரெட்வெல் 7-1-29-2.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai