சுடச்சுட

  

  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

  முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 46.2 ஓவர்களில் 208 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து ஒரு கட்டத்தில் 9 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. எனினும் ஜேம்ஸ் பிராங்க்ளினுடைய சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி "த்ரில்' வெற்றி கண்டது. தென் ஆப்பிரிக்காவின் பார்ல் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் டூபிளெஸ்ஸிஸ் 57, மெக்லாரன் 33, இங்ரம் 29, கிளெய்ன்வெல்ட் 26 ரன்கள் எடுத்தனர்.

  மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறியதால் அந்த அணி 208 ரன்களுக்கு சுருண்டது.

  இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து அணியில் கப்டில் 0, நிகோல் 4, வில்லியம்சன் 5, பிரென்டன் மெக்கல்லம் 26, வாட்லிங் 45, எல்லியட் 1, நீஷாம் 0, நாதன் மெக்கல்லம் 24 ரன்களில் வெளியேற, அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் நியூஸிலாந்து தோல்வியில் இருந்து தப்ப முடியாது என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், 9-வது விக்கெட்டுக்கு ஜேம்ஸ் பிராங்க்ளின்-மில்ஸ் ஜோடி 47 ரன்கள் சேர்த்தது. மில்ஸ் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

  இதையடுத்து மெக்லேனாகென் களம்புகுந்தார். அப்போது நியூஸிலாந்தின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டன. ஒருபுறம் மெக்லேனாகென் பந்தை தடுத்து ஆட, மறுமுனையில் பிராங்க்ளின் அதிரடியாக விளையாடினார்.

  ஸ்டெயின் வீசிய 45-வது ஓவரில் பிராங்க்ளின் 2 பவுண்டரிகளை விரட்ட ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் தொடர்ந்து சிறப்பாக ஆடிய பிராங்க்ளின் மெக்லாரன் வீசிய அடுத்த ஓவரில் இரு பவுண்டரிகளை விளாச, நியூஸிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

  பிராங்க்ளின் 5 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் எடுத்தார். கடைசி 22 ரன்களையும் அவரே அடித்தார். மெக்லேனாகன் 15 பந்துகளைச் சந்தித்தபோதும் ரன் ஏதும் எடுக்கவில்லை. பிராங்க்ளின் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

  இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூஸிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஆட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

  டிவில்லியர்ஸூக்கு தடை: இந்த ஆட்டத்தில் பந்துவீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸýக்கு இரு ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நியூஸிலாந்துக்கு எதிரான அடுத்த இரு ஆட்டங்களிலும் அவர் விளையாட முடியாது.

  அந்த அணியின் அனைத்து வீரர்களுக்கும் போட்டி ஊதியம் முழுமையும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் முதல் ஆட்டத்தில் விளையாடியதற்கு எவ்வித ஊதியமும் கிடையாது.

  பந்துவீச வழங்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தில் தென் ஆப்பிரிக்கா 44 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  சுருக்கமான ஸ்கோர்

  தென் ஆப்பிரிக்கா-208

  (டூபிளெஸ்ஸிஸ் 57,

  மெக்லாரன் 33,

  மெக்லேனாகன் 4வி/20,

  வில்லியம்சன் 4வி/22)

  நியூஸிலாந்து-209/9

  (பிராங்க்ளின் 47*,

  வாட்லிங் 45,

  மெக்லாரன் 4வி/46)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai