சுடச்சுட

  
  ten

  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

  போட்டித் தரவரிசையில் இல்லாதவரான பிரான்ஸின் ஜெர்மி சார்டி 6-3, 6-3, 6-7 (3), 3-6, 6-3 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவரான மார்ட்டினுக்கு அதிர்ச்சியை தோல்வியை அளித்தார்.  

  ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் இப் போட்டியில் 6-வது நாளான சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்றில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின், பிரான்ஸின் ஜெர்மி சார்டியை எதிர்கொண்டார்.

  விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சற்றும் எதிர்பாராத வகையில் முதல் இரு செட்களையும் 6-3, 6-3 என்ற கணக்கில் ஜெர்மி சார்டி கைப்பற்றினார். இதனால் பெரும் பின்னடைவைச் சந்தித்த ஜுவான் மார்ட்டின், டை பிரேக்கர் வரை சென்ற 3-வது செட்டை கடும் போராட்டத்துக்குப் பிறகு 7-6 (3) என்ற கணக்கில் தன் வசமாக்கினார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற 4-வது செட்டை ஜுவான் மார்ட்டின் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். எனினும் வெற்றியைத் தீர்மானிக்கும் 5-வது செட்டில் ஜுவான் மார்ட்டினின் ஆட்டம் எடுபடவில்லை. இதனால் அந்த செட்டை ஜெர்மி சார்டி 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

  ஃபெடரர் புதிய சாதனை: ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 6-4, 7-6 (5), 6-1 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் பெர்னாட் டாமிக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் தொடர்ந்து 12-வது ஆண்டாக காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியவர் என்ற பெருமையைப் பெற்றார் ஃபெடரர். டாமிக்கிற்கு எதிரான இந்த வெற்றி கிராண்ட் ஸ்லாம் போட்டியில் ஃபெடரருக்கு கிடைத்த 250-வது வெற்றியாகும். அவர் மொத்தம் 17 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். ஆஸ்திரேலிய ஓபனில் மட்டும் 4 முறை வாகை சூடியுள்ளார். 

  மற்றொரு ஆட்டத்தில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே 6-3, 6-4, 7-5 என்ற நேர் செட்களில் லிதுவேனியாவின் ரிகார்டஸ் பெரன்கிûஸ வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். 

  போட்டித் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள குரோஷியாவின் மரின்சிலிச் 7-6 (2), 3-6, 6-2, 4-6, 2-6 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 21-வது இடத்தில் உள்ள இத்தாலியின் ஆன்ட்ரேஸ் செப்பியிடம் தோல்வி கண்டார்.

  இதேபோல் ஜோ வில்பிரைட் சோங்கா, கனடாவின் மிலஸ் ரயோனிக் ஆகியோரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.

  அசெரன்கா, செரீனா வெற்றி: மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் நடப்புச் சாம்பியன் பெலாரஸின் விக்டோரியா அசெரன்கா 6-4, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜேமி ஹேம்ப்டனையும், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் ஜப்பானின் அயூமி மோரிடாவையும், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-4, 6-3 என்ற நேர் செட்களில் உக்ரைனின் லேசியாவையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்

  னேறினர்.

  3-வது சுற்றில் பூபதி-நெஸ்டர்: ஆடவர் இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் மகேஷ் பூபதி-கனடாவின் டேனியல் நெஸ்டர் ஜோடி முன்னேறியுள்ளது.

  போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்த ஜோடி தங்களின் 2-வது சுற்றில் 6-1, 7-6 (8) என்ற நேர் செட்களில் ருமேனியாவின் விக்டர் ஹனெஸ்கு-ஸ்லோவேகியாவின் மார்ட்டின் கிளிசன் ஜோடியை வீழ்த்தியது.

  பூபதி ஜோடி தங்களின் அடுத்த சுற்றில் இத்தாலியின் சைமன் போலெல்லி-ஃபேபியோ ஃபோகினி ஜோடியை சந்திக்கிறது. இத்தாலி ஜோடி தங்களின் 2-வது சுற்றில் 6-2, 7-6 (3) என்ற நேர் செட்களில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-அமெரிக்காவின் ராஜீவ் ராம் ஜோடிக்கு அதிர்ச்சி தோல்வியளித்தது.

  கலப்பு இரட்டையர் பிரிவு: கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ரஷியாவின் எலினா வெஸ்னினா ஜோடி 6-7 (8), 6-4, 10-7 என்ற செட் கணக்கில் பாகிஸ்தானின் குரேஷி-ஸ்வீடனின் சோஃபியா ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. பயஸ்-வெஸ்னினா ஜோடி அடுத்ததாக ஆஸ்திரேலியாவின் ஜர்மிலா-மேத்யூ எப்டென் ஜோடியை சந்திக்கிறது.

  இதேபோல் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-சீன தைபேவின் சூ-வெய் ஜோடியும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி தங்களின் முதல் சுற்றில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஆஷ்லெய்-ஜேக் சாக் ஜோடியை வீழ்த்தியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai