Enable Javscript for better performance
கடைசி ஆட்டம்: இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்- Dinamani

சுடச்சுட

  
  spt4

  இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5-வது ஒருநாள் ஆட்டம் இமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

  இந்திய அணி ஏற்கெனவே தொடரை வென்றுவிட்டாலும், இந்த ஆட்டத்தை எளிதாக எடுத்துக்கொள்ளாது. 4-1 என்ற கணக்கில் தொடரை முடிக்கும் எண்ணத்தோடே களமிறங்கும். அதேநேரத்தில் இங்கிலாந்து அணி தொடரை இழந்துவிட்டாலும், கடைசி ஆட்டத்தில் வெற்றிபெற முயற்சிக்கும். எனினும் வட இந்தியாவில் இதுவரை நடைபெற்ற பெரும்பாலான ஆட்டங்களில் இங்கிலாந்து தோல்வி கண்டுள்ளது.

  தொடரை வென்றுவிட்டதால் இந்த ஆட்டத்தில் விளையாடவுள்ள இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கெüதம் கம்பீரும், ரோஹித் சர்மாவும் இந்தியாவின் இன்னிங்ûஸத் தொடங்குவார்கள் என்று தெரிகிறது. ஏற்கெனவே மூத்த வீரரான சேவாக் நீக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் கம்பீருக்கும் இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று தெரிகிறது.

  புஜாராவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? இதேபோல் யுவராஜ் சிங், அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வளித்துவிட்டு, சேதேஷ்வர் புஜாரா, அமித் மிஸ்ரா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் சனிக்கிழமை தொடங்கிய ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாட புஜாராவுக்கு பிசிசிஐ அனுமதியளிக்கவில்லை. இதனால் அவர் அறிமுக ஆட்டத்தில் விளையாட அதிக வாய்ப்புள்ளது.

  ரெய்னா, ரோஹித் சர்மா ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். இதேபோல் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் இந்திய அணிக்கு வலு சேர்க்கின்றனர். மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் புவனேஸ்வர் குமார் இந்த ஆட்டத்திலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சவாலாகத் திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமி அஹமது கடந்த ஆட்டத்தில் அதிக ரன்களைக் கொடுத்தார். அவர் சிறப்பாக பந்துவீசும் பட்சத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை ரன் குவிக்கவிடாமல் தடுக்க முடியும்.

  இஷாந்த் சர்மா, அணியில் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். உமேஷ் யாதவ் காயத்திலிருந்து மீண்டுவிட்டதால், அவர் விரைவில் அணிக்குத் திரும்பவுள்ளார். எனவே இந்த ஆட்டத்தில் இஷாந்த் சர்மா சிறப்பாக செயல்படாத பட்சத்தில் ஆஸ்திரேலியத் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழக்க நேரிடும்.

  கவலையளிக்கும் பந்துவீச்சு: இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் அலாஸ்டர் குக், கெவின் பீட்டர்சன், இயான் பெல், இயோன் மோர்கன், ஜோ ரூட் என பலம் வாய்ந்த பேட்டிங்கைக் கொண்டிருந்தாலும், அவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக ரன் குவிக்கத் தவறிவிடுகின்றனர்.

  அந்த அணியின் பந்துவீச்சு மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களில் ஸ்டீவன் ஃபின் மட்டுமே ஓரளவு சிறப்பாக பந்துவீசி வருகிறார். டெர்ன்பாச், பிரெஸ்னன் ஆகியோரின் பந்துவீச்சு எடுபடவில்லை. குறிப்பாக டெர்ன்பாச் அதிகளவில் ரன்களை வாரி வழங்கி வருகிறார்.

  இதனால் அந்த அணி பேட்டிங்கில் ஓரளவு ரன் குவித்தாலும், இந்திய பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வரும் இங்கிலாந்து அணி, ஒருநாள் போட்டியில் தனது தவறைக் கண்டுபிடித்து திருத்திக் கொள்ள வேண்டிய தருணமிது.

  மைதானம் எப்படி? தர்மசாலா கிரிக்கெட் மைதானம் இந்தியாவின் மிக அழகான மைதானம் ஆகும். பார்க்கும் இடமெல்லாம் பச்சைப்பசேல் என்று காட்சியளிக்கும் மலைப் பிரதேசத்தின் இதமான சூழலில் அமைந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் போன்ற உலகின் அழகு மிகுந்த மைதானங்களுக்கு இணையான சூழலைக் கொண்டது.

  பனி சூழ்ந்து காணப்படும் இந்த மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்றாலும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கே சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்த மைதானத்தில் 23 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்க முடியும். இங்கு நடைபெறும் 2-வது சர்வதேச போட்டி இது.

  முன்னதாக 2005-ல் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணி-பாகிஸ்தான் அணி ஆகியவை மோதியதே இங்கு நடைபெற்ற முதல் சர்வதேச போட்டி. 2010-ம் ஆண்டு முதல் இங்கு ஐபிஎல் போட்டி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

  அரைமணி நேரம் தாமதம்: முன்னதாக இந்த ஆட்டம் காலை 9 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

  ஆனால் தர்மசாலாவில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் அரைமணி நேரம் தாமதமாக காலை 9.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும் என்று பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  போட்டி நேரம்: காலை 9.30

  நேரடி ஒளிபரப்பு:

  ஸ்டார் கிரிக்கெட்,

  ஸ்டார் ஸ்போர்ட்ஸ், இ.எஸ்.பி.என்., தூர்தர்ஷன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai