சுடச்சுட

  
  murray

  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு பிரிட்டனின் ஆன்டி முர்ரே, சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஆகியோர் முன்னேறினர்.

  மகளிர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், பெலாரஸின் விக்டோரியா அசரென்கா ஆகிய வீராங்கனைகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 8ஆவது நாளான திங்கள்கிழமை காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

  இதில், போட்டித் தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள முர்ரேவும், 14-வது இடத்தில் உள்ள பிரான்சின் ஜில்லிஸ் சைமனும் மோதினர். ஆட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தினார் முர்ரே. இதனால் அவர், 6-3, 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

  மற்றொரு முக்கியமான ஆட்டத்தில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரோஜர் பெடரரும், 13-வது இடத்தில் உள்ள மில்ஸ் ரயோனிக்கும் மோதினர். இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் முதல் செட்டைக் கைப்பற்ற இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் பெடரர் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை தன் வசப்படுத்தினார்.

  2ஆவது செட்டில் பெடரருக்கு கடும் சவால் அளித்தார் ரயோனிக். அதனால் இந்த ஆட்டம் டை பிரேக்கருக்குச் சென்றது. இறுதியில் பெடரர் 7-6 என்ற புள்ளிக்கணக்கில் இந்த செட்டையும் கைப்பற்றினார். 3ஆவது செட்டில் மிகவும் களைப்படைந்த ரயோனிக், பெடரரின் ஆட்டத்துக்கு ஈடு அளிக்க முடியாமல் திணறினார். அதனால் இந்த செட்டையும், 6-2 என்ற புள்ளிக் கணக்கில் வென்று காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் பெடரர்.

  மகளிர் பிரிவு: மகளிர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனும், போட்டித் தரவரிசையில் முதலாவது இடத்தில் உள்ளவருமான அசரென்கா 6-1, 6-1 என்ற நேர் செட்களில் ரஷியாவின் எலினா வெஸ்னினாவை வீழ்த்தி காலிறுதிக்கு எளிதாக முன்னேறினார்.

  மற்றொரு ஆட்டத்தில், சாம்பியன் பட்டம் வெல்வார் என்று மிகவும் எதிர்பார்க்கப்படும் செரீனா வில்லியம்ஸ் போட்டித் தரவரிசையில் 13ஆவது இடத்தில் உள்ள ரஷியாவின் மரியா கிரிலென்கோவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் 6-2, 6-0 என்ற நேர் செட்களில் கிரிலென்கோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் செரீனா.

  அதேசமயம், போட்டித் தரவரிசையில் 10ஆவது இடத்தில் உள்ள டென்மார்கின் வோஸ்னியாகி, போட்டித் தரவரிசையில் இல்லாத ரஷியாவின் குஸ்னெட்சோவாவிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார். 2 மணி நேரம் 28 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-6, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் குஸ்னெட்சோவா வெற்றி பெற்றார்.

  இரட்டையர் பிரிவு: ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி மற்றும் கனடாவின் டேனியஸ் நெஸ்டர் ஜோடி 3-6, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் இல்லாத இத்தாலியின் சிமோன் பொலில்லீ மற்றும் ஃபேபியோ ஃபோக்னினி ஜோடியிடம் தோல்வியடைந்தது. இதன்மூலம் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியர்களின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

  கலப்பு இரட்டையர் பிரிவு: இந்தப் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா, அமெரிக்காவின் பாப் பிரையன் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது. போட்டித் தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள இந்த ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்காவைச் சேர்ந்த அபிகெய்ல் ஸ்பியர்ஸ், ஸ்காட் லிப்ஸ்கி ஜோடியை 4-6, 6-1, 10-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.

  தங்களது காலிறுதி ஆட்டத்தில் செக் குடியரசைச் சேர்ந்த லூசி ஹர்டெகா, செர்மக் ஜோடியுடன் சானியா ஜோடி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

  மற்றொரு ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்தியாவின் ரோஹன் போபண்ணா, திபெத்தின் ஸý வெ ஹெய்க் ஜோடியும் காலிறுதிக்கு முன்னேறியது.

  காலிறுதி ஆட்டங்கள்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவக் ஜோகோவிச்சும், 5-வது இடத்தில் உள்ள செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சும் மோதுகின்றனர். மற்றொரு ஆட்டத்தில் 4-வது இடத்தில் உள்ள டேவிட் ஃபெரரும், 10-வது இடத்தில் உள்ள நிகோலஸ் அல்மக்ரோவும் மோதுகின்றனர். இவர்களிருவரும் ஸ்பெயினைச் சேர்ந்தவர்கள்.

  மகளிர் ஒற்றையர் பிரிவில் சீனாவின் லினாவும், போலந்தின் அக்னிஸ்கா ரட்வான்ஸ்காவும் மோதுகின்றனர். மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரஷியாவின் மரியா ஷரபோவா, சக நாட்டு வீராங்கனையான மகரோவாவை எதிர்கொள்கிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai