சுடச்சுட

    
    spt3

    இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை இந்தியா கைப்பற்றுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

    இங்கிலாந்துக்கு எதிராக முதல் ஆட்டத்தில் தோல்வியுற்ற இந்திய அணி, அடுத்த இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது.

    இந்நிலையில் 4-வது ஒருநாள் ஆட்டம் பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் புதன்கிழமை நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரைக் கைப்பற்றி அணியின் மீதுள்ள விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஒருவேளை இங்கிலாந்து வெற்றி பெறும் பட்சத்தில் தொடர் சமநிலை பெற்று 5ஆவது ஒருநாள் ஆட்டம் முக்கியத்துவம் பெறும். அதனால் இந்திய வீரர்கள் இப்போட்டியில் வெற்றியைப் பதிவு செய்து தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் போராடுவர் என்பதில் சந்தேகமில்லை.

    இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி கடைசி இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது புதிய தெம்பை அளித்தாலும், தொடக்கம் சரியில்லாதது அணிக்குப் பின்னடைவாக உள்ளது.

    முதல் ஒருநாள் ஆட்டத்தைத் தவிர மற்ற இரு ஆட்டங்களிலும் இந்தியாவின் தொடக்க வீரர்கள் விரைவிலேயே வெளியேறியது பின் வரிசை வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமைந்தது. அதே சமயம் இங்கிலாந்து அணியுடன் ஒப்பிடுகையில் இந்திய பேட்டிங் வலுவான நிலையிலே உள்ளது. கம்பீரின் தொடக்கம் ஓரளவு சிறப்பாக இருந்தபோதும் அதிக ரன் குவிக்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    மற்றொரு வீரரான ரஹானே மோசமான ஃபார்மில் உள்ளார். அதனால், இப்போட்டியில் அவருக்குப் பதிலாக புஜாராவுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால் இளம் வீரரான புஜாரா எந்த அளவுக்கு சிறப்பான தொடக்கத்தை அளிப்பார் என்ற சந்தேகம் நிலவுகிறது.

    நடுகள வீரர்கள் சரியாக ஜொலிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சமீபகாலமாக கூறப்பட்டு வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் கோலி. அவர், கடந்த போட்டியில் 77 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்ததுடன் ஃபார்முக்குத் திரும்பியுள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அதிரடி வீரர் யுவராஜ் சிங் அதிரடி காட்டினாலும் களத்தில் நீண்ட நேரம் நிற்காதது வருத்தம் அளிப்பதாக உள்ளது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரு துறைகளிலும் அசத்தி வரும் ரவீந்திர ஜடேஜா, இந்த ஆட்டத்திலும் தனது பங்களிப்பை அளிக்கும் பட்சத்தில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றி விடும்.

    கடந்த ஆட்டங்களில், வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்குமார் மற்றும் சமி அஹமது ஆகியோர் இங்கிலாந்து அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களை விரைவில் வெளியேற்றி நெருக்கடி அளித்தனர். அதனால் இந்திய வேகப்பந்து வீச்சை சமாளிக்க வேண்டிய கட்டாயத்துக்குள் உள்ளது அந்த அணி.

    கடந்த இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணியை மாற்ற வேண்டாம் என்று அணி நிர்வாகம் கருதுகிறது. அதனால் அந்த அணியே களமிறக்கப்படும் என்று தெரிகிறது.

    நெருக்கடியில் இங்கிலாந்து அணி: தொடர்ந்து இரு ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவிய இங்கிலாந்து அணி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. 4ஆவது ஆட்டத்தில் வெற்றி பெற்றால்தான் தொடர் கை நழுவிப்போகாது என்ற இக்கட்டான சூழலில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது.

    அந்த அணியின் பேட்டிங் பலவீனமாக உள்ளது தோல்விக்குக் காரணமானது.

    பெல் நம்பிக்கை: தோல்வியிலிருந்து மீண்டு வெற்றி பெறுவோம் என்று அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேனான இயான் பெல் தெரிவித்துள்ளார். இது அணி வீரர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. இதே கருத்தை அந்த அணி கேப்டன் குக்கும் கூறியுள்ளார். கடந்த போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்காதது அந்த அணிக்குப் பாதகமான முடிவை அளித்தது. குறிப்பாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள அந்த அணி வீரர்கள் தடுமாறுகின்றனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைத் தக்க வைத்து இங்கிலாந்து வீரர்கள் போராடுவர் என்பதில் ஐயமில்லை.

    தோனிக்கு காயம்

    நான்காம் ஒருநாள் ஆட்டத்தை முன்னிட்டு வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கேப்டன் தோனிக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது. அதனால், மருத்துவர்கள் விரைந்து வந்து சிகிச்சை அளித்தனர். இதைத் தொடர்ந்து மேலும் பத்து நிமிடங்கள் சுழற்பந்து வீச்சில் பயிற்சி பெற்ற தோனி பின்னர் வெளியேறினார். தோனிக்கு பெரிய பாதிப்பு ஏதுமில்லை என்று அணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    அதே சமயம், அதிரடி வீரர் யுவராஜ் சிங் தொண்டைப் புண் காரணமாக பயிற்சியில் ஈடுபடவில்லை. எனினும் புதன்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் பங்கேற்க அவருக்கு உடற்தகுதி உள்ளது என்று அணி நிர்வாகம் தெரிவித்தது.

    போட்டி நேரம்: மதியம் 12

    நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், இ.எஸ்.பி.என். தூர்தர்ஷன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai