சுடச்சுட

  
  spt2

  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் பிரிட்டனின் ஆன்டி முர்ரே.

  ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் நடப்புச் சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை சந்திக்கிறார் முர்ரே. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் இப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் ஆன்டி முர்ரே கடும் போராட்டத்துக்குப் பிறகு 6-4, 6-7 (5), 6-3, 6-7 (2), 6-2 என்ற செட் கணக்கில் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தினார். சரியாக 4 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே இருவரும் அபாரமாக ஆடினர். எனினும் 45 நிமிடங்கள் நடைபெற்ற முதல் செட்டை முர்ரே 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

  இதையடுத்து நடைபெற்ற 2-வது செட்டை பிடிக்க ஃபெடரர் கடுமையாகப் போராடினார். இதனால் இந்த செட் டைபிரேக்கருக்கு சென்றது. 58 நிமிட போராட்டத்துக்குப் பிறகு இந்த செட்டை ஃபெடரர் 7-6 (5) என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன்பிறகு நடைபெற்ற 3-வது செட்டில் ஃபெடரரின் சர்வீûஸ முறியடித்த முர்ரே, அந்த செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி 36 நிமிடங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தார். இந்த நிலையில் 4-வது செட்டில் ஃபெடரர் விடாப்பிடியாக போராடவே, அது டைபிரேக்கருக்கு சென்றது. இதில் அபாரமாக ஆடிய ஃபெடரர் 7-6 (2) என்ற கணக்கில் அந்த செட்டை தன்வசமாக்கினார்.

  இந்த செட் ஒரு மணி நேரம் 11 நிமிடங்கள் நடைபெற்றது.

  இதன்பிறகு நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 5-வது செட்டில் ஆக்ரோஷமாக ஆடிய முர்ரே, அதில் ஃபெடரரின் இரு சர்வீஸ்களை முறியடித்து 6-2 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றி வாகை சூடினார். 5-வது செட் 30 நிமிடங்கள் நடைபெற்றது.

  21 ஏஸ் சர்வீஸ்கள்: இந்த ஆட்டத்தில் முர்ரே மொத்தம் 21 ஏஸ் சர்வீஸ்களை அடித்தார். அதேநேரத்தில் ஃபெடரர் 5 ஏஸ் சர்வீஸ்களை மட்டுமே அடித்தார். ஃபெடரர் இரு டபுள்பால்ட் தவறுகளை செய்தாலும், முர்ரே தவறேதும் செய்யவில்லை. முர்ரே தசைப்பிடிப்பால் அவதிப்பட்டபோதிலும், அதிகபட்சமாக மணிக்கு 215 கி.மீ. வேகத்திலும், சராசரியாக 192 கி.மீ. வேகத்திலும் சர்வீஸ் அடித்தார். ஃபெடரர் அதிகபட்சமாக மணிக்கு 205 கி.மீ. வேகத்திலும், சராசரியாக 186 கி.மீ. வேகத்திலும் சர்வீஸ் அடித்தார்.

  3-வது முறையாக... பிரிட்டனின் ஆன்டி முர்ரே மூன்றாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் 3 முறை ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் பிரிட்டன் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். ஒட்டுமொத்தமாக 6-வது கிராண்ட் ஸ்லாம் இறுதிச்சுற்றில் விளையாடவிருக்கிறார் முர்ரே.

  ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் ஜோகோவிச்சை சந்திக்கிறார் முர்ரே. முன்னதாக கடந்த அமெரிக்க ஓபன் இறுதிச்சுற்றில் முர்ரே, ஜோகோவிச்சை வீழ்த்தி தனது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார். அதற்கு ஜோகோவிச் பதிலடி கொடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  மகளிர் இரட்டையர் பிரிவில் இத்தாலி ஜோடி சாம்பியன்

  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இத்தாலியின் சாரா எர்ராணி-ராபெர்ட்டா வின்ஸி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. சர்வதேச தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இத்தாலி ஜோடி வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் 6-2, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லெய் பேர்ட்டி-கேஸி டெல்லாக்வா ஜோடியை தோற்கடித்தது.

  கலப்பு இரட்டையர்: கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் ஜர்மிலா-மேத்யூ எப்டென் ஜோடி 7-5, 7-6 (5) என்ற நேர் செட்களில் கஜகஸ்தானின் யாரோஸ்லாவா-உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமின் ஜோடியை வீழ்த்தியது.

  இந்த ஜோடி தங்களின் இறுதிச்சுற்றில் செக்.குடியரசின் லூஸி ரடேகா-ஃபிரான்டிசெக் செர்மாக் ஜோடியை சந்திக்கிறது. செக்.குடியரசு ஜோடி தங்களின் அரையிறுதிச் சுற்றில் செக்கோஸ்லோவாகியாவின் வீட்டா பெஸ்கே-போலந்தின் மார்சின் மட்கோவ்ஸ்கி ஜோடியை தோற்கடித்தது.

  ஆடவர் இரட்டையர்: சனிக்கிழமை நடைபெறவுள்ள ஆடவர் இரட்டையர் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் பாப் பிரையன்-மைக் பிரையன் சகோதரர்கள் ஜோடி, நெதர்லாந்தின் ராபின் ஹேஸி-இகர் சிஸ்லிங் ஜோடியை சந்திக்கிறது.

  இதேபோல் மகளிர் ஒற்றையர் ஆட்டமும் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் பெலாரஸின் விக்டோரியா அசரென்கா, சீனாவின் லீ நாவை சந்திக்கிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai