சுடச்சுட

  
  spt2

  இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 ஒரு நாள் ஆட்டம் கொண்ட இத்தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

  இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 257 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட் செய்த இந்திய அணி 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

  மொஹாலியில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணித் தரப்பில் தொடக்க வீரர் ரஹானேவுக்குப் பதிலாக ரோஹித் சர்மா களமிறக்கப்பட்டார். அதேபோல் இங்கிலாந்து அணியில் கிரேக் கீஸ்வெட்டருக்குப் பதிலாக ஜோஸ் பட்லர் சேர்க்கப்பட்டார்.

  கேப்டன் குக்கும், இயான் பெல்லும் இங்கிலாந்து அணியின் இன்னிங்ûஸத் தொடங்கினர். 10 ரன்கள் எடுத்திருந்தபோது பெல் ஆட்டமிழந்தார். பின்னர் பீட்டர்சனுடன் ஜோடி சேர்ந்தார் குக். இந்த ஜோடி பொறுமையாக ஆடி ரன்களைச் சேர்ந்தது. இதனால் அணியின் ஸ்கோர் நிதானமாக உயர்ந்தது. சிறப்பாக ஆடிய இருவரும் அரை சதத்தைக் கடந்தனர்.

  நீண்ட நேரம் விளையாடிய இந்த ஜோடியை பிரிக்க இந்திய பந்து வீச்சாளர்கள் பல்வேறு முறைகளைக் கையாண்டனர். இறுதியில் அதற்குப் பலனும் கிடைத்தது. அஸ்வின் வீசிய 31.5-வது ஓவரில் 76 ரன்கள் எடுத்திருந்த குக் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்தனர். 76 ரன்கள் எடுத்திருந்த பீட்டர்சனும் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.

  மற்ற வீரர்கள் குறைவான ரன்களில் ஆட்டமிழந்த போதும் ரூட் ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் எடுத்தது. கடைசி 10 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை வாரி வழங்கியது. இங்கிலாந்து அணி வீரர் ரூட்டின் அதிரடியை இந்திய பந்து வீச்சாளர்காள் கட்டுப்படுத்த முடியவில்லை.

  இந்தியத் தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

  இந்தியா வெற்றி: 258 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து களமிறங்கியது இந்திய அணி. தொடக்க வீரர் ரஹானேவுக்குப் பதிலாக கம்பீருடன் ரோஹித் களமிறங்கினார். தோனியின் இந்த முடிவு மிகச் சரியாக அமைந்தது. 10 ரன்கள் எடுத்திருந்தபோது கம்பீர் ஆட்டமிழந்தார்.

  பின்னர் களமிறங்கிய கோலி, சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். சிறிது நேரம் இந்த ஜோடி ஆடியது. 26 ரன்களில் எடுத்திருந்தபோது கோலி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய உள்ளூர் நாயகனான யுவராஜ் 3 ரன்களில் வெளியேற, ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார் சர்மா. இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது.

  சிறப்பாக விளையாடிய சர்மா 73 பந்துகளில் அரை சதமடித்தார். அணியின் ஸ்கோர் 158 ஆக உயர்ந்தபோது 83 ரன்கள் எடுத்திருந்த சர்மா ஆட்டமிழந்தார். 93 பந்துகளைச் சந்தித்த அவர் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார். முன்னதாக, 12 ரன்கள் எடுத்திருந்தபோது, சர்மா கொடுத்த கேட்சை கோட்டை விட்டார் பீட்டர்சன்.

  வாழ்வு பெற்ற ரெய்னா: 35-வது ஓவரை ஃபின் வீசினார். அப்போது பேட் செய்த ரெய்னா, குக்கிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால், இது அவுட்டில்லை என்று நடுவர் தீர்ப்பளித்தார். டிவி ரீப்ளேயில் பார்க்கும்போது பந்து வீசிய ஃபின், ஸ்டம்ப் மீதுள்ள பெய்ல்ûஸ தட்டி விட்டது தெரிய வந்தது.

  நடுவரின் தீர்ப்பை எதிர்த்து கேப்டன் குக் வாதாடினார். இருப்பினும் பலனில்லை. இதையடுத்து சிறப்பாக விளையாடிய ரெய்னா 46 பந்துகளில் அரை சதமடித்தார். மறுமுனையில் மெதுவாக ஆடி வந்த தோனி 19 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த ரெய்னா, அணியை 47.3 ஓவரில் வெற்றி பெற வைத்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் ரெய்னா 89 ரன்களையும் (79 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகள்), ஜடேஜா 21 ரன்களையும் எடுத்தனர்.

  ஆட்டநாயகன்: இறுதிவரை போராடி அணியை வெற்றி பெற வைத்த சுரேஷ் ரெய்னா ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

  இரு அணிகளுக்கிடையேயான 5-வது மற்றும் கடைசிப் போட்டி இமாசல பிரதேச மாநிலம், தர்மசாலாவில் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.

  விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி: இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியதன் மூலம் அணி மற்றும் கேப்டன் தோனியின் மீதான விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தது. இப்போது அதற்கு இந்திய அணி தக்க பதிலடி அளித்துள்ளது.

  இந்த வெற்றி குறித்து தோனி கூறுகையில், "அனைத்து வீரர்களும் சிறப்பாகச் செயல்பட்டனர். ரோஹித் சர்மா, ரெய்னா ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது. ரோஹித்தின் ஆட்டம் வியக்க வைக்கும் வகையில் இருந்தது. அவர், அணிக்கு கிடைத்த பொக்கிஷம். இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பீல்டிங் சிறப்பாக இருந்தது' என்று தெரிவித்தார்.

  தரவரிசை: ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தரவரிசையில் 120 புள்ளிகளைப் பெற்று, இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. இந்தியாவை விட 3 புள்ளிகள் பின்தங்கியுள்ள இங்கிலாந்து அணி 2-ம் இடத்திலும், 113 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி 3-ம் இடத்திலும் உள்ளன.

   

  ஸ்கோர் போர்டு

   

  இங்கிலாந்து

  விக்கெட் வீழ்ச்சி: 1-37 (பெல்), 2-132 (குக்), 3-138 (மோர்கன்), 4-142 (படேல்), 5-220 (பீட்டர்சன்), 6-241 (பட்லர்), 7-241 (பிரெஸ்னன்).

  பந்து வீச்சு: புவனேஸ்வர் குமார் 10-2-30-0, சமி அஹமது 8-0-58-0, இஷாந்த் சர்மா 10-2-47-2, அஸ்வின் 10-0-63-2,

  ரவீந்திர ஜடேஜா 10-2-39-3, சுரேஷ் ரெய்னா 2-0-10-0.

  இந்தியா

  விக்கெட் வீழ்ச்சி: 1-20 (கம்பீர்), 2-72 (கோலி), 3-90 (யுவராஜ் சிங்), 4-158 (சர்மா), 5-213 (தோனி).

  பந்து வீச்சு: ஸ்டீவன் ஃபின் 10-1-39-1, பிரெஸ்னன் 10-1-59-1, டெர்ன்பாச் 9.3-0-59-1, படேல் 3-0-21-0, டிரெட்வெல் 10-0-54-2, ரூட் 5-0-24-0.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai