Enable Javscript for better performance
20-வது ஆசிய தடகளப் போட்டி புணேவில் இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    
    asia

    இருபதாவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி மகாராஷ்டிர மாநிலம் புணேவில் புதன்கிழமை தொடங்குகிறது.

    புணேவின் பாலேவாடியில் உள்ள ஸ்ரீசிவ சத்ரபதி விளையாட்டு மைதானத்தில் 5 நாள்கள் நடைபெறும் இப்போட்டி வரும் 7-ம் தேதி நிறைவடைகிறது.

    ஆசிய தடகள சங்கத்தில் மொத்தம் 45 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. போட்டியை நடத்தும் இந்தியா, சீனா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 43 நாடுகளைச் சேர்ந்த 477 வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். இதுதான் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அதிக வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டியாகும்.

    உலக சாம்பியன்ஷிப் தகுதி: இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் தங்கப் பதக்கம் வெல்பவர்கள் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வரும் ஆகஸ்டில் நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு நேரடித் தகுதி பெறுவார்கள்.

    முன்னாள் உலகச் சாம்பியனும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான பஹ்ரைனின் மரியம் ஜமால் (1,500 மீ. ஓட்டம்) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

    இந்தியத் தரப்பில் விகாஸ் கெüடா (வட்டு எறிதல்), சுதா சிங் (மகளிர் 3000 மீ. ஸ்டீபிள் சேஸ்), பூவம்மா (மகளிர் 400 மீ. ஓட்டம்), கிருஷ்ணா பூனியா (மகளிர் வட்டு எறிதல்), மயூகா ஜானி (மகளிர் நீளம் தாண்டுதல், மும்முறைத் தாண்டுதல்), அரவிந்தர் சிங் (ஆடவர் மும்முறைத் தாண்டுதல்) ஆகியோர் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.

    தமிழக வீரர்கள்: தமிழகத்தின் பிரேம் குமார் (ஆடவர் நீளம் தாண்டுதல்), ரஞ்சித் மகேஷ்வரி (ஆடவர் மும்முறைத் தாண்டுதல்), ஆரோக்கிய ராஜீவ் (ஆடவர் 400 மீ. ஓட்டம்), காயத்ரி (மகளிர் 100 மீ. தடை தாண்டுதல்), லட்சுமணன் (ஆடவர் 5000 மீ., 10000 மீ. ஓட்டங்கள்) ஆகியோரும் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.

    பூவம்மா: தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள இந்திய வீராங்கனைகளில் பூவம்மாவும் ஒருவர். கர்நாடகத்தைச் சேர்ந்த பூவம்மா, 400 மீ. ஓட்டத்தில் பங்கேற்கிறார்.

    இவர் கடந்த மே மாதம் தாய்லாந்து மற்றும் இலங்கையில் நடைபெற்ற ஆசிய கிராண்ட்ப்ரீ போட்டிகளில் 3 தங்கம் வென்றுள்ளார். இந்த சீசனில் 52.75 விநாடிகளில் இலக்கை எட்டியதே பூவம்மாவின் சிறந்த ஓட்டமாகும்.

    ஜப்பான் வீராங்கனை ஹருகா சுஜியுரா இந்த முறை பங்கேற்கவில்லை. அதுவும் பூவம்மாவின் தங்கப் பதக்க வாய்ப்பை அதிகரித்துள்ளது. சீனாவின் ஸôவோ யான்மின், இலங்கையின் சந்திரிகா ரஸ்நாயகா ஆகியோர் தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் பூவம்மாவுக்கு சவாலாக இருப்பார்கள் என்று தெரிகிறது.

    பிரேம் குமார்: ஆடவர் நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் பிரேம் குமாருக்கு தங்கப் பதக்கம் வெல்ல நல்ல வாய்ப்புள்ளது. சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் பிரேம் குமார் 8 மீ. தூரம் தாண்டி புதிய சாதனை படைத்தார். பிரேம் குமார், 8 மீ. தூரம் தாண்டிய 4-வது இந்தியர் ஆவார். பிரேம் குமாருக்கு ஒரே போட்டியாளராகக் கருதப்படுபவர் கஜகஸ்தானின் கான்ஸ்டான்டின் சஃப்ரோனோவ்தான். அவரின் சிறந்த தூரம் 8.10 மீ. ஆகும்.

    ரஞ்சித் மகேஷ்வரி: தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள மற்றொரு தமிழக வீரர் ரஞ்சித் மகேஷ்வரி. இவர், சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் 16.98 மீ. தூரம் தாண்டி தங்கம் வென்றார். அதன்மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதி பெற்றார். ஆசிய தடகளப் போட்டியில் கஜகஸ்தானின் ராமன் வாலியேவ், ரஞ்சித்துக்கு சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எனினும் ரஞ்சித் மகேஷ்வரி பெரிய போட்டிகளில் எப்போதுமே சாதித்ததில்லை என்ற குறை உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் போட்டியில் அனைத்து வாய்ப்புகளிலும் ரஞ்சித் தவறு (ஃபவுல்) செய்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தவிர தின்டு லூக்கா (மகளிர் 800 மீ. ஓட்டம்), கிருஷ்ணா பூனியா ஆகியோர் தங்களின் முழுத் திறமையையும் வெளிப்படுத்தும் பட்சத்தில் தங்கப் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.

    இந்தியாவின் பதக்க வாய்ப்பு எப்படி?

    ஆசிய தடகளப் போட்டி, இந்தியாவில் 2-வது முறையாக நடைபெறுகிறது. முன்னதாக 1989-ல் தில்லியில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்தியா 8 தங்கம், 9 வெள்ளி, 5 வெண்கலம் என 22 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்தது.

    அதன்பிறகு இப்போது புணேவில் நடைபெறுகிறது. இந்த முறை பதக்கப் பட்டியலில் 2 அல்லது 3-வது இடத்தைப் பிடிக்கும் எண்ணத்தோடு இந்தியா களமிறங்குகிறது. இந்திய வீரர், வீராங்கனைகள் 5 தங்கம் உள்பட 15 பதக்கங்கள் வரை வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் இருந்து 107 பேர்: ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் தலா 21 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் இந்தியாவில் இருந்து மொத்தம் 107 பேர் பங்கேற்கிறார்கள். தமிழக வீரர், வீராங்கனைகள் 15 பேர் பங்கேற்கிறார்கள்.

    சீனாவின் ஆதிக்கம்...

    முதல் நான்கு ஆசிய தடகளப் போட்டிகளில் (1973, 1975, 1979, 1981) பதக்கப் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தைப் பிடித்தது. 1983-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் முதல்முறையாக முதலிடத்தைப் பிடித்த சீனா, அதன்பிறகு நடைபெற்ற 14 போட்டிகளிலும் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்தது. எனவே இந்த முறையும் அந்த அணியே பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அந்த அணியில் முன்னணி வீரர்கள் சிலர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சித்தார்த் விலகல்: பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள இந்திய வீரர்களில் ஒருவராகக் கருதப்பட்ட இந்தியாவின் சித்தார்த் திங்கலாயா (ஆடவர் 110 மீ. தடை தாண்டுதல் ஓட்டம்), சில தினங்களுக்கு முன்பு போட்டியிலிருந்து விலகினார். கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்றவரான சித்தார்த்தின் விலகல், இந்திய அணியின் பதக்க வாய்ப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 110 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் தேசிய சாதûனையும் (13.65 விநாடிகள்) சித்தார்த் வசமே உள்ளது.

    பார்ஷிம் விலகல்: ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவரும், முன்னணி உயரம் தாண்டுதல் வீரருமான கத்தாரின் முதாஸ் பார்ஷிம் ஆசிய தடகளப் போட்டியிலிருந்து விலகியுள்ளார். அவர் காயம் காரணமாக விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    என்னென்ன போட்டிகள்?

    ஆடவர் பிரிவு: 100 மீ. ஓட்டம், 4*100 மீ. தொடர் ஓட்டம், 200 மீ. ஓட்டம், 400 மீ. ஓட்டம், 4*400 மீ. தொடர் ஓட்டம், 400 மீ. தடை தாண்டுதல் ஓட்டம், 800 மீ. ஓட்டம், 1,500 மீ. ஓட்டம், 5,000 மீ. ஓட்டம், 10,000 மீ. ஓட்டம், 3000 மீ. ஸ்டீபிள் சேஸ், 110 மீ. தடை தாண்டுதல் ஓட்டம், உயரம் தாண்டுதல், கம்பு ஊன்றித் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறைத் தாண்டுதல், டெகத்லான், வட்டு எறிதல், சங்கிலிக் குண்டு எறிதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல்.

    மகளிர் பிரிவு: மகளிர் பிரிவைப் பொறுத்தவரையில் ஆடவர் பிரிவில் இடம்பெற்றுள்ள இரு விளையாட்டுகள் மாறுபட்டுள்ளன. ஆடவர் பிரிவில் உள்ள டெகத்லான், 110 மீ. தடை தாண்டுதல் ஓட்டங்களுக்குப் பதிலாக ஹெப்டத்லான் மற்றும் 100 மீ. தடை தாண்டுதல் ஓட்டங்கள் மகளிர் பிரிவில் இடம்பெற்றுள்ளன.

     

    தங்கம் வெல்வாரா கெளடா?

    ஆடவர் வட்டு எறிதலைப் பொறுத்தவரையில் லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவரான ஈரானின் இஷான் ஹடாடி, இப்போட்டியில் பங்கேற்கவில்லை. அதனால் விகாஸ் கெüடா தங்கம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது. இந்த சீசனில் ஆசிய அளவில் கெüடா 65.82 மீ. தூரம் குண்டு எறிந்தது இரண்டாவது சிறந்த தூரமாக உள்ளது. முதல் சிறந்த தூரம் (66.98 மீ.) போட்டியில் இருந்து விலகிய இஷான் வசமுள்ளது.

     

     

    13 நடப்புச் சாம்பியன்கள்

    கடந்த முறை ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற 13 பேர், இந்த முறையும் பங்கேற்கின்றனர். அவர்களின் விவரம்:

    ஆடவர் பிரிவு

    100 மீ. ஓட்டம் - சூ பிங்டியான் (சீனா)

    400 மீ. ஓட்டம் - யூசுப் அல்-மஸ்ராஹி (சவூதி அரேபியா)

    800 மீ. & 1,500 மீ. ஓட்டம்-முகமது அல்-அஸிமி (குவைத்)

    5000 மீ. ஓட்டம் - டீஜீன் ரெகாஸô (பஹ்ரைன்)

    குண்டு எறிதல்-சாங் மிங் ஹுயாங் (சீனதைபே)

    டெகத்லான் - ஹாடி செபர்ஸôத் (ஈரான்)

    மகளிர் பிரிவு

    100 மீ. & 200 மீ. ஓட்டம் - குஜல் குப்பீவா (உஸ்பெகிஸ்தான்)

    1,500 மீ. ஓட்டம் - ஜென்ùஸப் சூமி (பஹ்ரைன், இந்த முறை 800 மீ. ஓட்டத்தில் பங்கேற்கிறார்.)

    5000 மீ. ஓட்டம் - தீஜிது தாபா (பஹ்ரைன்)

    10000 மீ. ஓட்டம் - ஷிதாயே இஷ்தே (பஹ்ரைன்)

    400 மீ. தடை தாண்டுதல் ஓட்டம்-

    சடோமி குபோகுரா (ஜப்பான்)

    நீளம் தாண்டுதல் - மயூகா ஜானி (இந்தியா)

    ஹெப்டத்லான்-வாஸôனீ வினாதோ (தாய்லாந்து).

     

    சாதிப்பாரா சுதா சிங்?

    மகளிர் 3000 மீ. ஸ்டீபிள் சேஸில் கடந்த முறை தங்கம் வென்ற ஜப்பானின் மினோரி ஹயாக்கரி பங்கேற்கவில்லை. அதனால் இந்த முறை இந்தியாவின் சுதா சிங், கடந்த முறை வெள்ளி வென்ற பஹ்ரைனின் ருத் செபட் இடையே தங்கப் பதக்கம் வெல்வதில் கடும் போட்டி நிலவும்.

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற சுதா சிங், கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் 9 நிமிடம், 45 விநாடிகள், 60 மைக்ரோ விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றதோடு, தேசிய சாதனையையும் முறியடித்தார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுவரை இந்தியா...

    1979-ம் ஆண்டில் (முதல் போட்டி) இருந்தே ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்று வரும் இந்தியா, 1980-களில் சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்து வந்துள்ளது. கடந்த 19 போட்டிகளில் 6 முறை (1973, 1975, 1985, 1989, 2000, 2007 ஆகிய ஆண்டுகளில்) இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

    1985-ல் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா 10 தங்கம் உள்பட 22 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் சீனாவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தைப் பிடித்தது. அதுதான் ஆசிய தடகளத்தில் இன்றளவும் இந்தியாவின் சிறந்த போட்டியாக உள்ளது.

    அந்தப் போட்டியில் இந்தியாவின் தங்க மங்கை என்றழைக்கப்படும் பி.டி.உஷா, 100 மீ., 200 மீ., 400 மீ. ஓட்டங்கள், 400 மீ. தடை தாண்டுதல் ஓட்டம், 4*400 மீ. தொடர் ஓட்டம் என மொத்தம் 5 தங்கப் பதக்கங்களை

    வென்று சாதனை படைத்தார்.

    2003-ல் மணீலாவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா ஒரு தங்கம்கூட வெல்லவில்லை. 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களுடன் புள்ளிகள் பட்டியலில் 14-வது இடத்தைப் பிடித்தது. இந்தியாவின் மிக மோசமான போட்டியாக அந்தப் போட்டி அமைந்தது.

    கடைசியாக இரு போட்டிகளில் (2009, 2011) இந்தியாவுக்கு தலா ஒரு தங்கப் பதக்கம் மட்டுமே கிடைத்தது. 2009-ல் ஒரு தங்கம் உள்பட 12 பதக்கங்களை வென்ற இந்தியா 6-வது இடத்தைப் பிடித்தது. 2011-ல் ஒரு தங்கம் உள்பட 12 பதக்கங்களை வென்ற இந்தியா 7-வது இடத்தைப் பிடித்தது. 2009-ல் ஓம்பிரகாஷ் சிங்கும் (வட்டு எறிதல்), 2011-ல் மயூகா ஜானியும் (மகளிர் நீளம் தாண்டுதல்) இந்தியாவின் சார்பில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai