உலக சாம்பியன்ஷிப்பை நோக்கி ஓடுகிறேன்!
By ஏ.வி.பெருமாள் | Published on : 01st July 2013 12:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

4x100 மீ. தொடர் ஓட்டத்தில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறேன் என்கிறார் தமிழக வீரர் விஜயகுமார்.
புணேவில் நடைபெறவுள்ள 20-வது ஆசிய தடகள விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களில் விஜயகுமாரும் ஒருவர். இவர் ஆடவர் 100 மீ. ஓட்டம், 4ஷ்100 மீ. ஓட்டம் என இரு பிரிவுகளில் பங்கேற்கிறார்.
சென்னை போரூரைச் சேர்ந்தவரான விஜயகுமார், மத்திய உற்பத்தி வரித் துறையில் பணிபுரிந்து வருகிறார். பெங்களூரில் உள்ள இந்திய அணியின் பயிற்சி முகாமில் தீவிர பயிற்சியை முடித்துவிட்டு ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்பதற்காக புணே சென்றுள்ள விஜயகுமார் கூறியதாவது:
100 மீ. ஓட்டத்தில் பதக்கம் வெல்வதில் கடும் போட்டி இருக்கும். 100 மீ. ஓட்டத்தில் என்னுடைய "பெஸ்ட் டைமிங்' 10.60 விநாடிகள் ஆகும். ஆசிய தடகளப் போட்டியில் 10.50 அல்லது 10.40 விநாடிகளுக்குள் வரவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து பயிற்சி பெற்று வருகிறேன்.
நிச்சயம் அந்த நேரத்துக்குள் இலக்கை அடைந்துவிடுவேன். 10.30 விநாடிகளுக்குள் இலக்கை எட்டியதுதான் இந்தியாவில் தேசிய சாதனையாக உள்ளது. அந்த நேரத்தை எட்டும்பட்சத்தில் தங்கப் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது. 4ஷ்100 மீ. தொடர் ஓட்டத்தில் இந்த முறை தங்கப் பதக்கம் வெல்ல நல்ல வாய்ப்புள்ளது. தொடர் ஓட்டத்தில் பங்கேற்கும் இந்திய அணியில் நான் (விஜயகுமார்), மணிகண்ட ராஜு, கிருஷ்ணகுமார் ராணே, சமீர் மோன் ஆகியோர் இடம்பெற்றுள்ளோம்.
கடந்த ஒரு மாதமாக நாங்கள் 4 பேரும் இணைந்து 39.20 விநாடிகளை (உலக தடகளப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான நேரம்) இலக்காகக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறோம். தற்போதைய நிலையில் 39.70 விநாடிகளில் இலக்கை எட்டியிருக்கிறோம்.
இன்னும் முழுவீச்சில் செயல்படும்பட்சத்தில் 39.20 விநாடிகளுக்குள் பந்தய தூரத்தைக் கடந்துவிடுவோம். எனவே இந்த முறை 4ஷ்100 மீ. தொடர் ஓட்டத்தில் தங்கம் வெல்வதோடு, ரஷியாவில் நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற ஆசிய கிராண்ட்ப்ரீ தடகளப் போட்டியின்போது சரியான அணி அமையாததால் 4ஷ்100 மீ. தொடர் ஓட்டத்தில் பதக்கம் வெல்ல முடியாமல் போனது. ஆனால் இந்த முறை சரியான அணி அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
வென்ற பதக்கங்கள்: சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான தடகளப் போட்டி, கடந்த ஆண்டு நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான போட்டி ஆகியவற்றில் 100 மீ. ஓட்டத்தில் வெள்ளி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
2008-ல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழங்களுக்கு இடையிலான 100 மீ. ஓட்டத்தில் சென்னை பல்கலைக்கழகம் சார்பில் பங்கேற்ற இவர், 10.60 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இந்த 10.60 விநாடிகள்தான் இன்றளவும் தேசிய பல்கலைக்கழக சாதனையாக உள்ளது.
4ஷ்100 மீ. தொடர் ஓட்டத்தில் கடந்த ஆண்டு ஹைதராபாதில் நடைபெற்ற மாநிலங்கள் இடையிலான தடகளப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். ஆனால் அதில் 0.3 மைக்ரோ விநாடிகளில் தேசிய சாதனை வாய்ப்பை இழந்தது விஜயகுமார் இடம்பெற்றிருந்த தமிழக அணி.
பஞ்சாபின் பாட்டியாலாவில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை, சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான தடகளப் போட்டி ஆகியவற்றில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார்.
இதேபோல் மாநில அளவிலான போட்டிகளிலும் கணிசமான பதக்கங்களை குவித்துள்ளார். இந்தியாவின் பல்வேறு நகரங்கள், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் கொண்டவர்.
ஆசிய தடகளப் போட்டி நடைபெறவுள்ள புணே மைதானத்தில் உற்பத்தி வரித் துறை அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்ற அனுபவம் கொண்டவர்.
இந்த முறை 4ஷ்100 மீ. தொடர் ஓட்டத்தில் தங்கம் வெல்வதோடு, ரஷியாவில் நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.