சுடச்சுட

  

  நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது தென் ஆப்பிரிக்கா.

  முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

  தென் ஆப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரோமில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து, ஒரு கட்டத்தில் 30 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்திருந்தது.

  இதன்பிறகு எல்லியட் 54, மன்றோ 57, பிராங்க்ளின் ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் சேர்க்க, நியூஸிலாந்து 50 ஓவர்களில் 260 ரன்கள் சேர்த்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் சோட்சோபி, மெக்லாரன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

  தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி: பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் டிகாக் 31, இங்ரம் 25 ரன்களில் ஆட்டமிழந்தாலும், கிரீம் ஸ்மித் ஒருநாள் போட்டியில் தனது 10-வது சதத்தை நிறைவு செய்தார். அவர் 116 ரன்கள் எடுத்தார்.

  பிராங்க்ளின் வீசிய கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மெக்லாரன் சிக்ஸர் அடித்து வெற்றி தேடித்தந்தார். அவர் ஆட்டமிழக்காமல் 25 ரன்கள் எடுத்தார். நியூஸிலாந்து தரப்பில் மில்ஸ், பிராங்க்ளின், மெக்லீனாகென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஸ்மித் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

  இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றாலும், அது அவர்களுக்கு ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. முதல் இரு ஆட்டங்களில் வென்றிருந்த நியூஸிலாந்து 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai