சுடச்சுட

  

  ரஞ்சி இறுதி ஆட்டம் இன்று தொடக்கம்: மும்பை-செளராஷ்டிரம் மோதல்

  By dn  |   Published on : 26th January 2013 06:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt4

  மும்பையில் சனிக்கிழமை தொடங்கும் ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை-செளராஷ்டிரம் அணிகள் மோதுகின்றன.

  ரஞ்சி கிரிக்கெட்டில் 39 முறை கோப்பையைக் கைப்பற்றிய பெருமைக்குரிய அணியான மும்பை, 40-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்போடு களமிறங்குகிறது. 75 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிச்சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ள செளராஷ்டிர அணியோ முதல் பட்டத்தை வெல்லும் கனவோடு களமிறங்குகிறது.

  பலம் வாய்ந்த மும்பை: மும்பை அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா, அஜிங்க்யா ரஹானே ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணிக்கு சென்றுவிட்டனர். மூத்த வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.

  எனினும் சச்சின் டெண்டுல்கர், கேப்டன் அஜித் அகர்கர், வாசிம் ஜாபர், அபிஷேக் நாயர், விக்கெட் கீப்பர் ஆதித்ய தாரே என பலம் வாய்ந்த வீரர்கள் அந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

  சச்சின் டெண்டுல்கர் நல்ல பார்மில் உள்ளார். இந்த சீசனில் தனது முதல் ரஞ்சி ஆட்டத்தில் சதமடித்த அவர், சர்வீசஸ் அணிக்கெதிரான அரையிறுதி ஆட்டத்தில் இக்கட்டான தருணத்தில் 56 ரன்கள் எடுத்து மும்பை அணி சரிவிலிருந்து மீள உதவினார். அபிஷேக் நாயர் இதுவரை 9 இன்னிங்ஸில் விளையாடி 3 சதம், 8 அரைசதம் உள்பட 940 ரன்கள் குவித்துள்ளார். ஆதித்ய தாரே 839 ரன்களும், வாசிம் ஜாபர் 703 ரன்களும் குவித்துள்ளனர்.

  அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரர்கள் விரைவாக வெளியேறியபோதும் கேப்டன் அஜித் அகர்கர்-ஆதித்ய தாரே இருவரும் சதமடித்து அணியை இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற வைத்தனர்.

  மிரட்டும் பெளலர்கள்: வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் கேப்டன் அஜித் அகர்கர், தவல் குல்கர்னி, ஜாவித் கான் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். ரமேஷ் பவார் காயம் காரணமாக விலகியுள்ளதால் ஆஃப் ஸ்பின்னர் யாரும் இல்லை.

  அதேநேரத்தில் லெக் ஸ்பின்னர்களான அங்கித் சவாண், விஷால் தபோல்கர் ஆகியோர் அந்த அணிக்கு நம்பிக்கையளிக்கின்றனர். அங்கித் சவாண் இந்த சீசனில் 9 ஆட்டங்களில் விளையாடி 33 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

  பஞ்சாபுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சவாண் 23 ரன்களை மட்டுமே கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

  ஜடேஜா, புஜாரா இல்லை: செளராஷ்டிரம் அணியைப் பொறுத்தவரையில் முன்னணி வீரர்களான ரவீந்திர ஜடேஜா, சேதேஷ்வர் புஜாரா ஆகியோர் இந்திய அணிக்காக விளையாட சென்றுவிட்டது அவர்களுக்குப் பெரும் பின்னடைவாகும்.

  எனினும் ஜாக்சன், ஆர்பிட் வசவதா, மூத்த வீரர் சிதன்ஷு கோடக், விக்கெட் கீப்பர் சாகர் ஜோகியானி, மக்வானா, கேப்டன் ஜெயதேவ் ஷா ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர்.

  வேகப்பந்து வீச்சில் ஜெயதேவ் உனட்கட், சித்தார்த் திரிவேதி ஆகியோரும், சுழற்பந்து வீச்சில் விஷால் ஜோஷி, கமலேஷ் மக்வானா ஆகியோரும் பலம் சேர்க்கின்றனர். பஞ்சாபுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் ஜோஷி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

  இறுதி ஆட்டத்தைப் பொறுத்தவரையில் மும்பை அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்றாலும், செளராஷ்டிர அணியை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் லீக் சுற்றில் பல்வேறு முன்னணி அணிகளுக்கு செளராஷ்டிர அணி அதிர்ச்சித் தோல்வியை அளித்துள்ளது.

  லீக் சுற்றில் இவ்விரு அணிகளும் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. எனினும் முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 606 ரன்கள் குவித்தபோதிலும், செளராஷ்டிர அணி 300 ரன்களுக்கு சுருண்டது.

  மும்பையும், ரஞ்சியும்... ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் இதற்கு முன்பு 43 முறை இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது மும்பை அணி. அதில் 39 முறை வெற்றி கண்டுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் 1991-ல் நடைபெற்ற ரஞ்சி கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் ஹரியாணாவிடம் தோற்றுள்ளது மும்பை. அதன்பிறகு வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 9 இறுதி ஆட்டங்களிலும் மும்பை அணியே வாகை சூடியுள்ளது.

  மைதானம் எப்படி? போட்டி நடைபெறவுள்ள மும்பை வான்கடே மைதானம் முதல் 3 நாள்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், கடைசி இரு நாள்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்கும் என்று வான்கடே மைதான பராமரிப்பாளர் சுதிர் நாயக் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai