சுடச்சுட

  

  பாட்மிண்டன் அணி தேர்வு விவகாரம்: சிறிய பிரச்னைகளுக்காக சண்டையிடாதீர்கள்: நீதிமன்றம்

  By dn  |   Published on : 24th January 2013 11:07 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முக்கியத்துவம் அல்லாத சிறிய பிரச்னைகளுக்காக சண்டையிடுவதைத் தவிர்த்து, விளையாட்டுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று இந்திய பாட்மிண்டன் சங்கம் மற்றும் வீரர், வீராங்கனைகளுக்கு மும்பை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

  அடுத்து வரக்கூடிய சர்வதேச பாட்மிண்டன் போட்டிகளுக்கு மகளிர் இரட்டையர் பிரிவில் ஜுவாலா கட்டா-சவந்த் ஜோடியை அனுமதிப்பது தொடர்பாக இந்திய பாட்மிண்டன் சங்கம் பரிசீலிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  19 வயது பாட்மிண்டன் வீராங்கனையான சவந்த், "இந்திய அணியின் பயிற்சியாளரான கோபிசந்த், ஹைதராபாதில் நடைபெற்ற தேசிய பாட்மிண்டன் பயிற்சி முகாமுக்கு என்னை அனுமதிக்காமல் எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தினார். பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினராக இருக்கும் கோபிசந்த், அவருடைய சொந்த அகாதெமியைச் சேர்ந்தவர்களை அணியில் சேர்க்க முயற்சிக்கிறார்' என்று கூறி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

  இது தொடர்பான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி மோஹித் ஷா மற்றும் நீதிபதி ஏ.வி.மோக்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

  அப்போது சவந்த் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "ஜெர்மன் ஓபன், ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டிகளில் மகளிர் இரட்டையர் பிரிவில் ஜுவாலா கட்டாவுடன் இணைந்து விளையாட அனுமதிக்குமாறு இந்திய பாட்மிண்டன் சங்கத்திடம் சவந்த் விண்ணப்பம் செய்துள்ளார்' என்று தெரிவித்தார்.

  இதையடுத்து "ஒரு போட்டியில் விளையாட தன்னை அனுமதிக்குமாறு ஒரு வீரரோ, வீராங்கனையோ இந்திய பாட்மிண்டன் சங்கத்திடம் நேரடியாக விண்ணப்பம் செய்ய முடியாது. ஜுவாலா, சவந்த் இருவரும் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் வாரியத்தைச் சேர்ந்தவர்கள். அதன் மூலமாகவே அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்' என்று இந்திய பாட்மிண்டன் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

  இதைக் கேட்ட நீதிபதிகள், "ஜெர்மன் ஓபன், ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியில் விளையாட விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 29-ம் தேதி. அதனால் அவர்கள் இருவரும் தாங்கள் சார்ந்த சங்கத்தின் மூலம் விண்ணப்பிக்க சாத்தியமில்லை. எனவே அவர்கள் இருவரையும் மேற்கண்ட போட்டிகளில் விளையாட அனுமதிப்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும்' என்று இந்திய பாட்மிண்டன் சங்கத்துக்கு உத்தரவிட்டனர்.

  மேலும், "கடந்த 6 மாதங்களாக சவந்தை எந்தப் போட்டியிலும் விளையாட அனுமதிக்கவில்லை. ஏன் அவரின் பாட்மிண்டன் வாழ்க்கையையும், பாட்மிண்டன் போட்டியையும் அழிக்க நினைக்கிறீர்கள்? ஏன் விளையாட்டு சங்கமும், வீரர், வீராங்கனைகளும் இப்படி சண்டை போடுகிறீர்கள்? இதனால் விளையாட்டுதான் அழியும்' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai