சுடச்சுட

    

    தென்னிந்திய அளவிலான வாலிபால் போட்டி பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை (ஜன. 31) தொடங்குகிறது.

    இது தொடர்பாக நெல்லை ஃபிரண்ட்ஸ் வாலிபால் அகாதெமி தலைவர் டி.டி. ரமேஷ் ராஜா, திருநெல்வேலியில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

    நெல்லை ஃபிரண்ட்ஸ் வாலிபால் அகாதெமி சார்பில் தென்னிந்திய அளவிலான வாலிபோல் போட்டி வியாழக்கிழமை தொடங்கி பிப். 3 வரை நடைபெறுகிறது.

    போட்டிகள் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் மின்னொளியில் நடைபெறும். போட்டியை பொதுமக்கள் கண்டுகளிக்க வசதியாக கேலரிகள் அமைக்கப்படுகின்றன.

    ஆடவர் பிரிவில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், சென்னை பனிமலர் பொறியியல் கல்லூரி, தமிழ்நாடு காவல் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கொச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி, திருநெல்வேலி சாரா வாலிபால் கழகம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

    மகளிர் பிரிவில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, பனிமலர் பொறியியல் கல்லூரி, திருச்சூர் செயின்ட் ஜோசப் கல்லூரி, கோட்டயம் அல்போன்ஸா கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி, சென்னை வைஷ்ணவ கல்லூரி, பெங்களூரு ஜெயின் கல்லூரி ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு சாரா கோப்பையும், மகளிர் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு மயன் கோப்பையும் வழங்கப்படும். மேலும், ஆடவர்  பிரிவில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ. 20 ஆயிரம், 2-ம் இடம் பெறும் அணிக்கு ரூ. 15 ஆயிரம், 3-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 10 ஆயிரம், 4-ம் இடம் பெறும் அணிக்கு ரூ. 8 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும்.

    மகளிர் பிரிவில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ. 15 ஆயிரம், 2-ம் இடம் பெறும் அணிக்கு ரூ. 12 ஆயிரம், 3-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 10 ஆயிரம், 4-ம் இடம் பெறும் அணிக்கு ரூ. 8 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும். சிறந்த வீரர்களுக்கு தனித்தனியாக பரிசு வழங்கப்படும்.

    வியாழக்கிழமை மாலையில் தொடங்கும் இந்தப் போட்டியை திருநெல்வேலி மாநகராட்சி மேயர் விஜிலா சத்தியானந்த், காவல் துறை துணை ஆணையர் ராஜராஜன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். மாவட்ட ஊராட்சித் தலைவர் நாராயண பெருமாள் தலைமை வகிக்கிறார். 3-ம் தேதி நடைபெறும் பரிசளிப்பு விழாவில் எஸ்.எஸ். ராமசுப்பு எம்.பி. பங்கேற்று பரிசுகளை வழங்குகிறார். சர்வதேச வாலிபால் வீரர் நடராஜன், மாவட்ட வாலிபால் கழகத் தலைவர் மேகலிங்கம் பங்கேற்கின்றனர் என்றார்.

    அகாதெமி செயலர் பாஸ்கர், துணைத் தலைவர் ஆர். முரளீதரன், சி.முத்துக்குட்டிப்பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai