சுடச்சுட

  
  spt3

  கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து.

  அந்த அணியின் இயான் பெல் ஆட்டமிழக்காமல் 113 ரன்கள் குவித்து வெற்றி தேடித்தந்தார்.

  முதலில் பேட் செய்த இந்தியா 49.4 ஓவர்களில் 226 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 47.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

  இந்தியா தடுமாற்றம்: கடும் பனிப்பொழிவு காரணமாக மைதானம் ஈரப்பதமாக இருந்ததால், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. அதை இங்கிலாந்து பெüலர்களும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

  இதனால் இந்திய அணியில் ரோஹித் சர்மா 4, கோலி 0, யுவராஜ் சிங் 0, கம்பீர் 24, தோனி 15 ரன்களில் வெளியேற 21.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் என்ற பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது.

  ரெய்னா 83: இதையடுத்து ஜோடி சேர்ந்த சுரேஷ் ரெய்னாவும், ரவீந்திர ஜடேஜாவும் அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினர். டிரெட்வெல், ஜோ ரூட் ஆகியோரின் ஓவர்களில் தலா ஒரு பிரமாண்ட சிக்ஸரை விளாசிய ரெய்னா 71 பந்துகளில் அரைசதம் கண்டார். இந்தத் தொடரில் அவர் அடித்த 4-வது அரைசதம் இது. ஒருநாள் போட்டியில் இது அவரின் 28-வது அரைசதமாகும்.

  இந்தியா 157 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. ஜடேஜா 65 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 98 பந்துகளைச் சந்தித்த ரெய்னா 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்தார். முன்னதாக அவர் 5 மற்றும் 61 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்ச்சை இங்கிலாந்து வீரர்கள் கோட்டைவிட்டனர்.

  அஸ்வின் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய புவனேஸ்வர் குமார் 30 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்தியா 226 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

  பெல் சதம்: 227 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் கேப்டன் குக் 22, பீட்டர்சன் 6 ரன்களில் ஆட்டமிழக்க, இயான் பெல்லுடன் இணைந்தார் ஜோ ரூட். இதனிடையே நிதானமாக ஆடிய பெல் 88 பந்துகளில் அரைசதம் கண்டார். ஜோ ரூட் 31 ரன்களில் ஆட்டமிழக்க, இயோன் மோர்கன் களம்புகுந்தார்.

  மறுமுனையில் சற்று வேகமாக ஆடிய இயான் பெல் 133 பந்துகளில் சதமடித்தார். ஒருநாள் போட்டியில் அவர் அடிக்கும் 3-வது சதம் இது. இதன்பிறகு மோர்கன் அதிரடியில் இறங்கினார். அஸ்வின் வீசிய 45-வது ஓவரில் ஒரு சிக்ஸரையும், சமி அஹமது வீசிய அடுத்த ஓவரில் இரு சிக்ஸர்களையும் விரட்டினார் மோர்கன்.

  இதனால் இங்கிலாந்து 47.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இயான் பெல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். சுரேஷ் ரெய்னா தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

  கடைசி ஆட்டத்தில் இந்தியா தோற்றாலும், முந்தைய 3 ஆட்டங்களிலும் வென்றிருந்ததால் 3-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.

  தரவரிசையில் முதலிடம்: இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக 117 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்த இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதன் மூலம் 119 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

  இங்கிலாந்து அணியும் 119 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், டெசிமல் புள்ளி அடிப்படையில் இந்தியாவைவிட பின்தங்கியுள்ளது. இதனால் அந்த அணி 2-வது இடத்தில் உள்ளது.

  போலி டிக்கெட்டுகள்: இந்த ஆட்டத்தைக் காண வந்த ரசிகர்களிடம் இருந்து 50 போலி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை ரூ.1,000 முதல் ரூ.5000 வரையிலான மதிப்புடைய டிக்கெட்டுகள் ஆகும்.

  ரெய்னா 4,000

  இந்த ஆட்டத்தில் 15 ரன்களை எடுத்தபோது ஒருநாள் போட்டியில் 4,000 ரன்களை எட்டினார் சுரேஷ் ரெய்னா. 159-வது ஒருநாள் போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இதுமட்டுமின்றி இங்கிலாந்துக்கு எதிராக 11-வது அரைசதத்தைப் பதிவு செய்துள்ளார் ரெய்னா. இங்கிலாந்துடன் 47 ஆட்டங்களில் விளையாடியுள்ள ரெய்னா இதுவரை 997 ரன்கள் எடுத்துள்ளார்.

   

  ஸ்கோர் போர்டு

  இந்தியா

  விக்கெட் வீழ்ச்சி: 1-13 (ரோஹித் சர்மா), 2-13 (விராட் கோலி),

  3-24 (யுவராஜ் சிங்), 4-49 (கம்பீர்), 5-79 (தோனி), 6-157 (ஜடேஜா), 7-177 (ரெய்னா), 8-211 (அஸ்வின்), 9-225 (புவனேஸ்வர் குமார்), 10-226 (சமி அஹமது).

  பந்து வீச்சு: ஸ்டீவன் ஃபின் 10-2-27-2, டிம் பிரெஸ்னன் 9.4-1-45-4, கிறிஸ் வோக்ஸ் 9-1-45-1, ஜேம்ஸ் டிரெட்வெல் 10-1-25-2,

  ஜோ ரூட் 5-0-34-0, சமித் படேல் 6-0-46-1.


  இங்கிலாந்து

  விக்கெட் வீழ்ச்சி: 1-53 (குக்), 2-64 (பீட்டர்சன்), 3-143 (ஜோ ரூட்).

  பந்து வீச்சு: புவனேஸ்வர் குமார் 9-1-45-0, சமி அஹமது 9-1-46-1, இஷாந்த் சர்மா 10-3-37-1, அஸ்வின் 10-0-50-0,

  யுவராஜ் சிங் 2-0-15-0, ஜடேஜா 7.2-0-26-1.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai