சுடச்சுட

  
  spt2

  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் பெலாரஸின் விக்டோரியா அசெரன்கா-சீனாவின் லீ நா ஆகியோர் மோதுகின்றனர். இந்த ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

  ஷரபோவா அதிர்ச்சித் தோல்வி: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் இப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சீனாவின் லீ நா, தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரான ரஷியாவின் மரியா ஷரபோவாவை எதிர்கொண்டார்.

  இந்த ஆட்டத்தில் ஷரபோவா வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அபராமாக ஆடிய லீ நா 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ஷரபோவாவைத் தோற்கடித்தார்.

  கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்ற முதல் ஆசிய வீராங்கனை என்ற பெருமைக்குரியவரான லீ நா, இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபனின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். முன்னதாக 2011 பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்றதன் மூலம் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார் லீ நா.

  வெற்றி குறித்து லீ நா கூறுகையில், "ஆட்டத்தின் தொடக்கத்தில் சற்று பதற்றத்தோடு இருந்தேன். எனினும் அரையிறுதிக்கு முன்னேறியதால் மகிழ்ச்சியோடு இருந்தேன். சில காரணங்களுக்காக இந்த அரையிறுதியில் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினேன். எனினும் அரையிறுதியில் என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது. சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எண்ணத்தோடு களமிறங்கிறேன். டென்னிஸ் விளையாட ஆரம்பித்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன்' என்றார்.

  அசரென்காவால் சர்ச்சை: மற்றொரு அரையிறுதியில் நடப்புச் சாம்பியனான பெலாரஸின் விக்டோரியா அசரென்காவும், அமெரிக்காவின் இளம் வீராங்கனையான ஸ்லேன் ஸ்டீபென்ஸýம் மோதினர்.

  இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றிய அசரென்கா, 2-வது செட்டில் 5-3 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.

  அடுத்த கேமில் 5 "மேட்ச் பாயிண்ட்களை' இழந்ததால் தனது சர்வீûஸ ஸ்டீபென்ஸிடம் இழந்தார் அசரென்கா.

  இதையடுத்து மூச்சுவிடுவதில் ஏற்பட்ட பிரச்னை, முழங்கால் மற்றும் விலா எலும்பு பகுதியில் ஏற்பட்ட வலி ஆகியவற்றுக்காக 10 நிமிடங்கள் மைதானத்தை விட்டு வெளியில் சென்று சிகிச்சை பெற்ற அசரென்கா, மீண்டும் களமிறங்கி அதிரடியாக விளையாடி 6-4 என்ற கணக்கில் 2-வது செட்டை வென்றார். இதன்மூலம் அவர் இறுதிச்சுற்றையும் உறுதி செய்தார்.

  ஆனால் அவர் பின்னடைவைச் சந்தித்தபோது மைதானத்திற்கு வெளியில் சென்று சிகிச்சை பெற்றது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தோற்றுவிடுவோம் என்ற பயத்தின் காரணமாகவே அவர் மருத்துவ சிகிச்சை எடுப்பதாகக் கூறினார். எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காத வகையில் விதிமுறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் மைதானத்திற்குள்ளேயே சிகிச்சை பெற வேண்டும். முடியாதபட்சத்தில் அவர் போட்டியிலிருந்து விலக வேண்டும். முன்னணி வீராங்கனை ஒருவருக்காக விதிமுறையை வளைத்திருக்கிறார்கள். இது முற்றிலும் ஒரு தரப்பு இறுதி ஆட்டம் என்று ஏராளமானோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

  இது குறித்து அசரென்கா கூறுகையில், "நான் மேட்ச் பாயிண்ட்களை இழந்திருக்கக்கூடாது. இழந்ததால் சற்று தடுமாறினேன். மூச்சுவிடவும் தடுமாறினேன். எனினும் சிறப்பாக விளையாடி வெற்றி கண்டது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.

  சனிக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் அசரென்கா பட்டம் வெல்லும் பட்சத்தில், தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துக் கொள்வார்.

  பூபதி, சானியா ஜோடிகள் தோல்வி: கலப்பு இரட்டையர் காலிறுதியில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தியாவின் மகேஷ் பூபதி-ரஷியாவின் நடியா பெட்ரோவா ஜோடி தங்களின் காலிறுதிச் சுற்றில் 3-6, 6-3, 11-13 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜார்மிலா-மேத்யூ எப்டென் ஜோடியிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.

  இதேபோல் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சானியா மிர்சா-அமெரிக்காவின் பாப் பிரையன் ஜோடி தங்களின் காலிறுதிச் சுற்றில் 5-7, 4-6 என்ற நேர் செட்களில் தரவரிசையில் இல்லாத செக்.குடியரசின் லூஸி ரடேக்-ஃபிரான்டிசெக் செர்மாக் ஜோடியிடம் தோல்வி கண்டது.

  இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் இந்தியர்களின் ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது.

   

  டேவிட் ஃபெரரை வெளியேற்றினார் ஜோகோவிச்

   

  ஆடவர் ஒற்றையர் அரையிறுதிச் சுற்றில் நடப்புச் சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-2, 6-2, 6-1 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் டேவிட் ஃபெரரை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

  இதன்மூலம் தொடர்ந்து 3-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபனின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார் ஜோகோவிச். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே அல்லது ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை சந்திப்பார் ஜோகோவிச்.

  இந்த முறை ஜோகோவிச் பட்டம் வெல்லும் பட்சத்தில், ஆஸ்திரேலிய ஓபன் வரலாற்றில் தொடர்ந்து 3 முறை பட்டம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.

  அரையிறுதி வெற்றி குறித்து ஜோகோவிச் கூறுகையில், "டேவிட் ஃபெரரின் திறமை குறித்து நன்கு அறிந்து வைத்துள்ளேன். அதனால் அவருக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் மிகுந்த ஆற்றலோடு விளையாட விரும்பினேன். என்னுடைய டென்னிஸ் வாழ்க்கையில் நான் விளையாடிய சிறந்த ஆட்டங்களில் ஃபெரருடனான ஆட்டமும் ஒன்று. இந்த ஆஸ்திரேலிய ஓபனில் மிகச்சிறந்த வீரர்களுள் ஃபெரரும் ஒருவர். கடந்த சில ஆண்டுகளாகவே எதிர் வீரருக்கு கடும் சவாலை அளித்து வருகிறார் டேவிட் ஃபெரர்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai