சுடச்சுட

  
  spt2

  மெல்போர்ன், ஜன. 22: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிக்கு ஆடவர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் டேவிட் ஃபெரர் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

  மகளிர் பிரிவில் ரஷியாவின் மரியா ஷரபோவா, சீனாவின் லி நா ஆகிய வீராங்கனைகள் முன்னேறியுள்ளனர்.

  ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 9ஆவது நாளான செவ்வாய்க்கிழமை ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

  ஆடவர் பிரிவு: ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், போட்டித் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஜோகோவிச், தரவரிசையில் 5-ம் இடத்தில் உள்ள செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை எளிதாக கைப்பற்றினார் ஜோகோவிச்.

  ஆனால், 2-வது செட்டில் கடும் சவால் அளித்த பெர்டிச் 6-4 என்று கைப்பற்றினார். இதையடுத்து நடைபெற்ற 3-வது செட்டில் ஜோகோவிச்சின் கையே ஓங்கியிருந்தது.

  இந்த செட்டை முதல் செட்டைப் போல 6-1 என்ற கணக்கில் அவர் கைப்பற்றினார். 4-வது செட்டில் இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவியது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இந்த செட்டை 6-4 என்று கணக்கில் ஜோகோவிச் கைப்பற்றினார். இதனால், 6-1, 4-6, 6-1, 6-4 என்று செட் கணக்கில் ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தார்.

  போராடி வென்ற ஃபெரர்: மற்றொரு ஆடவர் காலிறுதிப் போட்டியில் தரவரிசையில் 4-ம் இடத்தில் உள்ள ஃபெரரும், 10ஆம் இடத்திலும் உள்ளவரும், சக நாட்டைச் சேர்ந்தவருமான நிகோலஸ் அல்மக்ரோவும் மோதினர். முதல் இரு செட்களை 6-4, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் அல்மக்ரோ கைப்பற்றினார். 3-வது செட்டையும் கைப்பற்றி அல்மக்ரோ வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், 7-5 என்ற புள்ளிக் கணக்கில் ஃபெரர் வென்றார். இது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 4-வது செட்டில் இருவரும் சமபுள்ளிகள் பெற ஆட்டம் டை பிரேக்கருக்குச் சென்றது. இறுதியில் 7-6(4) என்ற புள்ளி அடிப்படையில் நான்காவது செட்டை தன் வசமாக்கினார் ஃபெரர். வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஃபெரர் 6-2 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

  ரத்வான்ஸ்கா அதிர்ச்சித் தோல்வி: மகளிர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் நான்காம் இடத்தில் உள்ள அக்னீஸ்கா ரத்வான்ஸ்கா அதிர்ச்சித் தோல்வி கண்டார். இவரை, 5-7, 3-6 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் எளிதாக நுழைந்தார் சீனாவின் லி நா.

  ஷரபோவா சாதனை: மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள ஷரபோவாவும், 19-ம் இடத்தில் உள்ள சக நாட்டு வீராங்கனையான மகரோவாவும் மோதினர்.

  இதுவரை நடைபெற்ற ஆட்டத்தில் நேர் செட்களில் வெற்றி பெற்ற ஷரபோவா இந்த ஆட்டத்திலும் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் மகரோவாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். இந்த ஆட்டத்தை 1 மணி நேரம், 6 நிமிடங்களுக்குள் முடிவுக்குக் கொண்டு வந்தார் ஷரபோவா.

  இந்தப் போட்டியில் இதுவரை 5 சுற்றுகளில் விளையாடியுள்ள ஷரபோவா 9 கேம்களில் மட்டுமே எதிர் வீராங்கனையிடம் புள்ளியை இழந்துள்ளார். இது ஆஸ்திரேலிய ஓபனில் புதிய சாதனையாகும்.

  இதற்கு முன்னர் மோனிகா செலஸ் (1991) 12 கேம்களில் புள்ளிகளை இழந்து அரையிறுதிக்கு முன்னேறியதே சாதனையாக இருந்தது.

  மோனிகா செலஸின் 22 ஆண்டு கால சாதனையை ஷரபோவா இப்போது முறியடித்துள்ளார்.

  ஷரபோவா தனது அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் லி நாவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.

  பயஸ் ஜோடி தோல்வி: கலப்பு இரட்டைர் பிரிவு இரண்டாம் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ரஷியாவின் எலினா வெஸ்னீனா ஜோடி தோல்வி கண்டது. இந்த ஜோடி 3-6, 2-6 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் ஜர்மிலா கஜதோúஸாவா, மேத்யூ எப்டென் ஜோடியிடம் தோல்வி அடைந்தது.

  மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் மகேஷ் பூபதி, ரஷியாவின் பெட்ரோவா ஜோடி 3-6, 6-2, 10-5 என்ற செட் கணக்கில் ஸ்லேவோகியாவின் கத்ரீனா ஸ்ரிபோட்னிக், செர்பியாவின் நீனத் ஜிமோன்ஜிக் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

  காலிறுதி ஆட்டங்கள்: புதன்கிழமை நடைபெறவுள்ள காலிறுதி ஆட்டத்தில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் பெடரர், 7-ம் இடத்தில் உள்ள பிரான்ஸின் சோங்கோவை எதிர்கொள்கிறார். மற்றொரு ஆட்டத்தில் 3-ம் இடத்தில் உள்ள பிரிட்டனின் முர்ரே, பிரான்ஸின் ஜெர்மி சார்டியுடன் மோதவுள்ளார்.

  மகளிர் பிரிவில், பெலாரஸின் அசெரன்காவும், ரஷியாவின் குஸ்னெட்சோவாவும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸýம், சக நாட்டைச் சேர்ந்த ஸ்லோனே ஸ்டெஃப்னெஸýடன் மோதுகிறார்.

  கலப்பு இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, திபெத்தின் ஸý வெ ஹெய்க் ஜோடி செக் குடியரசின் குவெடா பெஸ்கீ, போலந்தின் மர்சின் மட்கோவ்ஸ்கி ஜோடியுடன் மோதவுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai